முஸ்லிம் சமூகமே, உனக்கோர் திறந்த மடல்
அஸ்ஸலாமு அலைக்கும்.
பத்தோடு பதினொன்றாய் இதையும் நீ தாண்டிச்செல்வாய் என்றால் முதலிலே சொல்லி விடுகிறேன், தயவு செய்து உன் பொன்னான நேரத்தை ஒதுக்கி இதில் உன் பங்கை வாசித்து விடு. உனக்கென்று எழுதப்பட்டதை நீ வாசிக்காவிட்டால் வேறு யார் பார்ப்பது?
'சமூகமே' என்று விளிக்கும் போதே முகத்தை சுளித்துக் கொள்ளாதே. அந்த சமூகத்தின் உயர்ந்த அங்கத்தவர்கள் தான் நானும் நீயும். எனவே இதுவும் எனக்கும் உனக்கானதுமே.
உனக்குத் தெரியும் கடந்த இரு வாரங்களாக எம் சமூகத்தின் தலையெழுத்து மாற்றப்பட்டிருப்பது. மட்டுமா? இந்த நாட்டின் தலையெழுத்தே மாறிவிட்டது..
ஏகப்பட்ட குடும்பங்கள் ஒரே நாளில் தம் அன்பிற்கினிய உறவுகளை நிரந்தரமாகவே இழந்தன! இன்னும் பலர் வைத்தியசாலைகளில் உயிரோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்! எத்தனையோ வீடுகள் திறக்கப் பூட்டிருந்தும், எஐமானர்களில்லாமல் பாழடைந்து கிடக்கின்றன... தம் மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வணக்கஸ்தலங்கள் இல்லாமல் பலர் மன வேதனையோடு நாட்களை நகர்த்துகிறார்கள்.
அதுமட்டுமல்லாது நம் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலையை நினைத்து நெஞ்சங்கள் சஞ்சலப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எமக்கு யாரும் கை தர மாட்டார்களா???, ஆறுதல் கூற மாட்டார்களா???, சரியான வழிகளை காட்ட மாட்டார்களா??? என்றே ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அழகாயும், அன்பாயும், பரிவுடனும், பாசத்துடனும் ஒன்றாய் கூடி வாழ்ந்த எம்மை கூறு போட எத்தணிக்கின்ற சதிகளுக்கும், குற்றமே செய்யாத நிரபராதிகளான நாம் குற்றவாளிகளாய் சித்தரிக்கப்படும் குற்றவுணர்ச்சிக்கும், சகோதர இனத்தவரின் குரோத, வெறுப்புப் பார்வைகளுக்கும் அஞ்சிய ஒரு சமூகமாக நாம் மாற்றப்பட்டுள்ளோம். நம் அச்சத்திற்கான காரணங்கள் என்னவோ யதார்த்தமானவைத்தான் ஆனாலும் அச்சத்தினாலே அவற்றின் உண்மைத்தன்மைகளை உணராது வாழ்வதற்கு நாங்கள் கோழைகளுமில்லை.
எது எப்படியோ ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்த அட்டூழியம் நிகழ்த்தப்பட்டது எம் சமூகத்தை வைத்து அடையாளப்படுத்திக் கொண்டவர்களால் என்பது கசப்பான ஓர் உண்மை. அதனால் எம் ஒட்டுமொத்த சமூகமும் அவர்களாகிவிடாது. இதனை மனதில் வைத்துக் கொண்டு...
உன்னோடு சில விடயங்களை மனம் விட்டு பேசுகிறேன்.
நடந்து முடிந்த அனர்த்தம் விட்டுச்சென்ற பயங்கரமானதொரு செய்தி தான் இனி இந்த நாட்டில் எம் சமூகத்தின் எதிர்காலம் எந்த விதத்திலும் எமக்கு உவப்பாக அமையப் போவதில்லை என்பது...
ஏலவே அதன் பக்கவிளைவுகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம்.
