அச்சமடைந்துள்ள பொதுமக்களினதும், பிரதேசத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஹரீஸ் வேண்டுகோள்
சாய்ந்தமருது, கல்முனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பாதுகாப்பினையும் மக்களின் இயல்வு வாழ்க்கையையும் உறுதிப்படுத்துமாறு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாய்ந்தமருது வெலிவோரியன் வீட்டுத்திட்ட பிரதேசத்தி;ல் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களிடம் பொலிஸார் நேற்றைய சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த உள்ளுராட்சி மற்றும் மாகாண இராஜங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பொதுமக்களிடம் நலன்களை விசாரித்ததுடன் தனது ஆறுதலை தெரிவித்த அவர் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதன்போதே மேற்படி வேண்டுகோளினை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் விடுத்தார்.
தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்,
சாய்ந்தமருது பொதுமக்களினதும், ஹிஜ்ரா பள்ளிவாசல் நிர்வாகத்தினரினதும் துணிச்சலான நடவடிக்கையினால் தற்கொலை குண்டுதாரிகள் என சந்தேகிக்கப்படுவர்கள் சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி வீட்டுத்திட்டத்தினுள் தங்கியிருப்பதாக பொலிசாருக்கு வழங்கிய தகவல்களை அடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் இப்பிராந்தியத்தில் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்த சம்பவம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களின் விழிப்புணர்வே காரணமாகும். இம் மும்மாதிரியான செயற்பாட்டினை பாராட்டுகின்றேன். இவ்வாறான விழிப்புணர்பு செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் ஏற்படவேண்டும்.
இன்று எமது நாட்டுக்கு சர்வதேச பயங்கரவாதிகளினால் சவால் விடுக்கப்பட்டுள்ளது. இப்பயங்கரவாத செயற்பாடுகளில் முஸ்லிம்களில் சிலர் ஈடுபடுவதனால், இன்று நாட்டில் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் இனவாதிகள் உள்ளிட்ட பலர் விரல் நீட்டுகின்றனர்.
எனவே முஸ்லிம் சமூகத்தின் மீது விழுந்துள்ள இந்தப் பழிச் சொல்லினை எமது சமூத்தினர்கள் கட்சி வேறுபாடுகள் மற்றும் கொள்கை வேறுபாடுகளை மறந்து இந்த பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவுவோர்களுக்கு எதிராக ஒன்றிணைந்து துரிதமாக செயற்பட வேண்டும். எமது தேசத்தைத பாதுகாக்க முப்படையினருக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அச்சமடைந்துள்ள பொதுமக்களினதும் பிரதேசத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுதத்துடன் மக்களின் இயல்வு வாழ்வை உறுதிப்படுத்துமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
Post a Comment