மத்ரஸாக்களை தடைசெய்வதாக பிரதமர், ரணில் ஒருபோதும் கூறவில்லை - அமைச்சர் ஹலீம்
இலங்கையில் உள்ள மத்ரஸாக்களை தடை செய்வது தொடர்பாக சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார் எனச் சுட்டிக் காட்டி சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாகவும் எனவும் பிரதமர் அவ்வாறு தெரிவிக்க வில்லை. அது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் எனவும் எதிகாலத்தில் மத்ரஸாக்களின் தரத்தை உயர்த்தி முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்தக் கூடிய தலை சிறந்த ஆலிம்களை உருவாக்க வேண்டிய கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம் என்று முஸ்லிம் சமயம் கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் ஹலீம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
எல்லா மத்ரஸாக்களையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் சட்ட மூலமொன்றை உருவாக்கி ஒரு ஒழுங்கமைப்பு முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய வேலைத் திட்டங்கள் நாங்கள் ஆரம்பித்து இருக்கின்றோம்.
ஜம்மிய்யதுல் உலமா சபை, அரபு கல்லூரிகளின் அதிபர்கள் ஒன்றிணைந்து கடந்த 23 வருடங்களாக பொது பாட விதானங்கள் தயாரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வந்தன. எனினும் எமது காலத்திலும் மூன்று வருடங்கள் இந்த பொதுப்பாட விதானங்கள் சம்மந்தமாகப் பேசப்பட்டன. கடந்த வருடம்; ஒரு பொது பாடவிதான முறையில் செயற்படுதற்கு எல்லோரும் பொது இணக்கப்பட்டுக்கு வந்துள்ளார்கள்.
இதனை பொதுவான முறையில் ஒழுங்குபடுத்தி ஒரு சரியான பாதையில் முன்னெடுக்கவுள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகளை; முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளன.
எனவே அரபு மத்ரஸா தடை செய்யப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார் என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில் எந்தவிதமான உண்மைத் தன்மையும் இல்லை. அது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment