தேர்தல் நடத்துவதற்கு, இன்றைய சூழல் தடையல்ல
அரசாங்கம் அனுமதியளிக்கும் பட்சத்தில் எந்தத் தேர்தலையும் நடத்துவதற்குத் தேர்தல்கள் செயலகம் தயாராக உள்ளதென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
எந்தக் காரணங்களுக்காகவும் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாதென்று தெரிவித்த அவர், அவ்வாறு தேர்தலை நடத்தாதிருப்பதற்கான சூழல் நாட்டில் கிடையாதென்றும் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து தேர்தலை எப்படி நடத்துவது என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால், நாட்டில் நிலவிய கிளர்ச்சியின்போதும் புலிகள் காலத்தில் நிலவிய யுத்தச் சூழ்நிலையிலும்கூடத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கூடக் கொத்தணி வாக்குச் சாவடிகளை அமைத்துத் தேர்தல் நடத்தப்பட்டிருக்கின்றது.
எனவே, தற்போதைய சூழல் தேர்தல் நடத்துவதற்கு எந்த விதத்திலும் தடையானது அல்லவென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஏனெனில், மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து நீண்டகாலமாகிவிட்டது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஒக்ேடாபர் மாதமே அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் தேசப்பிரிய, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சூழல் இருக்குமென்றால், ஏன் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது என்றும் கேள்வி எழுப்பினார்.
உரிய காலத்தில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்துகொள்வதற்கு அவர்களுக்குள்ள உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், இதுதொடர்பில் கடந்த வாரம் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து விளக்கியதாகவும் ஆனால், இதுவரை அவர்களிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எனினும், எந்தத் தேர்தலை நடத்தச் சொன்னாலும் தாம் அந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
(எம்.ஏ.எம்.நிலாம்)
Post a Comment