முஸ்லிம்களே அவதானம்...!
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்புக்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதே வேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைப் சாதகமாகப் பயன்படுத்தி வேண்டுமென்று முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் மேற்கொண்டு வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. நாட்டின் பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் அதே வேளையில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையாயின் முஸ்லிம்களின் மீது ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
கடந்த காலங்களில் இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களின் மீதும், முஸ்லிம் பள்ளிவாசல்களின் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கோ அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புக்களை தடை செய்வதற்கோ அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரீதியில் சட்டத்திற்கு முன்னால் உலாவிக் கொண்டிருந்தார்கள். அதே வேளையில் அவர்கள் தங்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது சட்ட நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாமையால் அளுத்கம, தர்காநகர் என பல இடங்களில் முஸ்லிம்களின் மீது அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால், முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்திருந்தார்கள். 2015ஆம் ஆண்டு ஆட்சியை மாற்றினால்தான் தங்களுக்கு பாதுகாப்பு என்று முஸ்லிம்கள் கருதினார்கள். ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. ஆனாலும் கூட முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. முஸ்லிம்களின் மீது ஜிந்தோட்டை, திகன ஆகிய இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ப்பட்டன.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், முஸ்லிம்களை எவ்வாறு ஒடுக்க வேண்டுமென்றும் நினைத்தார்களோ அதனை நாட்டில் ஏற்பட்ட கொடூர தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னர் சாதித்துக் கொள்வதற்குரிய அனைத்து முயற்சிகளையும் இனவாதிகள் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, இன்றைய நெருக்கடியான சூழலில் முஸ்லிம்களினால் அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களின் பின்னர் அரசாங்கம் முதல் நடவடிக்கையாக அவசர காலச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாயின் படையினருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கு அமைய அவசர காலச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டமை தேவையான ஒன்றாகவே சகல சமூகத்தினராலும் பார்க்கப்பட்டது. இச்சட்ட மூலத்திற்கு எதிராக எந்த சமூகமும் விரல் நீட்டவில்லை.
அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றையும் அரசாங்கம் தடை செய்தது. நாட்டின் பாதுகாப்புக் கருதியும், அதனால், முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படவுள்ள கெடுபிடிகளை தவிர்த்துக் கொள்ளவும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையும் இதற்கு சம்மதம் தெரிவித்தது.
ஆனால், முஸ்லிம் பெண்கள் தங்களுக்குரிய உரிமைகளையும் நாட்டின் பாதுகாப்புக் கருதி விட்டுக் கொடுத்து புர்கா, நிகாப் தடைக்கு ஏற்றவாறு செயற்படும் போது பர்தாவையும் கேள்விக்கு உட்படுத்துவது இனவாத ஒடுக்கு முறையாகவே இருக்கின்றது.
இதே வேளை, நாட்டிலுள்ள மத்ரஸாக்களை தடை செய்ய வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மதஸ்தாபனங்களில் ஒலி பெருக்கிகளை தடை செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இவர்களின் கருத்துக்கள் பொறுப்பற்றவையாகும். நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டுமென்பதில் முஸ்லிம்கள் முதல் எந்தவொருக்கும் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. முஸ்லிம் தலைவர்கள் இதனைத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அதே வேளை, மத்ரஸாக்களை தடை செய்ய வேண்டுமென்றும், பள்ளிவாசல்களில் அதான் சொல்லுவதனை தடை செய்ய வேண்டுமென்றும் சொல்வதனையோ ஏற்றுக் கொள்ள முடியாது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத சூழலை கட்டுப்படுத்தவதற்கு எல்லா அரசியல் கட்சிகளும், இனங்களும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும். அப்போதுதான் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால், இத்தகையதொரு பொறுப்பான நடவடிக்கைகளை அவதானிக்க முடியவில்லை. நாடு பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றினை எதிர் கொள்ள இருக்கின்றது. இத்தேர்தலில் எப்படி வெற்றி பெறலாமென்பதில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொது