Header Ads



பயங்கரவாதிகள் இஸ்லாமிய போதனை எனக்கூறும், எதுவும் உண்மையில் இஸ்லாம் அல்ல


மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக்காரியலயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களுக்கும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தஜீவிகளுக்கும் இடையில் இன்று -08- சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்த கருத்து வெளியிட்ட ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்கள்,

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) இயக்கத்தினால் உலகலாவிய ரீதியில் அதிகளவான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவ்வமைப்பினால் முஸ்லிம்களுக்கு அதிகளவான அநியாயம் இழைக்கப்பட்டிருக்கின்றது. தற்போதும் இத்தாக்குதல்களால் இந்நாட்டில் அனைத்து இனமக்களுடனும் ஒன்றிணைந்து வாழ்ந்த முஸ்லிம் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பரவலாக ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனத்தில் இருந்து எவ்வாறு வெளிவருவது என்பது குறித்தும் ஆராய்ந்திருந்தோம். 

அதேபோன்று தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அதனை மதத்தின் பெயரைப் பயன்படுத்திச் செய்திருக்கிறார்கள். ஆனால் உண்மையான இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு இது முற்றிலும் முரணானதொரு செயற்பாடாகும். 

நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இத்தகைய பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு முஸ்லிம்கள் மாத்திரமன்றி அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். 

அத்தோடு இத்தருணத்தில் முஸ்லிம்களை ஒதுக்காமல், அவர்கள் மீது எவ்வித வன்முறைகளையும் பிரயோகிக்காமல் இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். இந்நாட்டுப் பிரஜை என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கும், தற்போதைய இந்தப் பயங்கரவாதத்திற்கும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. 'இது விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒத்த பிரச்சினையல்ல. இது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதுடன், அதனை விட மிகவும் ஆபத்தானது. 

இந்தப் பயங்கரவாதிகள் இஸ்லாமிய போதனைகள் என்று கூறுபவை எவையும் உண்மையில் இஸ்லாம் அல்ல. இஸ்லாம் கொலை செய்வதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இவர்கள் ஜிஹாத் என்ற கோட்பாட்டைப் பின்பற்றும் அதேவேளை, இது மிகவும் ஆபத்தானது' என்று கூறினார்.

(நா.தனுஜா)

No comments

Powered by Blogger.