Header Ads



கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் மீது, சித்திரவதை செய்யாதீர்கள் - சர்வதேச மன்னிப்புச்சபை அரசாங்கத்திடம் கோரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தொடர்குண்டுத் தாக்குதல்களையடுத்து இலங்கைப் பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்டுவரும் கடுமையான நடவடிக்கைகளை அடுத்துத் தோன்றியிருக்கும் சூழ்நிலைகளில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், தராதரங்களையும் உறுதிப்படுத்த வேண்டுமென்று இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மன்னிப்புச்சபை நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 

அதன் முக்கியமான அம்சங்கள் வருமாறு :

குண்டுத்தாக்குதல்களை அடுத்து 150 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக உள்நாட்டுச் செய்திகள் மூலம் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. 

இந்தக் கைதுகள் எந்தச் சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறித்து தற்போது பொதுவெளியில் தகவல்கள் இல்லை.

இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து நீண்டகாலமாகவே மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டு வந்திருக்கிறது. 

நீண்ட காலத்திற்கு ஆட்களைத் தடுத்து வைத்தல், சித்திரவதைக்கு உள்ளாக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் போன்றவற்றை அனுமதிக்கக்கூடிய கொடுமையான ஏற்பாடுகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இருக்கின்றன.

குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று நாட்கள் கழித்து பொதுப் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளின் கீழ் அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டு,அதன் கீழான சட்டவிதிகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. 

இந்த ஏற்பாடுகள் பல கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கக்கூடியவை. 

அவை துஷ்பிரயோகம் செய்யப்படுமானால் மனித உரிமை மீறல்களுக்கு ஒப்பானவையாக அமையும்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பவர்களை இலங்கை அரசாங்கம் விசாரணை செய்துவரும் நிலையில், தற்போதைய சூழ்நிலை நாட்டில் வெறுப்புணர்வையும், சமூகங்களின் மத்தியில் பிளவையும் தூண்டிவிடுவதற்குப் பயன்படுத்தப்படாதிருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென்று மன்னிப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் சித்திரவதை செய்யப்படாத வகையில் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். 

அவசரகாலச் சட்டத்தின் கீழ் பொலிஸாருக்கும்,பாதுகாப்புப் படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் பரந்தளவானவையாக இருப்பதால் அவை துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய ஆபத்துக்கள் இருப்பதை அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்ட மன்னிப்புச்சபை விரும்புகின்றது.

இயக்கங்களைத் தடை செய்வதற்கு ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்,வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை, அமைதியான முறையில் கூட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரம் போன்ற நியாயபூர்வமானதும், சட்டபூர்வமானதுமான மனித உரிமைச் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

 அவ்வாறு நடைபெறாமல் அரசாங்கம் அதன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மன்னிப்புச்சபை கேட்டுக்கொள்கிறது.

அவசரகால விதிகளின் கீழான கடுமையான ஏற்பாடுகளைப் பட்டியலிட்டிருக்கும் மன்னிப்புச்சபை,அந்த விதிகளை மாற்றியமைக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் நீண்டகாலமாகக் கோரிக்கைவிடுத்து வந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.