'இந்த நிலமைக்கு ஒரு விமோசனம் கிட்டாதா?'
“இப்படியே போனால் எங்கு சென்று முடியும்?”
இப்படியாக நம் ஒவ்வொருவரது மனமும் தணலில் உழன்றுகொண்டே இருக்கிறது. மானசீகமாக நீயும் நானும் நிறையவே பாதிக்கபட்டிருக்கிறோம். இத்தனைக்குள்ளும் உனக்குத் தெரியுமா ஒரு சுப செய்தி?
"அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவுக்கும் அதன் சக்திக்கு மேல் சிரமம் கொடுப்பதில்லை" (சூறா பகரா:286)
ஆம், தாங்க முடியாத சோதனைகள், தீர்வுகள் இல்லாத பிரச்சினைகள் என்றும் எம்மை அண்டாது என்ற உறுதியுடன் இறையடி நாடுவோம். நம் உள்ளங்களில் தொற்றிக் கொண்டுள்ள அச்சங்களை போக்க அல்லாஹ்வின் மீது அசராத நம்பிக்கை கொள்ளுவோம். நம்பிக்கை கொண்டால் காரியம் முடிந்து விட்டதா?
நம்மில் சிலரது அசட்டு தனமான அலட்சியப் போக்குகளின் காரணங்களால் நம் சமூகமே தலைக் குனிய வேண்டுமா?
வேண்டாம். எம்மால் எம் சமூகம் தலை நிமிரா விட்டாலும் பரவாயில்லை, தலை குனியாமல் காத்துக் கொள்வதும் நாம் எம் சமூகத்துக்கு செய்யும் பேருதவியாகும்.
முஸ்லிம் என்ற நாமம் தாங்கி நாளாந்த நம் வாழ்க்கையை கொண்டு போகும் நிலை கூட இன்று கேள்விக்குறிதான். நாளைய நாட்டின் விடியல் எம்மை பார்க்காமலே விடிந்து விடுமோ என்ற பயம் நம்மில் துளிர்விட்டுத்தான் இருக்கின்றது.
அல்லாஹ்வின் நாமம் நம் தாய்நாட்டில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என நாம் எதிர்ப்பார்த்தால் சில, பல தருணங்களில் நெகிழ்வுத் தன்மையுடனே நடந்து கொள்ள வேண்டும்.
எம் உரிமைகள் பரிபோகின்றதே? இதனை நாம் பார்த்துக் கொண்டு மௌனமாய் இருக்க வேண்டுமோ?
நம்மில் பலர் ஆசுவாசப்படலாம் ஆனால் யாதார்த்தம் அவ்வாறல்ல எமது அடிப்படையில் கை வைக்காவரைக்கும் விட்டுக்கொடுப்பதினால் நாம் தோற்றுப்போவதில்லை.
அந்தக் காரணத்தினால் இறைவன் எம்மை குற்றவாளிகளாக்கப் போவதுமில்லை.
ஆகவே எண்ணங்களில் தூய்மையானவர்களாயிருந்தால் எம்மைப் பொருந்திக் கொள்ள எம் இறைவன் போதுமானவன்.
என்ன? இன்று இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெறுக்கடிக்கு இன்னும் எண்ணெய் வார்க்கும் சில விடயங்களை நானும் நீயும் இந்த அழகிய மார்க்கத்தின் பெயரால் செய்து கொண்டிருந்தால், பிழை நம் பக்கமா? மார்க்கத்தின் பக்கமா?
ஆம் நம் பக்கம் தான். அப்படி நாம் வெளிப்படையாக செய்து கொண்டிருக்கின்ற சில விடயங்களை நாம் விட்டுவிடுவதென்பது மார்க்கத்தை புறந்தள்ளியதாகி விடாது!!!
