முஸ்லிம் அமைச்சுக்கான நிதியில் வெட்டு - பிரதமரை தலையிட கோருகிறார் ஹேஷா விதானகே Mp
முஸ்லிம் மக்களுக்கு சேவை செய்யவிருக்கும் ஒரே அமைச்சு முஸ்லிம் சமய விவகார அமைச்சாகும். அந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி போதுமானதாக இல்லை. இது தொடர்பாக பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு சேவை செய்யவிருக்கும் ஒரே அமைச்சு முஸ்லிம் சமய விவகார அமைச்சாகும். வேறு எந்த அமைச்சினாலும் முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட ரீதியில் சேவை செய்ய முடியாது. அமைச்சர் ஹலீம், முஸ்லிம் மக்களுக்கு ஏதாவது வேலைத்திட்டத்தை செய்யவேண்டும் என்று முயற்சிக்கின்றார். என்றாலும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் மிகவும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
அதனால் பிரதமருடன் கலந்துரையாடி முஸ்லிம் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரே அமைச்சாக இருக்கும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சுக்கு மேலதிக நிதியை பெற்றுக் கொண்டு அந்த மக்கள் எதிர்பார்க்கும் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது எமது அரசாங்கத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.
அத்துடன் கடந்த 4 வருடங்களில் நான் பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதேசத்தில் ஒரு பள்ளிவாசலுக்கேனும் அமைச்சரால் உதவி செய்ய முடியாமல் போயிருக்கின்றது. அதற்குத் தேவையான நிதி இல்லாமையே காரணமாகும். மேலும் முஸ்லிம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பேரீச்சம் பழங்களை விநியோகிப்பதிலும் கடந்த 4 வருடங்களும் முறையாக மேற்கொள்ள முடியாமல் போயிருக்கின்றது. அதனால் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குறைபாடுகள் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படாமல் அமைச்சர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
-Vidivelli
Post a Comment