இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட, அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும்
அரசியலமைப்பின் 19ஆம் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கு என இரண்டு அதிகார முனைகள் ஏற்படுத்தப்பட்டமையே பாதுகாப்பு பிரிவு வீழ்ச்சுக்கு காரணமாகும் என நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
அத்துடன் இஸ்லாம் மதத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அடிப்படைவாதத்தை இல்லாமலாக்க முஸ்லிம் மக்கள் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று -08- கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாதுகாப்பு பிரிவை உறுதிப்படுத்தி அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுபோல் அடிப்படைவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் மனதை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தவேண்டும்.
தற்போது இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த முஸ்லிம் மக்கள் முன்வரவேண்டும். அதில் தற்போது முன்னேற்றத்தை கண்டு வருகின்றோம். முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
என்றாலும் நாட்டில் இடம்பெற்ற இந்த பேரழிவை சிலர் அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று சில ஊடகங்களும் இதற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன. நாட்டில் இன்று ஊடக சுதந்திரம் போதுமானளவு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதனை பயன்படுத்தி நாட்டில் இவ்வாறான பேரழிவுகள் இடம்பெறும்போது சமுக வலைத்தளங்கள் செயற்படும் முறை கவலையளிக்கின்றது. அதனால் இவ்வாறான நிலைமைகளில் செயற்படுவதற்கு ஊடகங்களுக்கு விசேட சட்ட திட்டங்களை ஏற்படுத்தவேண்டும்.
அத்துடன் அரசியலமைப்பின் 19ஆம் திருத்தம் காரணமாகவே பாதுகாப்பு பிரிவு வீழ்ச்சியடைந்திருக்கின்றது. 19ஊடாக இரண்டு அதிகார முனைகள் அமைக்கப்பட்டன. ஜனாதிபதி, பிரதமருக்கு அதிகாரங்கள் பிரித்து வழங்கப்பட்டதால் தீர்மானங்கள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகின்றது.
இரண்டு அதிகார முனைகள் இருக்கும் நிலையில் அரசாங்கத்துக்கு செல்ல முடியாது. அதனால்தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாது என்று தெரிவித்து வருகின்றோம் என்றார்.
Post a Comment