இந்நாட்டு முஸ்லிம்களுக்கோ, பள்ளிவாசல்களுக்கோ இந்த அரசு எதையும் செய்யவில்லை - ஐதேக Mp பரபரப்பு குற்றச்சாட்டு
பாராளுமன்றத்தில் நேற்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நடைபெற்றது. எனினும் நேற்றுக் காலை சுமார் 10.30மணி வரை அந்த அமைச்சுக்களுக்குப் பொறுப்பான செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்திருக்கவில்லை. அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இவ்விடயங்களுக்குப் பொறுப்பான முக்கியமான அரசாங்க உத்தியோகத்தர்கள் நேற்றைய நிதி ஒதுக்கீட்டு விவாதத்தை பார்வையிடுவதற்காக பாராளுமன்றத்துக்கு சமுகமளித்திருக்காமையானது பெரும் ஏமாற்றத்தையளித்திருப்பதாக சுட்டிக்காட்டிய இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே, இந்த அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் துரிதமாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென்றும் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேற்படி அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அரசாங்க உத்தியோகத்தர்களின் அலட்சியமானது பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு கிடைக்கவுள்ள சேவை தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிதி ஒதக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஹேஷா வித்தானகே எம்.பி இவ்வாறு மேற்படி அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அரசாங்க உத்தியோகத்தர்கள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறியதாவது;
தமிழ் முஸ்லிம் மக்களுடன் தொடர்புபட்ட முக்கிய இரண்டு அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதம் இன்று நடைபெறுகின்றபோதும்,அந்த அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அரசாங்க உத்தியோகத்தர்கள் அங்கு சமூகமளிக்காமை பெறும் ஏமாற்றத்தையளிக்கின்றது. அமைச்சுக்களின் செயலாளர்கள் இல்லாத நிலையில் இரண்டு அமைச்சர்கள் மட்டும் இங்கு வந்து உரையாற்றும் நிலை பாராளுமன்றத்தில் உருவாகியுள்ளது. அரசாங்கம் எதுவும் செய்யவில்லையென மக்கள் குறை கூறுவது சரிதான்.
பாராளுமன்றத்துக்குக்கூட வரமுடியாதவர்கள் எப்படி தமிழ், முஸ்லிம் மக்களின் தேவைகளை நிறைவேற்றப் போகின்றார்கள். 10இலட்சம் ரூபா பெறுமதியான வீடொன்றை நிர்மாணிப்பதற்கு ஒரு இலட்சம் ரூபா தரகு கூலி கேட்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இன்று பாராளுமன்றத்துக்கு வருகைதராத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இந்த தரகுக் கூலியுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.இந்த வீடுகள் சிறந்த தரத்தில் நிர்மாணிக்கப்படவில்லை.இவற்றின் சுவர்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. தோட்டப்புற தமிழ் மக்களை ஒதுக்கி வைக்காமல் அவர்களையும் இந்நாட்டின் பிரஜைகளாக மதித்து அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
உண்மையில் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுக்காக எதுவும் செய்யப்படவில்லையென்றுதான் கூறவேண்டும். ஆகக்குறைந்தது பள்ளிவாசல்களுக்குக்கூட அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை.
இவ்விடயத்தை பிரதமரும் கவனத்திற் கொள்ள வேண்டுமென நான் கேட்டுக் கொள்கின்றேன். இலவசமாக கிடைக்கும் பேரீச்சம்பழங்களை கூட நாம் சரியாக விநியோகிப்பதில்லை.
இந்நிலை தொடர்ந்தால் இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் ஆதரவை இழக்க நேரிடும்.சிங்களவர்களைப்போன்றே தமிழ் முஸ்லிம் மக்களும் நடத்தப்பட வேண்டும். அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Govt. has given 2 cabinet minister posts and cheated the entire Muslim community.
ReplyDelete