வீடுகளையும், வாகனங்களையும் தாராளமாக பயன்படுத்திய தற்கொலை குண்டுதாரிகள்
ஷங்ரி-லா விடுதியில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தது ஆறு வீடுகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டனர்.
குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், மற்றும் தற்கொலைக் குண்டுதாரியான இல்ஹாம் அகமட் ஆகியோர், கல்கிசை, லக்கி பிளாசா, கொள்ளுப்பிட்டி, தெமட்டகொட மகாவில கார்டன், கொச்சிக்கடை, படல்கும்புர, பிபிலை ஆகிய இடங்களில் வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்தனர்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான சஹ்ரான், அபு பக்தர், என்றும், இல்ஹாம் அகமட், அபு பாரா என்றும் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
15 வீடுகளின் உரிமையாளர்களின் வாக்குமூலங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அத்துடன் இந்த இரண்டு குண்டுதாரிகளும், தமது பாவனைக்காக முச்சக்கர வண்டிகள் இரண்டு, மற்றும் ஐந்து கார்களையும், வாடகைக்கு அமர்த்தியிருந்துள்ளனர் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment