பொறுப்புள்ள ஒரு அரசியல் கட்சி என்ற வகையில், இது தொடர்பில் தெளிவு படுத்துவது எமது கடமை
கடந்த ஈஸ்டர் தினத்தில் பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களை நடாத்தியவர்களோடு தொடர்பு படுத்தி எமது கட்சியையும் அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான அப்துர்ரஹ்மான் அவர்களையும் பற்றிய செய்தி ஒன்று கடந்த 25.05.2019 அன்று ‘லங்காதீப’ பத்திரிகையிலும் இன்னும் சில ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. பொறுப்புள்ள ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் இது தொடர்பில் தெளிவு படுத்துவது எமது கடமை என நினைக்கிறோம்.
அந்த வகையில் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
1. எமது நாட்டின் வழமையாகிப்போன இன,மத,மொழி என்பவற்றை மையப்படுத்திய அரசியலுக்கு அப்பால் சென்று, சகல மக்களினதும் நலன்களுக்காகவும் உழைக்கின்ற, சகல மக்களையும் ஒன்றிணைக்கின்ற மனித நேய அரசியலை முன்னெடுப்பதனை அடிப்படை இலக்காக கொண்டே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி-NFGG ஆகிய எமது கட்சி கடந்த 2006இல் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த வகையில், சட்டவாட்சியை நிறுவுதல், நாட்டின் சட்டத்தினை மதித்து நடப்பவர்களாகவும், இன ரீதியான- பிராந்திய ரீதியான நலன்களோடு மாத்திரம் சுருங்கிக்கொள்ளாமல் நாட்டு நலனை சிந்திக்கின்றவர்களாகவும் மக்களை வழிப்படுத்தல், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து பொது சொத்துக்களைப் பாதுகாத்தல், ஜனநாயக விழுமியங்கள் என்பதனை வெறும் பேச்சளவில் இல்லாமல் நடைமுறையில் அமுல் படுத்துதல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் தன்மையோடு சமூக நீதி, சமூக தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்தல் போன்ற அடிப்படை இலக்குகளை கொண்டதாகவும், அதற்கான தொடர் உழைப்பை மேற்கொள்கின்ற ஒன்றாகவும் எமது கட்சி இருந்து வருகின்றது.
சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட கட்சிகளில் இன,மத அடையாளங்கள் இல்லாமல் உருவான ஒரே கட்சியாகவும், அதே போன்று நாட்டு நலனை முன்னிறுத்தி அர்த்த பூர்வமான நல்லாட்சியை உருவாக்குவதனை இலட்சியமாகக் கொண்டும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய நாம் உழைத்து வருகின்றோம்.
2. சகல வகையான வன்முறை அணுகுமுறைகளையும் நிராகரித்து, கருத்துச்சுதந்திரத்தினை முழுமையாக மதித்து , ஜனநாயக விழுமியங்களை முற்று முழுதாக அமுல்படுத்துகின்ற அரசியல் செயற்பாடுகளாகவே நாம் அத்தனை செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இனவாதம் ,மதவாதம், தீவிரவாதம் என்பவற்றை நிராகரிக்கின்ற கட்சியாகவும் அதற்கெதிராக எப்போதும் குரல் கொடுக்கின்ற ஒன்றாகவும் எமது கட்சி இருந்து வருகின்றது. தேசப்பற்று மனோ நிலையினை வளர்ப்பதும், நாட்டின் பன்மைத்துவ ஒழுங்குகளை மதித்து, சக வாழ்வை உருவாக்குவதும் எமது முதன்மையான பணிகளாக இருந்து வருகின்றன. கடந்த 13 வருடங்களாக நாம் மேற் கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகளும், எமது பிரச்சார வெளியீடுகள் மற்றும் ஏனைய ஊடகப்பதிவுகளும் இதற்கான சான்றுகளாக இருக்கின்றன.
3. அரசியல் கட்சியாக மக்கள் மத்தியில் இயங்குகின்ற போது பல்வேறு தரப்பினரும் அக்கட்சியினை அணுகுவார்கள், தொடர்பு கொள்வார்கள், உரையாடுவார்கள்; தமது கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை முன்வைப்பார்கள். அவ்வாறான நபர்கள் அல்லது அமைப்புகள் நாட்டின் சட்டத்தால் தடை செய்யப்படாதவர்களாக இருக்கின்ற வரையில் அவர்கள் கோரும் தொடர்பாடல்களை எந்தவொரு அரசியல் கட்சியும் தவிர்ப்பதில்லை. தேசிய நலனை முன்னிறுத்தி ஜனநாயக நீரோட்டத்தில் அனைவரையும் அழைக்கின்ற கட்சிகள் எவையும் அவ்வாறான அழைப்புகளை தவிர்க்கவும் முடியாது. அந்த வகையிலேயே பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடனும் குழுக்களுடனும் எமது கட்சியும் உரையாடல்களை கடந்த காலங்களில் மேற்கொண்டிருக்கிறது.
