Header Ads



முஸ்லிம் வைத்தியரை குரங்கு போன்று பிடித்து தொங்காதீர்கள், சிங்கள வைத்தியர்களும் கருத்தடை செய்கிறார்கள்

குடும்ப கட்டுப்பாடு சத்திர சிகிச்சை பற்றி தாம் 2013 ஆம் ஆண்டு முதல் பேசி வருவதாகவும் அன்றிலிருந்து எந்த அரசாங்கங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தற்போது ஒரு மருத்துவரை பிடித்துக்கொண்டு கொன்று சாப்பிட முயற்சிப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் இன்று -28- நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக 2012 ஆம் ஆண்டு எமது மாநாட்டில் நாங்கள் பேசினோம். இது பற்றி அப்போதிருந்த மகாராஜாக்களுக்கும் தகவல் வழங்கினோம். எனினும் எவரும் எந்த விசாரணைகளையும் நடத்தவில்லை.

2013 ஆம் ஆண்டு பதுளையில் சங்க மாநாட்டில் நாங்கள் பேசினோம். குருணாகலில் இருந்த மருத்துவரை போன்ற ஒருவர் அங்கும் இருந்தார். இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு நாங்கள் 2014 ஆம் ஆண்டு, சுகததாச அரங்கில் சங்க மாநாட்டை நடத்தினோம். அதிலும் சட்டவிரோத குடும்ப கட்டுப்பாடு பற்றி பேசினோம்.

சங்க மாநாட்டில் முன்வைத்த யோசனைகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்தோம். அரச அனுசரணையில் செய்யப்படும் சகல குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சைகளையும் நிறுத்துமாறு கோரப்பட்டது.

70 ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு அமைய 26 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால், எல்,ஆர்.சி சத்திர சிகிச்சையை செய்ய முடியும். அதற்கு கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமையவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. இது உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம்.

இந்த நிறுவனங்கள் குறித்து நாங்கள் தகவல் வெளியிட்டு, அவற்றை முற்றுகையிட செல்லும் போது, எமக்கு முன்னர் பொலிஸார் அந்த நிறுவனங்களுக்கு சென்றிருந்தனர். டி.ஐ.ஜிகளுக்கு இந்த நிறுவங்கள் பணம் கொடுத்தன. தினமும் நாடு முழுவதும் 40 க்கும் மேற்பட்ட குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சைகள் நடக்கின்றன.

தற்போது ஒரு மருத்துவரை பிடித்துக்கொண்டு கோஷம் போடுகின்றனர். அவர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்திற்காகவா?. குரங்குகளை போன்று அந்த மருத்துவரை பிடித்து தொங்காமல், அடிப்படையை மாற்றுங்கள். இதனை செய்யும் சிங்கள மருத்துவர்கள் இருக்கின்றனர். இதனால், பைத்தியகாரர்கள் போல் சத்தமிட வேண்டாம் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. என்னய்யா இது ஒரு நாளைக்கு வில்லன் எமக்கு அடுத்த நாளே மீண்டும் பாத்திரம் மாறுகிறது நடு நிலை வாதியாய்.என்னதான் நடக்குது சாதுவே

    ReplyDelete
  2. இவன் உண்மைகூடப் பேசுவானா ? ஆச்சரியமாக உள்ளது.

    ReplyDelete
  3. ஊர் குருவி என்னதான் உயரப்பறந்தாலும் பருந்தாகாது

    ReplyDelete

Powered by Blogger.