சஹ்ரான் பயன்படுத்திய 8 சிம்கார்ட்டுக்கள் - வைத்தியர், அரச ஊழியர், பணக்காரர் என முக்கிய சிலர் கைது
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் 86 பயங்கரவாத சந்தேக நபர்களின் கைத்தொலைபேசிகளும் தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களுக்கும் தடைசெய்யப்பட்ட தெளஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் மற்றும் அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் ஆகியோருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, இதுதொடர்பான விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பல்வேறு தொலைத்தொடர்பு நிலையங்களில் இருந்து இதுகுறித்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
இதேவேளை, பயங்கரவாதி சஹ்ரானால் 8 சிம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவரது சிம் அட்டைகளை ஆராய்ந்ததையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த, மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேவையாற்றும் நிஜாம் என்ற கணனி இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெருங்கோடீஸ்வரராவார். காத்தான்குடியைச் சேர்ந்த இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றும் வருகிறார்.
மேலும் ஒரு கோடீஸ்வரர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டு வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். இவருக்கு எவ்வாறு இந்தளவு தொகை பணம் வந்தது என்பதை அவரால் தெளிவுபடுத்த முடியாதுள்ளது என்ற அவர், மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேவையாற்றிய நிலையில் கைதான நிஜாம், சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் நேரடி தகவல் தொடர்புகளை பேணிவந்தவர்.
இதனிடையே, ஹொரவபொத்தானையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் சஹ்ரானுடன் நேரடி தொடர்புகளைப் பேணிவந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவர்களின் வங்கிக்கணக்கில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பணம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதி சஹ்ரானுடனும், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடனும் நேரடித் தொடர்பை பேணிவந்த நௌபர், சக்கிரியா, ஜெயனுதீன், இர்ஷான், ஜஸ்மின் ஆகிய ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கைதானவர்களில் ஹொரவபொத்தானை செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஒருவர், இரு அரச ஆசிரியர்கள், கிவுலுகட அரபிக் கல்லூரியைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் என ஐவர் அடங்குகின்றனர்.
இவர்கள் அநுராதபுரத்திலும் திருகோணமலையிலும் தீவிரவாதம் தொடர்பில் கருத்தரங்குகளை நடத்தியுள்ளனர். மேலும் இவர்களின் வங்கிக்கணக்கில் பெருந்தொகைப்பணம் உள்ளது. மேலும், இந்த சந்தேக நபர்கள் ஹொரவபொத்தானை காட்டுக்குள் ஆயுதப் பயிற்சியும் பெற்றுள்ளனர் என்றும் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Post a Comment