4. ஈஸ்டர் தினத்தில் நடந்த மிலேட்சத்தனமான தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானும் அவர் ஸ்தாபித்த தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பும் பயங்கரவாத அமைப்புகளாக குண்டுத்தாக்குதல்களுக்கு பின்னரே பிரகடனப்படுத்தப்பட்டனர். இவர்களுடன் எமது கட்சி மேற்கொண்ட உரையாடல்கள் இதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பாக, அதாவது 2015 - 2016 காலப்பகுதிகளில் இடம்பெற்றவைகளாகும். அக்காலப்பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக இவர்கள் இருக்கவில்லை என்பதும், சமய பிரச்சார அமைப்பாகவே சமூகத்தில் இவர்கள் இருந்தார்கள் என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டியதாகும். மட்டுமன்றி, சமூக நிறுவனமொன்றாக இயங்குவதற்கான அனுமதியும் மற்றும் பள்ளிவாயில் ஒன்றை அமைத்துக்கொள்வதற்கான அனுமதியும் சட்டரீதியாக அக்காலப்பகுதியில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது என்பதும் கவனிக்கப்படவேண்டியதாகும். மேலும், சஹ்ரானோ இப்பயங்கரவாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்ட எவருமோ பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தேடப்படுகின்ற நபர்களாக அக்காலப்பகுதியில் ( 2015-2016) இருக்கவில்லை. அப்படியான ஒரு சூழலிலேயே அவர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்களுடனான உரையாடல்கள் சிலவற்றை எமது கட்சியும் மேற்கொண்டிருந்தது.
5. கடந்த 2015ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் செய்து கொள்ளப்பட்ட தேர்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டக்களப்பிற்கான எமது வேட்பாளர்களில் ஒருவராக அப்துர்ரஹ்மான் அவர்களும் நிறுத்தப்பட்டிருந்தார்.
அக்காலப்பகுதியில் வேட்பாளர்களாக காத்தான்குடி பிரதேசத்தில் போட்டியிட்ட தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாஹ் மற்றும் ஷிப்லி பாறூக், மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கும் எமக்கும் ஒரு அழைப்பை தேசிய தௌஹீத் ஜமாஅத் விடுத்திருந்தனர். குறித்த அந்த தேர்தலில் வேட்பாளர்களுக்கிடையில் மோதல்களைக் குறைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் மக்களுக்கு தொந்தரவு தராத நாகரீகமான அரசியல் பிரச்சாரத்தினை முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் உரையாட விரும்புவதாக தெரிவித்திருந்தனர்.
இவை சர்ச்சைக்குரிய விடயங்கள் அல்ல என்பதனால் ஏனைய வேட்பாளர்கள் (அனைவரும்) செய்தது போலவே எமது வேட்பாளர் அடங்கிய குழுவும் அவர்களை சந்தித்திருந்தது. அப்போது அவர்களின் அந்தக்கோரிக்கை தொடர்பான ஆவணம் ஒன்றையும் எமக்கு கையளித்திருந்தனர். அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படமே ‘லங்காதீப’ ல் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் முன்வைத்த எழுத்து மூலமான ஆலோசனைகள் ஜனநாயக தேர்தல் முறைமைக்கும் சட்ட ஒழுங்குக்கும் முழுக்க முழுக்க அமைவானது என்பதனால் சகல வேட்பாளர்களும் அதனை ஏற்றுக் கொண்டிருந்தனர். அதே போலவே நாமும் ஏற்றுக் கொண்டோம் .
அதன் பின்னர் 2016இல் நகர சபை விடயங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சை ஒன்று தொடர்பாகவும் எம்மோடு உரையாட வேண்டுமென அவர்கள் அழைத்திருந்தார்கள். நகர சபை விடயம் என்பது பொது நலன் சார்ந்த விடயம் என்பதனால் அதிலும் எமது கட்சியின் குழு கலந்து கொண்டிருந்தது.
