Header Ads



முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், அவர்களிடத்தில் கரிசனை செலுத்துங்கள்

தற்கொலைத் தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவால் நடத்தப்பட்டது அதற்காக எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல என இலங்கை திருச்சபையின் யாழ். குருமுதல்வர் சாமுவேல் ஜே. பொன்னையா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாதுகாவலன் மண்டபத்தில் நேற்று -04-  செய்தியாளர்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியத்தின் சார்பில் யாழ். குருமுதல்வர் வணபிதா சாமுவேல் ஜே. பொன்னையா கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சகல மதத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது இந்தத் தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகள் முன்னெடுத்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் முஸ்லிம் மக்கள் ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்களை கரிசனையுடன் நோக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

தற்போது நடைபெறுகின்ற விசாரணைகளின் போது முஸ்லிம்கள் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுகின்ற நிலைமையை அனுபவிக்கின்றார்கள். அவர்கள் எமது அமைப்பில் இருக்கின்றார்கள். அதனை வேதனையுடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

தங்களை எல்லோரும் கீழ்த்தரமாகப் பார்க்கின்றார்கள். கீழ்த்தரமாக நடத்துகின்றார்கள். மதிப்பாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கவலைப்படுகின்றனர். அதிலிருந்து விடுபடவேண்டும் என்றும் கூறினார்கள்.

எல்லா மதத்திலும் தீவிரவாதம் இருக்கின்றது. எல்லா இனத்திலும் எல்லா விதமானவர்கள் இருக்கின்றனர். நல்லவர்களும் இருக்கின்றார்கள். தீயவர்களும் இருக்கின்றார்கள். முஸ்லிம் இனத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் தீவிரவாதிகள், கூடாதவர்கள் இருக்கின்றார்கள் என்ற எண்ணம் இப்போது பலருடைய மனதில் இருக்கின்றது. அதை மாற்றிக் கொள்ளவேண்டும்.

கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் அதிலும் களவெடுப்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், ஏமாற்றுபவர்கள் இருக்கின்றார்கள். அதற்காக எல்லா கிறிஸ்தவர்களும் களவெடுப்பவர்களோ, கொள்ளையடிப்பவர்களோ இல்லை.

அதேபோன்று இஸ்லாம் மதத்திலும் தீவிரவாதப் போக்குடையவர்கள், கொள்ளையடிப்பவர்கள் இருக்கக் கூடும். ஆனால் நாங்கள், எல்லா முஸ்லிம்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.

முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்துகின்ற செயற்பாடுகளை இந்தக் காலத்தில் காணக் கூடியதாக உள்ளது. எமது மக்கள் ஆழமாகச் சிந்திக்கவேண்டும். எங்களுக்கு இடையிலான உறவுகள் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் கத்தோலிக்க குருமுதல்வர் ஜெபரட்ணம், யாழ். குரு முதல்வர் வணபிதா சாமுவேல் ஜே. பொன்னையா, மெதடிஸ் திருச்சபையின் முகாமைக் குரு கே.ஜே.அருள்ராசா மற்றும் மூத்த பாஸ்ரர் சிற்றம்பலம் சிதம்பரப்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.