புர்காவுக்கும், நிகாப்புக்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் - மல்வத்து மஹாநாயக்கர்
நாட்டின் அரசியல்வாதிகள் தற்போது முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு, மல்வத்து மகா சங்கத்தின் மஹாநாயக்கர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் தேசிய பாதுகாப்பு, நாட்டின் அபிவிருத்தி ஆகியன தொடர்பில் செயற்படக்கூடிய வகையில் தேசிய கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும் என மல்வத்து மஹாநாயக்கர் கூறியுள்ளார்.
பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் நாட்டில் உருவாகாமல் இருப்பதற்கு முன்னெடுக்கக்கூடிய அரச கொள்கையில் காணப்படவேண்டிய தீர்மானங்கள் குறித்தும் மஹாநாயக்கர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பை இரத்து செய்து பொதுவான வரைபொன்றை ஸ்தாபித்தல், ஒரு இனத்தவருக்கு மாத்திரம் வரையறைக்குற்படுத்தப்படும் கற்கை நிறுவகங்களுக்கு பதிலாக அனைத்து இனத்தவர்களும் கல்வியைப் பெறும் வகையிலான நிறுவனங்கள் மற்றும் பாடநெறிகளை அறிமுகப்படுத்துதல், மத கோட்பாடுகளுக்காக மாத்திரம் ஆரம்பிக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்களைத் தடை செய்வதற்கான கொள்கையை வகுத்தல் உள்ளிட்ட விடயங்கள் மல்வத்து மஹாநாயக்கரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரகால சட்டத்தின் கீழ் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு நிரந்தரமாகத் தடைவிதிப்பதற்குத் தேவையான சட்டங்களை வகுத்தல் மற்றும் அது குறித்து முஸ்லிம் மக்களைத் தௌிவுபடுத்துதல், தேசிய பாதுகாப்பின் நிமித்தம், நாட்டில் தேவையற்ற வகையில் தங்கியிருக்கும் வௌிநாட்டவர்களை நாடுகடத்துதல் மற்றும் அவ்வாறானவர்களுக்கு ஒத்தாசைகளை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு நிதி அறவிடுவதனூடாக முன்னெடுக்கப்படும் உணர்வுகளைத் தரப்படுத்துவதை உடனடியாக தடை செய்வது தொடர்பிலும் மல்வத்து மஹா சங்கத்தின் மஹாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment