ஈரான் நாட்டு முஸ்தபா பல்கலைக்கழகம், இஸ்லாத்திற்கு விரோதமானது - ஜம்இய்யத்துல் உலமா விளக்கம்
ஈரான் நாட்டு அல் முஸ்தபா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கொள்கைக்கும் இலங்கை வாழ் இஸ்லாமியர்களின் கோட்பாடுகளுக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. இக்கற்கை நெறியில் உள்நோக்கங்கள் இருப்பதாகவும் அது எதிர்காலத்தில் சமூகத்தைப் பாதித்து அடிப்படைவாத்துக்குள் இட்டுச்செல்வதற்கு வழிவகுக்கும் என்பதை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் பதுளைக் கிளை எழுத்து மூலம் தெரிவித்திருப்பதாக ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தை மையப்படுத்தி இயங்கிவரும் ஈரான் நாட்டு சர்வதேச பல்கலைகழகத்தின் கற்கை நெறி தொடர்பிலும் இக்கற்கை நெறியிலிருந்து முஸ்லிம் மாணவர்கள் விலகிக் கொண்டமைக்கான காரணம் குறித்தும் அறிந்துகொள்ளும் பொருட்டு ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் பதுளை பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் நாட்டு சர்வதேச பல்கலைக்கழகத்தின் அனுசரணையில் மலையக மாணவர்களுக்கு அரசறிவியல் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கலாசாரம் தொடர்பான பாடங்கள் கற்பித்துக் கொடுக்கப்பட்டு வருகின்றமை எமது சமூகத்தின் மத்தியில் இன்று பல்வேறு பிரச்சினைகளையும் சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.
இதனடிப்படையில் அரசியல் விஞ்ஞான பாடங்களுடன் ஈரானிய நாட்டு இஸ்லாமிய அரசியல் கொள்கைகளையும் அரபு மொழியையும் குரானியக்கலை என்ற பாடத்தில் குர் ஆனையும் கற்பித்துக் கொடுக்கின்றனர். மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள முஸ்லிம் அல்லாத மாணவர்களை இலக்கு வைத்து குர்ஆன் தொடர்பிலும் அரபுமொழி தொடர்பிலும் பாடங்கள் கற்பித்துக் கொடுக்கப்பது பிரச்சினைக்குறிய விடயமாகும்.
இந்த பட்டபடிப்புக்காக ஆரம்பத்தில் 650 மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். இதில் பட்டப்படிப்பின் இடையில் 130 முஸ்லிம் மாணவர்கள் கற்கை நெறியை திடீரென இடைநிறுத்தி விலகிக்கொண்டனர். இவ்வாறு திடீரென முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் இக்கற்கை நெறியிலிருந்து விலகிக் கொண்டமையும் குறிப்பிடதக்கது.
இக்கற்கை நெறியில் பல உள்நோக்கங்கள் இருப்பதாகவும் அது எதிர்காலத்தில் எமது சமூகத்தைப் பாதிக்கும் வகையிலும் முஸ்லிம் மாணவர்களை தவறான வழியில் இட்டுசெல்லவும் அடிப்படைவாதிகளாக மாற்றவும் அதிக சாத்தியக்கூறு காணப்பட்டமையாலேயே முஸ்லிம் மாணவர்கள் இக்கற்கை நெறியிலிருந்து விலக்கிக் கொண்டதாகவும், பதுளை ஜூம்மாப் பள்ளிவாயில் பிரதம மௌலவி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சரினால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையானது தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினரை பாரிய ஆபத்திலிருந்து மீட்டெடுத்த செயலாகவே பார்க்கின்றோம் என பதுளை ஜூம்மாப் பள்ளிவாயில் பிரதம மௌலவி மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, இலங்கை நாட்டு முஸ்லிம் மக்களின் கருத்துக்களுக்கு எதிரானதும் ஈரான் நாட்டு முஸ்லிம்களுக்கு ஆதரவான அடிப்படைவாத கருத்துக்களையும் இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இன்று எமது நாட்டில் இடம்பெறுகின்ற பிரச்சினைகளுக்கு மூலகாரணங்களாக இருப்பது அடிப்படைவாத கருத்துக்களே ஆகும். இதன் காரணத்தினாலேயே பதுளை மாவட்டத்தின் ஜூம்மாப் பள்ளிவாயில்களின் நிருவாகத்தின் அறிவித்தலுக்கமைய முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் இக்கற்கை நெறியிலிருந்து விலக்கிக் கொண்டதாகவும் குறிப்பிட்ட மௌலவி ஈரானிய நாட்டு அடிப்படைவாத கருத்துகளையும் கொள்கைகளையும் ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் ஈரானிய நாட்டு அனுசரணையில் இயங்கும் வௌிவாரியான பல்கலைக்கழகத்தினூடக மலையக மாணவர்களுக்கு கற்பிப்பதை எம்மால் நிறுத்த முடியாது. ஆனால் எமது ஜூம்மாப் பள்ளிவாயில்களின் நிருவாகத்தினரின் ஊடாக எமது முஸ்லிம் மாணவர்களை இக்கற்கை நெறியிலிருந்து இடைநிறுத்தி விலக்கிக்கொண்டோம் எனத் தெரிவித்தார்.
Post a Comment