பயங்கரவாதிகளையும், வெடி பொருட்களையும் கண்டுபிடிக்க அதிகம் உதவியவர்கள் முஸ்லிம்களே
பொது மக்களின் ஒத்துழைப்பால் தான் நாட்டிற்கெதிரான சதிகளை முறியடிக்க முடியும். அதனால் பொது மக்களின் உதவி எங்களுக்கு கட்டாயம் தேவையென வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பள்ளிவாசல்களின் நிருவாகிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான கூட்டம் பிறைந்துரைச்சேனை நூரியா பள்ளிவாசலில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களையடுத்து பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களையும் ஆயுதங்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் உதவியவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் தான். இந்த குண்டுவெடிப்புச் செயலை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லை.
முஸ்லிம்களில் சிறு குழுவொன்று இவ்வாறான செயல்களில் ஈடுபட்டாலும், முஸ்லிம் சமூகத்தினர் அரசாங்கத்திற்கு ஆதரவாகத்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பொய்ப் பிரசாரங்களுக்கு எவரும் ஏமாற்றமடைய வேண்டாம். இணையதளங்களூடாகவும் வாய்ப்பேச்சாலும் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வோருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். அவ்வாறானவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தவும்.
ஒவ்வொருவரும் விழிப்பாக இருங்கள். நமது பிரதேசத்தில் சந்தேக நபர்கள் எவரும் நடமாடினாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் பொதிகள் தென்பட்டாலோ கிராம சேவை உத்தியோகத்தருக்கோ அல்லது பொலிஸாருக்கோ உடன் தெரியப்படுத்துங்கள் என்றும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் ஆலோசனை சபைத்தலைவர் போதகர் கே.சுனில், கிராம சேவை உத்தியோகத்தர் எச்.எம்.அமானுல்லாஹ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம்.நூர்தீன், நூரியா பள்ளிவாசல் தலைவர் எம்.பதுர்தீன், முஹைதீன் தைக்கா பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.முயிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment