மௌலவிகளுடன் முரண்பட்ட சஹ்ரான், கல்லூரியிலிருந்து வெளியேற்றம் - வாப்பா சண்டையிட்டும் பயனில்லை
(இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் 3வது பகுதி இது. )
நாட்டின் தலைநகரான கொழும்புவிலிருந்து சுமார் 330 கி.மீ. தூரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கிறது காத்தான்குடி. சுமார் 2.56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இந்த நகரம் தெற்காசியப் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்று. காத்தான்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்து மொத்தமாக சுமார் 66 ஆயிரம் இஸ்லாமியர்கள் இங்கு வசிக்கிறார்கள்.
இலங்கைத் தீவின் எல்லா நகரங்களிலும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களின் கடைகளையோ, வர்த்தக நிறுவனங்களையோ பார்க்க முடியும். "காக்காய் இல்லாத இடமும் இல்லை; காத்தான்குடிக்காரர்கள் இல்லாத ஊரும் இல்லை" என்ற பழமொழியே இந்தப் பகுதியில் உண்டு. அந்த அளவுக்கு இந்த நகரம் கடுமையான உழைப்பாளிகளும் வர்த்தகர்களும் நிறைந்த நகரம்.
ஆறு ஜும்மா பள்ளிவாசல்களுடன் 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இங்கு இருக்கின்றன. ஷரீயத் சட்டங்களைப் போதிக்கும் சுமார் 10 மதரசாக்களும் இங்கே இயங்கிவருகின்றன. சஹ்ரான் இயங்கிவந்த பிரதேசம் என்பதால் இப்போது சர்வதேச கவனத்திற்கு உள்ளாகியிருக்கும் காத்தான்குடி, உண்மையில் அடிப்படைவாத இஸ்லாத்திற்குப் பெயர்போன நகரமல்ல.
துவக்கத்தில் தப்லீக் ஜமாத்தும் தரிக்காஸ்-உம் இந்தப் பகுதியில் செல்வாக்கு செலுத்திவந்தன. நடை, உடை, தனிப்பட்ட பழக்க வழக்கங்களில் சுன்னி இஸ்லாத்தை வலியுறுத்தும் தப்லீக் ஜமாத், இந்தியப் பின்னணியைக் கொண்டது. சூஃபி பாணியிலான இஸ்லாத்தை வலியுறுத்தும் தாரிகாஸ், மத்திய கிழக்கில் உருவானது.
1970களின் பிற்பகுதியில் மௌலவி அப்துல் ரவூஃப் என்பவர் இஸ்லாம் குறித்த மாறுபட்ட ஒரு பிரசங்கத்தைத் துவங்கினார். அதாவது 'அல்லாவும் இறைதூதர் முஹம்மது நபியும் ஒருவரே; கடவுளுக்கு உருவம் உண்டு' என்பது இவரது பிரசாரத்தின் அடிப்படையாக இருந்தது. இதற்குக் காத்தான்குடி இஸ்லாமியர்களிடம் கடும் எதிர்ப்பு இருந்தாலும், அவர் தனது பிரசாரத்தைத் தொடர்ந்துவந்தார்.
"அந்த காலகட்டத்தில் இருந்த மௌலவிகள், அப்துல் ரவூஃபின் கருத்தை வாதம் செய்து மறுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர்கள் செய்யவில்லை. அவரது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, திருக்குரானை மேற்கோள்காட்டி அவருக்கு எதிரான வாதங்களை யாரும் முன்வைக்கவில்லை" என நினைவுகூர்கிறார் மூத்த பத்திரிகையாளர் புவி. ரஹ்மத்துல்லா.
இலங்கையில் ஏற்கனவே அப்துல் ஹமீத் பக்ரி போன்றவர்கள், அன்ஸாருஸ் ஸுன்னா முஹம்மதியா என்ற இயக்கத்தை ஆரம்பித்து ஏகத்துவத்தை வலியுறுத்தும் 'தவுஹீத்தை' பிரசாரம் செய்துவந்திருந்தனர். இருந்தபோதும் அப்துல் ரவூஃபின் சூஃபி இஸ்லாமை வலியுறுத்தும் பிரசாரமே, அதற்கு எதிரான தவ்ஹீத் அமைப்புகளுக்கு செல்வாக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதுமட்டுமல்ல, இலங்கையில் நடந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல சம்பவங்கள் தவ்ஹீத் அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவின. 1970களின் பிற்பகுதியில் இலங்கையில் தாராளவாத பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அதே காலகட்டத்தில் இலங்கையிலிருந்து - குறிப்பாக கிழக்கு மாகாணத்திலிருந்து - மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெருமளவில் ஆட்கள் வேலைக்குச் சென்றனர். அதனால் மத்திய கிழக்கின் பணமும் கூடவே அங்கு செல்வாக்குச் செலுத்திய வஹாபிய தூய்மைவாத இஸ்லாமும் இலங்கையை வந்தடைந்தன. கிழக்கில், குறிப்பாக காத்தான்குடி, மருதமுனை பகுதிகளில் இந்தக் கருத்துகளுக்கான செல்வாக்கும் மெல்ல மெல்ல உருவானது.
