Header Ads



தேசிய தௌஹீக் ஜமாத்திற்கு எதிராக செயற்படும், முஸ்லிம்களை கடத்தி சிறைவைக்க திட்டமிட்ட சஹ்ரான்

சேனைப் பயிர்ச் செய்கை என்ற போர்வையில் தேசிய தௌஹீத் ஜமா அத் அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டு வந்த 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பயிற்சி முகாமொன்றை வெலிக்கந்தை பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளதாக குற்றத்தடுப்பு திணைக்கள பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை நுவரெலியா ப்ளக்பூல் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் நாற்பது பேருக்கு பயிற்சி  வழங்கக்கக்கூடிய இரண்டு மாடிக் கட்டடமொன்றையும் நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அம்பாறையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களுக்கு இணங்கவே மேற்படி முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக படைத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

சேனைப்பயிற்செய்கை போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட முகாம் பகுதியிலிருந்து ஒவ்வொன்றும் 500 கிராம் நிறையைக்கொண்ட 231 ஜெலிக்னைட்டுக்களையும் கைப்பற்றியுள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மேற்படி முகாமை அடிப்படைவாத பயங்கரவாதிகள் சேனை என்ற போர்வையில் நடத்தி வந்துள்ளனர். ஜெலிக்னைட் தயாரிப்பு நடவடிக்கைகள் இங்கு இடம்பெற்றுள்ளதுடன் இரசாயனத்தை உபயோகித்து குண்டுகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் உபயோகித்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் இதுபோன்ற வெடிப் பொருட்கள் மற்றும் இரசாயன பொருட்களைக் கொண்டே அவர்கள் தயாரித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மேற்படி காணி சஹ்ரான் என்ற பயங்கரவாதியால் மொஹமட் காதர் என்பவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது எனவும் தெரிவித்த அந்த அதிகாரிகள் குறித்த அந்த சந்தேக நபரை கைது செய்ததையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்டு வரும் பயிற்சி முகாம் சம்பந்தமாகவும் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலிக்னைட் தொடர்பாகவும் அவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்ப​டையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை தேசிய தௌஹீக் ஜமா அத் அமைப்புக்கு எதிராக செயற்படும் முஸ்லிம்களை கடத்தி சிறை வைப்பதற்கு இந்த இடத்தை பயன்படுத்தும் திட்டத்தை சஹ்ரான் கொண்டிருந்ததாகவும் சந்தேக நபரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்காக சஹ்ரான் சுரங்க வழி சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்ததாக மேற்படி திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நுவரெலியாவிலும் முற்றுகை

இதேவேளை, குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி என நம்பப்படும் சஹ்ரான் நுவரெலியா பகுதியில் நடாத்திய வகுப்புகள் குண்டு வெடிப்பு தொடர்பாக தனது குழுக்களை தெளிவுபடுத்தியமைக்காக பயன்படுத்திய ருவான்எளிய தர்மபாலபுர எனும் இடத்தில் அமைந்துள்ள புலு ஐ இன் எனும் இரண்டு மாடியை கொண்ட விடுதி ஒன்றை பாதுகாப்பு பிரிவினர் நேற்று (06) சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.

சஹ்ரானின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுடன் இருந்த குண்டு தயாரிப்பு தொடர்பாக பல நுணுக்கங்களை கொண்ட நபர் ஒருவர் 24 வயதுடைய காத்தான்குடியை வசிப்பிடமாக கொண்டவர். இவரிடம் அரசாங்க புலனாய்வு துறையினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணை யை தொடர்ந்தே இந்த வீட்டை பாதுகாப்பு தரப்பினர் இனம் கண்டு முற்றுகையிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே குறித்த வீடு தொடர்பாக புலனாய்வுத்துறை தகவல்களை திரட்டிய நிலையிலேயே நேற்று இதனை சுற்றி வளைத்துள்ளனர். இந்த வீடு தொடர்பான தகவலை வழங்கிய 24 வயதுடைய வாலிபர் தான் இங்கு நடைபெற்ற தெளிவூட்டல் வகுப்புகளில் கலந்து கொண்டதாகவும் அந்த கூட்டத்தில் தன்னுடன் 35 பேர் பங்குபற்றியதாகவும் புலனாய்வுத்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் இங்கு இடம்பெற்ற பயிற்சியில் கலந்து கொண்டுள்ளதாகவும் வெள்ளை நிற வீடு ஒன்றில் பயிற்சிகள் நடைபெற்றதாகவும் இந்த வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக விடியற்காலை 4.30 மணியளவில் இங்கு வருகை தந்ததாகவும் அவர்கள் இரண்டு வேன்களில் வருகை தந்து குறித்த வீட்டில் தங்கியுள்ளதுடன் அவர்கள் யாரும் ஒருவருடன் ஒருவர் கதைக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளதாகவும் ஆயுத பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதாகவு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் வகுப்புகளை நடத்துவதற்கு உதவியதாக கருதப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ள புலனாய்வு பிரிவினர் அவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வீட்டை நீண்ட நாள் வாடகைக்கு கம்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பிரதி பொலிஸ் அதிபர் ஈ.ஜயசூரிய மற்றும் பொலிஸ் அதிபர் ஈ.அய்.டீ.சுகதபால நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன பஸ்நாயக்க நுவரெலியா இராணுவ முகாமின் கட்டளையிடும் இராணுவ தளபதி மேஜர் அஜித் ரத்ணதிலக்க ஆகியோருடன் இணைந்து அம்பாறை புலனாய்வு துறையினர் மற்றும் நுவரெலியா புலனாய்வு துறையினர் ஆகியோர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கடந்த 5ம் திகதி காத்தான்குடி ஒல்லிக்குளம் பிரதேசத்தில் தௌஹீத் ஜமா அத் அமைப்புக்கு சொந்தமான பயிற்சி முகாமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கடந்த ஜனவரி 16ஆம் திகதி வனாத்தவில்லு பகுதியில் குற்றத்தடுப்பு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதும் அவ்வாறானதொரு முகாமாகும். அம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் பகுதிகளிலும் மேலும் இரண்டு முகாம்கள் உள்ளதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்து பொலிஸார் அது தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.