6. NTJ என்ற அமைப்பும் அக்காலப்பகுதியில் சட்டரீதியாக இயங்கி வந்த ஒரு அமைப்பு என்பதனடிப்படையிலும் அவர்கள் அப்போது முன்வைத்த கோரிக்கைகள் நாட்டின் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் உட்பட்டவை என்பதனாலுமே எமது கட்சி அந்த உரையாடல்களை மேற்கொண்டது என்பதினை இங்கு ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
7. பிற்பட்ட காலத்தில் இவர்களால் முன்வைக்கப்பட்ட இனவாத-மதவாத கருத்துக்களையும், கடும்போக்கு வாத நிலைப்பாடுகளையும் எமது கட்சி ஒருபோதும் ஆதரிக்கவில்லை. மட்டுமன்றி அவற்றை கண்டித்தும் உள்ளது. இதன் காரணமாக எம்மோடு முரண்பட்ட அவர்கள் எமது கட்சிக்கும் எமது சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் எதிரான கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்கள். சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்கள் பலவற்றிலும் அவற்றை பரப்பி இருந்தார்கள். பின்னர், ஜனநாயக தேர்தல் முறைமைக்கு எதிரானதாக தமது நிலைப்பாட்டை இவர்கள் மாற்றிக் கொண்டதன் காரணமாக , ஜனநாயகத்தை பேணி , அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் கடந்த நகரசபை தேர்தலின் போது எமக்கெதிராக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். 2017 ஆரம்பத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் பின்னரே இவ் அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டதுடன் அதன் முக்கியஸ்தர்கள் சிலரும் பொலிசாரால் தேடப்படத் தொடங்கினார்கள். இதன் பின்னரே இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளோடு சம்மந்தப்பட்டவர்களாக பார்க்கப்படவும் தேடப்படவும் தொடங்கினர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
8. நாட்டின் சட்டத்தால் தடை செய்யப்படாதவர்களாக இருக்கின்ற வரை ஒரு தனி நபரோடு அல்லது ஒரு நிறுவனத்தோடு உரையாடுவதை எந்தவொரு ஜனநாயக கட்சிகளும் தவிர்ப்பதில்லை. நாட்டின் அரசாங்கமும் தவிர்ப்பதில்லை. அந்த வகையில் ஈஸ்டர் தின தாக்குதல்தாரியான ஒருவரின் தொழில் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல்களை அரசாங்க திணைக்களங்களே மேற்கொண்டிருக்கிறது என்பதனை இப்போது அறிய முடிகிறது. அவர்களின் சட்டபூர்வமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை செய்து ஊக்குவிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசாங்க விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இது அவரது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பும் பாராட்டுமென எவரும் கூற முடியாது. பயங்கரவாத நடவடிக்கைக்காக அரச விருது வழங்கப்பட்டது என இப்போது யாரும் கூறினால் அது பெரும் முட்டாள் தனமாகும்.
9. எமது நாட்டின் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது, ஜனநாயக வழியில் இருந்தவர்கள் பயங்கரவாதிகளாக சில போது மாறியிருக்கிறார்கள். அதுபோலவே பயங்கரவாதிகளாக இருந்தவர்கள் ஜனநாயக வழிமுறைக்கும் திரும்பியிருக்கிறார்கள். நம் நாட்டின் வரலாற்றில் இதுபோன்ற பல அனுபவங்களை நாம் எல்லோரும் சந்தித்து இருக்கின்றோம். இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு தொடர்பாடல் அல்லது சம்பவம் பற்றிப் பேசும் போது, அவை எந்தக்காலப்பகுதியில் நடந்தன என்பதினை பொறுப்புடன் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். அவ்வாறு செய்யத்தவறுவது பிழையான படு பாரதூரமான ஒன்றாகும். ஊடகங்களுக்கு கருத்துக்களை முன்வைப்போர் இது தொடர்பில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.
10. நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் அடிப்படைவாதம், இனவாதம், மதத்தீவிரவாதம், மற்றும் பயங்கரவாதம் ஆகிய அனைத்து தீமைகளுக்கு எதிராகவும் எமது கட்சி தொடர்ந்தும் உழைப்பதற்கு உறுதிபூண்டுள்ளது. அதுபோலவே இந்த நோக்கங்களுக்காக உழைக்க முன்வரும் அத்தனை சக்திகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கும் எமது கட்சி எப்போதும் தயாராகவே இருக்கின்றது.
இன,மத, மொழி வேறுபாடுகளை தாண்டி நாட்டின் நன்மைக்காகவும் சகல மக்களினதும் நல்வாழ்வுக்காகவும் உழைக்கின்ற எமது கட்சிக்கும் அதன் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் எதிராக முன்வைக்கப்படுகின்ற இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவையும் உண்மைக்கு புறம்பானவையுமாகும். எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து நமது தேசத்தை மேம்படுத்த வேண்டிய இக்கட்டான இந்த காலகட்டத்தில் அனைவரும் பொறுப்புடன் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் எனவும், நடந்து கொள்ள வேண்டும் எனவும் எமது கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.
Responsive and meaningful answers.
ReplyDelete