மிகைப்படுத்தப்பட்ட, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான ஊடக செய்திகள் பற்றிய உண்மைநிலை
ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் அதற்கு முன்னரும் , பின்னரும் இடம்பெற்றுவரும் இனவாத தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக நாம் மனிதர்கள் என்றவகையிலும் , தமிழ் பேசும் மக்கள் என்றவையிலும் இலங்கையர் என்ற வகையிலும் இன ,மத வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றாக எழுந்து நிற்கவேண்டும் என்றும் இதன் மூலமாக மட்டுமே இலங்கை நாட்டை அனைவருக்கும் சாந்தியும் ,சமாதானமும் , அபிவிருத்தியும் , சுபிட்சமும் கொண்ட நாடாக கட்டியெழுப்ப முடியும் என்றும் அதற்காக நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையவேண்டும் என்பதையும் யாழ் - ஜம்மியத்துல் உலமா சபை இதய சுத்தியுடன் உறுதியாக நம்புகின்றது ,
நமது நாட்டை சாந்தியும் ,சமாதானமும் , அபிவிருத்தியும் , சுபிட்சமும் கொண்ட நாடாக கட்டியெழுப்புவதில் சமூகங்களுக்கிடையிலான சுமூகமான உறவு மிக முக்கிய பங்கை வகிக்கின்றது, என்பதை நாம் அறிவோம். ஆனால் நமது நாட்டில் சில ஊடகங்கள் தினமும் இன விரிசலையும், சமூகங்களுக்கிடையிலான இன, மத முரண்பாடுகளையும் ஊக்குவிக்கும் விதமாக மிகைப்படுத்தப்பட்ட,திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதன் மூலம் இனவாதத்தையும் ,மதவாதத்தையும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பரப்புரை செய்து சமூகங்களுக்கிடையிலான இன,மத மோதல்களுக்கும் அதன் மூலம் நாட்டின் அழிவுக்கும் வித்திடுகின்றன. குறிப்பாக தென்னிலங்கை ஊடகங்கள் சில இதை தம் முதல்பெரும் கடமையாக செய்திவருகின்றன, இந்த விஷமத்தனத்தை சமூக ஆர்வலர்களும் , கல்வியாளர்களும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
மறுபுறம் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சில ஊடகங்களும் , தமிழ் மொழி இணைத்தளங்களும் மிகைப்படுத்தப்பட்ட, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான செய்திகளை குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்கள்களை பயங்கரவாதத்துடன் தொடர்படுத்தி வெளியிட்டுள்ளமை எமக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. நாட்டின் மற்றைய மொழி ஊடகங்களுக்கு முன்னூதாரணமாக செயல்படவேண்டிய தமிழ் மொழி ஊடகங்கள் சிலவும் இப்படியான மிகைப்படுத்தப்பட்ட .திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றமை கவலைக்கும் கண்டனத்துக்குரியதாகும்.
அண்மைக்காலமாக தமிழ் மொழி இணைத்தளங்கள் அடங்கலாக சில யாழ் ஊடகங்களில் வெளிவந்துள்ள சில உண்மைக்கு புறம்பான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுக்கு உதாரணமாக இங்கு இரு செய்திகளை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக அமையும், முதலில் ஒஸ்மானியா கல்லூரி வீதி / ஆசாத் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த கொழும்பில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர் மற்றும் வர்த்தகரின் வீட்டில் காணப்பட்ட நிலக்கீழ் அறை தொடர்பில் கடந்த 13,14, ஆம் திகதிகளில் பத்திரிகை மற்றும் இணையத்தளங்களிலும் செய்தி மிகைப்படுத்தியும் ,திரிபுபடுத்தியும் பொய்யை கலந்தும் வெளிவந்திருந்தன , அப்படி வெளிவந்த ஒரு செய்தியில் '' யாழ்பாணத்துக்குள் புகுந்துள்ள ஐ.எஸ் பயங்கரவாதம் பொலிஸார் வெளியிட்ட பரபரப்பு தகவல்'' என்ற தலைப்பில் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி வெளிவந்திருந்தது, குறித்த செய்தியில்'' பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சோதனையின் போது அந்த சுரங்க அறை கண்டுபிடிக்கப்பட்டது'' என்றும் '' குறித்த பதுங்குகுழி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடைப்படைவாத குழுவொன்றின் கோரிக்கைக்கு அமைய நிர்மாணிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது '' என்றும் '' வீட்டின் உரிமையாளர் தப்பியோடிய நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் '' என்றும் ''அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினால் பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்டு சுரங்க அறையை நிர்மாணிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது '' என்றும் ''நிலக்கீழ் அறை மற்றும் சிறைச்சாலை ஒன்றை அமைக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர் எனினும் தங்களுக்கு பிடித்த முறையில் நிர்மாணித்துள்ளதாக சந்தேகநபரான வீட்டின் உரிமையாளர் போலீசாரிடம் குறிப்பிட்டுள்ளார் '' என்றும் உண்மைக்கு புறம்பான திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் இது பற்றி குறிப்பிடும் வீட்டின் உரிமையாளர் முஹம்மட் நஜாத் உண்மையில் குறித்த வீடு நாட்டின் ஏற்றப்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர் வீடுகளில் இடம்பெரும் பொதுவான சோதனை நடவடிக்கையின்போது குறித்த நிலக்கீழ் அறை விசேட அதிரடிப்படையினரால் கண்டுகொள்ளப்பட்டதாகவும் குறித்த வீட்டை தான் 2014 ஆம் ஆண்டு கொள்வனவு செய்தபோது அந்த நிலக்கீழ் அறை அங்கு அமைத்திருந்தது என்றும் அந்த நிலக்கீழ் அறையை தான் நிர்மாணிக்கவில்லை என்றும் , இது நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு கருதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பில் தான் கைது செய்யப்படவும் இல்லை, தடுத்துவைத்து விசாரிக்கப்படவும் இல்லை என்றும் ஊடகங்களில் தன்னையும் தனது வீட்டையும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுவருவதாகவும் கவலை தெரிவிக்கின்றார்.