"இந்த மாற்றங்கள் ஏதோ ஒரு சில ஆண்டுகளில் நடந்துவிடவில்லை. 30-35 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது. முதலில் மத சீர்திருத்தம் என்றுதான் துவங்கியது. பிறகு, படிப்பு, உடை, பழக்கவழக்கம் எல்லாம் இந்தப் பகுதியில் மாற ஆரம்பித்தது" என நினைவுகூர்கிறார் காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரான அப்துல் லதீப் முஹம்மது சபீல்.
முதலில் பள்ளிக்கூடங்களில் பெண்கள் நடனமாடக்கூடாது என்றுதான் கட்டுப்பாடுகள் துவங்கின என்கிறார் அவர். பிறகு, மெல்லமெல்ல சினிமாவைத் தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டது. 1980களின் மத்தியப் பகுதிவரை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் கோலோச்சிய திரையரங்குகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தன. தற்போது இந்த மாவட்டங்களில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை ஒட்டிய இடங்களில் மட்டும் சில திரையரங்குகள் தென்படுகின்றன.
90களின் இறுதியிலும் 2000த்தின் துவக்கத்திலும் காத்தான்குடி, மருதமுனை பகுதிகளில் தவ்ஹீத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு வளர ஆரம்பித்தது.
2001வாக்கில் காத்தான்குடியில் உள்ள ஜமியத்துல் ஃபலா அரபிக் கல்லூரியில் சஹ்ரான் காசிமி என்ற அந்த 15 வயதுச் சிறுவன் அரபு மொழி, இஸ்லாமியச் சட்டங்கள், ஹதீதுகளைப் படிப்பதற்காகச் சேர்ந்தான். ஏழு ஆண்டுகள் இங்கே படித்து பட்டம்பெற வேண்டிய நிலையில், நான்காவது ஆண்டிலேயே அங்கிருந்த மௌலவிகளின் கருத்துகளுடன் வெளிப்படையாகவே முரண்பட்டார் சஹ்ரான்.
"தலையில் தொப்பி அணியக்கூடாது, ரம்ஜானின்போது 20 முறை வணங்கக்கூடாது; எட்டு முறைதான் வணங்க வேண்டும் என்றெல்லாம் சஹ்ரான் கூற ஆரம்பித்தார். இதனால், நான்கு ஆண்டுகளிலேயே அவர் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார். அவருடைய தந்தை சென்று சண்டையிட்டாலும் எந்தப் பயனும் இல்லை. பிறகு, குருநாகலில் உள்ள இபின் மசூத் மதரஸாவில் மீதமுள்ள படிப்பை முடித்தார் சஹ்ரான்" என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
2008வாக்கில் படிப்பை முடித்துவிட்டுவந்த சஹ்ரான், தன் பாணி இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்தார். அப்துல் ரவூஃபின் கருத்துக்களைக் கடுமையாகச் சாடினார். தன்னை இஸ்லாத்தை சீர்திருத்த வந்தவராக சொல்லிக்கொண்டார். தாருல் - அதர் என்ற அமைப்பில் இருந்தபடி இந்தச் செயல்பாடுகளில் சஹ்ரான் ஈடுபட்டுவந்தார். மதம் மட்டுமின்றி, சமூகப் பிரச்சனைகள் தொடர்பான கூட்டங்களையும் இந்த அமைப்பு நடத்திவந்தது. ஆனால், விரைவிலேயே சஹ்ரானின் தீவிர தூய்மைவாதக் கருத்துகள் தாருல் - அதர் அமைப்பிற்குள்ளும் சிக்கலை ஏற்படுத்த அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார்.
அதற்குப் பிறகு, இஸ்லாமிக் சென்டர் என்ற பெயரில் தனியாக ஒரு பள்ளிவாசலை உருவாக்கினார். 2012ல் தேசிய தவ்ஹீத் ஜமாத் உருவாக்கப்பட்டது. சஹ்ரானும் தன் போதனைகளைத் தீவிரப்படுத்தியபடியே இருந்தார். காத்தான்குடி இஸ்லாமியர்கள், சஹ்ரானை கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள். சஹ்ரானின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். அவரைப் பொறுத்தவரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது, மார்ச் 16, 2017வரை.
(தொடரும்)
- முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் -
Post a Comment