மாறாக இந்த நாட்டு நடப்பை கருத்தில் கொண்டு ஞானத்தோடு முடிவெடுத்த ஒரு பொறுப்புள்ள பிரஜையாக, நுண் அறிவுள்ள அல்லாஹ்வின் அடியானாக ஆகுவோம்,
இறுதியாய்....
நானும் நீயும் இறை அருளால் புனித ரமழான் மாதத்தை அடைந்திருக்கிறோம். ரமழானின் ஏகப்பட்ட அதிஷ்ட்டங்களில் ஒன்று தான் நாம் ஒரு விடயத்தை வாழ்வில் நல்லதொரு நோக்கத்தில் மாற்றிக் கொள்ள தீர்மானித்தால் ரமழான் தான் அந்த மாற்றத்தினை நிகழ்த்துவதற்கு மிகச் சிறந்த நேரம்! ஏன் என்பதெல்லாம் நான் சொல்லி நீ அறிய வேண்டியதில்லை.
எனவே இந்த மாதத்தில் நீ நிறைவேற்றும் அத்தனை மேலதிக அமல்களோடும் இந்த நாட்டின் விடிவுக்காயும் அதிகம் அதிகம் பிரார்த்தி. ஆனால் பிரார்த்தித்து மட்டும் போதாது.
ஒரு சகோதர சமுகம் தனது வணக்கஸ்தலங்களில் காலெடுத்து வைக்க பயந்து கொண்டிருக்கும் இந்நாட்களில் எமது ரமழான் மட்டும் குதூகலாமாய் வழமை போல் அமைவது நியாயம் இல்லை. ஆடம்பர இப்தார்கள், அளவுக்கதிமாக பள்ளிகளில் கூடி இருத்தல், பாதைகளில் கழியும் எம் நேரங்கள், இவை எல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் என்றைக்கும் நல்லதே. இது மனிதாபிமானம் உள்ள ஒவ்வொரு ஆத்மாவினதும் உள்ளம் அறிந்த விடயம்.
அத்தோடு நாம் மட்டும் கடை கடையாக ஏறி பெருநாளைக்கு புத்தாடை வாங்கி, பெருநாள் கொண்டாட தாயாரவது இம்முறை சற்று குறைத்துகொள்வோமா? முடியுமானால் மேலதிக செலவுகளை குறைத்து சதக்காகளை அதிகப்படுத்திட நல்ல தருணமிது.
“ஒரு சமூகம் தங்களை தாங்களே மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அச் சமூகத்தை மாற்றப் போவதில்லை"
(சூறா அர்ரஃது:11) என்று அல்லாஹ் வாக்குறுதி அளித்துள்ளான். மனமுடைந்து போய், இனி ஒன்றும் செய்து பயனில்லை என்று யாரும் சஞ்சலபடத்தேவை இல்லை. எம் நிலைமைகளை நாம் மாற்றிக்கொள்ள தாயாரான காலமெல்லாம் அல்லாஹ் எம்மோடு இருக்கிறான் இன்ஷா அல்லாஹ். இந்த வசனமே நானும் நீயும் மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்த்துகிறது.
தயவு செய்து வாசித்து விட்டு சும்மா கடந்துசெல்லாதே. வாசித்தவற்றை ஒரு முறை யோசித்துப் பார்...
நீயோ நானோ மாறாமல் என் சமூகத்திற்கு விமோசனம் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திவிட்டு விடைபெறுகிறேன்.
- உன்னில் ஒருவன்
*மடல்கள் தொடரும் இன்ஷா அல்லாஹ்...
மனங்கள் திறக்குமா?
மாற்றங்கள் பிறக்குமா?*
This article is an Eye open for everyone. My family already decide to not buy new cloths for Ramazan and have another plan for that money. Please keep writing
ReplyDeleteஒரு சமூகம் சட்டத்தின் இரும்புக் கரங்களால் ஒழுங்கு படுத்தப்படுகிறது. எல்லாம் நலவுக்குத்தான்.
ReplyDelete