இதேவேளை தான் கொழும்பில் வசிக்கும் வீடு சோதனையிடப்பட்டதாகவும் அதன்போது தான் வீட்டில்தான் இருந்ததாகவும் எங்கும் தலைமறைவாகவேண்டிய தேவை தனக்கு இருக்கவில்லை என்றும் ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதுடன் தனக்கும் தனது வியாபாரத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைத்துள்ளது என்றும் குறிப்பிடுகின்றார். மேலும் வீட்டில் அமைத்துள்ள நிலக்கீழ் அறையின் உண்மை நிலை தொடர்பில் இராணுவத்துக்கும் பொலிஸாருக்கும் முழுமையான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இது தொடர்பில் சாதாரண வழக்கு ஒன்று இடம்பெறுவதாகவும் இது இப்படி இருக்க ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுகின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக யாழ் மாணிப்பாய் வீதியில் அமைத்துள்ள முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஷரபுல் அனானும் , அந்த மஸ்ஜித்தின் இமாமும் கைதான விடயத்தை குறிப்பிடலாம். குறித்த மஸ்ஜித்துக்கு சொந்தமான காணியில் அமைத்துள்ள வாடகைக்கு விடப்பட்ட அறைகளில் ஒன்றில் இருந்து, அதில் தங்கியிருந்த வெளியூர் வியாபாரி ஒருவர் தரமற்ற தேயிலையை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மஸ்ஜித்தின் இமாமும், மஸ்ஜித்தின் நிர்வாகசபை தலைவரும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது பற்றி நிலைமையை புரிந்துகொண்ட பொலிஸார் தம்மை உடனடியாக விடுவித்தாக ஷரபுல் அனான் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்த விடயத்திலும் தமிழ் பேசும் ஊடகங்கள் உண்மையை தேடிப்பார்க்காமல் உண்மைத் தகவலை மக்களுக்கு கொண்டுசெல்லாமல் மஸ்ஜித்தின் இமாமையும் ,அதன் தலைவரையும் மையப்படுத்தி ஏதோ அவர்கள் இருவரும் வெடிகுண்டுகள் வைத்திருந்ததை போன்று பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட விடையம் போன்று செய்திகளை வெளியிட்டிருந்தன , இந்த பிரச்சினையை நோக்கும்போது மஸ்ஜித்தின் இமாமும் , மஸ்ஜித் தலைவரும் கைது செய்யப்பட்டிருக்கவேண்டியதில்லை என்பதுடன் இது முற்றிலும் குறித்த அறையில் தங்கியிருந்தவருடன் தொடர்புபட்ட சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய விடயமாகும் , இந்த விடயத்துக்கும் பயங்கரவாதத்துக்கு, மஸ்ஜித்தின் இமாமுக்கு அதன் தலைவருக்கும் இடையில் தொடர்பை காணமுடியாது ஆனால் சில ஊடகங்கள் இந்த சம்பவத்தையும் பயங்கரவாதத்துடன் தொடர்பு பட்டதைப் போன்று செய்திகளை வெளியிட்டிருந்தன. மேலும் இது போன்ற சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டும் , திரிபுபடுத்தப்பட்டும் வெளியிடப்பட்டுள்ள என்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.
ஊடகங்கள் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை களையவும் நாட்டில் ஒற்றுமை , அபிவிருத்தி , சுபிட்சம் ஆகிய உயர்த்த விழிமியங்கள் எட்டப்பட பங்களிப்பு வழங்கவேண்டும் என்றும் நீதியை நிலைநாட்ட உழைக்கவேண்டும் என்றும் குறிப்பாக தமிழ் மொழிமூல ஊடகங்கள் தமிழ் பேசும் மக்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்றப்படுத்த உழைப்பது அதன் தார்மீக பொறுப்பது என்பதை நாம் நினைவுபடுத்தும் அதேவேளை ஊடகங்கள் தகவல்களை வெளியிடும்போது ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா -யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட கிளை ஊடகங்களை பொறுப்புடன் வேண்டிக்கொள்கின்றது .
அஷ்-ஷெய்க் பி .ஏ .எஸ் சுபிfயான்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா - யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டம்
They have never learned a lesson from their 30 years journey.....
ReplyDeleteInwaatham kakkuhinra mediakaluku ungalin seyalpaattaal neenga happiyaaha waaluhinrom enru mattum ninaitthu widaatheerhal...unmai oru naal wellum...appothu ungalathu mediawin add.m irikkathu..
ReplyDelete