பெரமுனவும் சிந்திக்துக் கொண்டிருக்கின்றன. நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களின் மூலமாக எவ்வாறு அரசியல் இலாபம் தேடிக் கொள்ளலாமென்று மூன்று கட்சிகளின் அரசியல் தலைவர்களும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களுக்கும் எதிர்க் கட்சியினருக்கும் தொடர்புகள் உள்ளதாக அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் கோத்தபாய மீது குற்றங்களை சுமத்திக் கொண்டிருக்கின்றார். இத்தாக்கதல்களுடன் தொடர்புடையவர்களை ஒரு மாத காலத்திற்குள் மக்களுக்கு தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, எதிர்க் கட்சியினர் நாட்டின் பாதுகாப்பு பின்னடைவுகளை கண்டுள்ளது. இதனால்தான் தற்கொலை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அதனால், அரசாங்கத்தை மாற்ற வேண்டுமென்றும், இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக் கூற வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அத்தோடு, நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டிலிருந்து இஸ்லாமியத் தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பேன் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மறுபுறத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் ஆளுக்கு ஆள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவுக்கு வழங்க வேண்டுமென்று ஐக்கிய தேசிய கட்சியினர் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
இவர்களின் கருத்துக்களை அவதானிக்கும் போது நாட்டின் பாதுகாப்பை விடவும் தங்களின் அரசியல் இலாபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவே இருக்கின்றது. இவ்வாறு இவர்கள் தெரிவித்துக் கொண்டாலும், நாட்டில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்னணி உள்ளதாகவும் பலமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் வெற்றிக்காக எதனையும் செய்வார்கள் என்பதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வையும், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் ஆகிNhர்களை குறி வைத்து ஒரு சில அரசியல்வாதிகள் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தற்கொலை தாக்குதல்தாரிகளுக்கும் இவர்களுக்கு இடையே தொடர்புகள் உள்ளதென்று ஒரு சில போட்டோக்களை வைத்து தொடர்புபடுத்திக் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய கருத்துக்களை முன்னிலைப்படுத்தி ஒரு சில ஊடகங்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களுக்கும் இவர்களுக்கும் இடையே தொடர்புகள் இருக்குமாயின் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.
ஆனால், அமைச்சர்கள் அரசியல்வாதிகள் என்ற வகையில் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இவர்களை சந்தித்து இருக்கலாம். அதே வேளை, இப்றாகிம் என்பவர் வேறு கட்சிகளுடனும், அரசியல் தலைவர்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றார். ஜே.வி.பியின் தேசியப்பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், றிசாட் பதியூதீன் மீதும், ஹிஸ்புல்லாஹ் மீதும், முஜிபுர்ரஹ்மான் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களின் மீது எழுந்தமான ரீதியாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் போது பாதிக்கப்படுவது குறிப்பிட்ட நபர் மட்டுமல்ல அவர் சார்ந்துள்ள சமூகமும் பாதிக்கப்படும்;;.
இதே வேளை, நாட்டில் இன முறுகல்களை ஏற்படுத்துவதற்கும் சிலர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். வெல்லவாய – மகவெல்லகம பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்களை மறைத்து வைப்பதற்கு முயற்சிகளை எடுத்த 06 சிங்கள இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளர் இரவு தொழுதுவிட்டு வீடு திரும்பும் போது தனது வீட்டின் முன் சிலர் நடமாடிக் கொண்டிருப்பதில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னர் அங்கு வந்த பொலிஸார் அவர்களை சோதனையிட்ட போது வெடிபொருட்களை வைத்திருந்தார்கள்.
மே 01ஆம் திகதி மஹ்ரிப் தொழுகையின் போது குளியாபிட்டிய - வெலகம ஏதன்டவேல மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா பள்ளிவாசல் மீது இனந் தெரியாத ஒரு கும்பல் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இத்தாக்குதலின் போது பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அத்துடன் பள்ளிவாசலுக்குள் இருந்த சில தளபாடங்களையும் உடைத்துள்ளார்கள். மேலும், பக்கத்தில் இருந்த சிறு ஹோட்டல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு சென்றுள்ளனர்.
ஆதலால், நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்புடனும், அவதானத்துடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும்.
எஸ்.றிபான் -
Too big bro
ReplyDelete