காத்தான்குடி பெண்கள் இரவு நேர வணக்கங்களுக்காக, பள்ளிவாசல் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
ரமழான் மாதத்தில் காத்தான்குடியில் பெண்கள் இரவு நேர வணக்கங்களுக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.
காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு ரமழான் கால நடவடிக்கைகள் தொடர்பாக காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை இது தொடர்பில் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெண்கள் இரவு நேர வணக்கங்களுக்காக பள்ளிவாசல்களுக்கு செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே ஜமாஅத்தாக தொழுது கொள்வது சிறந்ததாகும்.
இஸ்லாமிய மார்க்க விடயங்களில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைமையகத்தின் வழிகாட்டலுக்கேற்ப தமது அனைத்து வணக்க வழிபாடுகளையும் அமைத்துக் கொள்ளுமாறும் குறிப்பாக நோன்பு நோற்றல் பெருநாள் எடுத்தல் உரிய நேரத்துக்கு அதான் சொல்லல் விடயங்களில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தீர்மானத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இம் மாதத்தில் பகல் வேளைகளில் (அஸர் தொழுகை) வரை ஹோட்டல்கள் சிற்றுண்டிச்சாலைகளை மூடி றமழான் மாதத்தின் கண்ணியத்தை பேணி ஒத்துழைக்குமாறும் சில சிற்றுண்டிச்சாலைகளை திறப்பதாயின் கட்டாயம் முன்பகுதியை திரையிட்டு மூடுமாறும் காத்தான்குடியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்களை காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை கேட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு பிரிவின் வேண்டுகோளுக்கேற்ப இளைஞர்கள் கண்டிப்பாக இரவு 9.30 மணிக்குப் பின்னர் வெளியில் நடமாடவோ மோட்டார் சைக்கிள்களில் திரியவே கூடாது எனவும் இவ்விடயத்தில் பெற்றோர்கள் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
பொது மக்கள் றமழான் காலத்தில் புத்தாடைகளையும் பொருட்களையும் கொள்வனவு செய்ய பகல் வேளைகளைப் பயன்படுத்திக் கொள்வதுடன் இரவு நேரங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடவும்.
பாதுகாப்பு விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சந்தேகத்துக்கு நபர்கள் பொருட்கள் பற்றி தெரியவந்தால் பொலிஸ் நிலையங்திற்கோ பாதுகாப்பு தரப்பினருக்கோ அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment