Header Ads



அப்பாவிகளை விடுவியுங்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதியிடம் வலியுறுத்து

பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பதில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவிடம் தொலைபேசி ஊடாக பணிப்புரை விடுத்தார்கள். அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் குற்றமிழைக்காதவர்கள் என இனம்காணப்பட்டவர்களை விடுக்குமாறு, மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாதுகாப்பு பேரவைக் கூட்டத்திலும் தாம் கூறியிருந்தாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பில், முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று சனிக்கிழமை (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடினர். இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் பிரதிநிதிகள் சார்பில், சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் விளக்கிக் கூறினார்.

ஜனாதிபதியுடனான இந்த முக்கிய சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், எம்.எச்.ஏ. ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான அலிசாஹிர் மெளலானா, எம்.எஸ். அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பெளசி, எம்.எஸ். தெளபீக், எம்.ஐ.எம். மன்சூர், காதர் மஸ்தான், எஸ்.எம்.எம். இஸ்மாயில், பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேடுதல் நடவடிக்கைகளின்போது அல்குர்ஆன் பிரதிகள், அரபு மொழியிலான நூல்கள், பத்திரிகைகள் என்பவற்றை தம்வசம் வைத்திருந்தனர் என்ற காரணத்தினால் அப்பாவிகள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்கு போதிய தெளிவின்மையால் நடைபெறும் இவ்வாறான கைதுகள் எதிர்காலத்திலும் தொடர இடமளிக்ககூடாதென கூறப்பட்டது. கத்தி மற்றும் வாள் போன்றவற்றை வீடுகளில் வைத்திருப்பவர்கள் பற்றி பேசப்பட்டபோது, ஜனாதிபதி தம்மிடமும் வாள் இருப்பதாகக் கூறினார். 

பாரதூரமான குற்றச்செயல்களை புரிந்தவர்களுடன், தற்போது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை ஒன்றாக விளக்கமறியலில் ஒன்றாக தங்கவைப்பதினால் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீதான வழக்குகளை கையாள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனியானதொரு பிரிவை நிறுவுவதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையின் போது சமூகமளித்திருந்த பொலிஸ் திணைக்கள குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்) பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.எம்.எம். விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பில் கவனிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

முஸ்லிம் பெண்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் முகம் தெரியக்கூடிய வகையிலும், காதுகளையும் தலையையும் மறைப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது என்பதால், இதுதொடர்பில் தெளிவூட்டும் வகையிலான உத்தியோகபூர்வ சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் அந்த அமைச்சின் செயலாளருக்கு உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழங்களில் பெண்கள் அணியவேண்டிய ஆடை விவகாரத்தில் விடுத்துள்ள அறிவுறுத்தலை முன்னுதாரணமாக வைத்து செயற்படுமாறு ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். 

புனித ரமழான் நோன்பின் இறுதிப் பத்து நாட்களிலும் முஸ்லிம்கள் சன்மார்க்க கடமைகளில் அதிகமாக ஈடுபடுவதனால், அவசியமற்ற தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்கள் அசெளகரியத்தை எதிர்நோக்குவதால் அவற்றை தளர்த்துமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை செவிமடுத்த ஜனாதிபதி, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவை தொடர்புகொண்டு அதற்கான பணிப்புரையை விடுத்தார்.

சில ஊடகங்கள் பொறுப்பற்ற ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான விசமப் பிரசாரத்திலும் செய்திகளை மிகைப்படுத்தி பெரும்பான்மை மக்கள் மத்தியில் வீணான அச்சத்தை உண்டுபண்டும் விதத்தில் நடந்துகொள்ளும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. அத்துடன் இனவாதத்தை தூண்டும் விதத்தில் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவதை தடைசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறினார்.

3 comments:

  1. ஒன்றிணைந்த செயற்
    பாடு மகிழ்ச்சி தருகின்
    றது.

    ReplyDelete
  2. In the same manner why you guys cannot work together in the Parliament in the future!

    ReplyDelete
  3. கட்சிகள் வெவ்வேறு என்றாலும் ஒரே குறிக்கோலில் செயற்படுங்கள் உங்கள் எல்லோருக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வான்

    ReplyDelete

Powered by Blogger.