Header Ads



இந்தியாவில் மிகமோசமான நிலையில், முஸ்லிம்களின் நிலை

- யூசூப் அன்சாரி -

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆளப் போகும் கட்சியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றன. இந்த தேர்தலில் மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால், இந்துகளுக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்ட இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட அமைதியில் நீடிப்பதுதான்.

அதாவது, இந்த தேர்தலில் முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. அதுமட்டுமின்றி, முஸ்லிம்களின் பிரச்சனைகளை அரசியல்மயமாக்கி, அதன் மூலம் தேர்தல் ஆதாயங்களை உருவாக்கிய அரசியல் கட்சிகளும் பெரியளவில் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில், முஸ்லிம்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் குறித்து தேர்தலின்போது விவாதிக்கப்படவில்லை எனில், புதிய அரசு பதவியேற்றவுடன் மக்களவையில் இதுகுறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி எழுகிறது.

இருப்பினும், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் மக்களவையில் இருப்பார்களா என்ற மற்றொரு ஐயமும் எழுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்தது முதல் இதுவரையிலான காலக்கட்டத்தில், மக்களவைத் தேர்தலின்போது முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்து முதன்மையாக விவாதிக்கப்படாத தேர்தலாக இதுவே இருக்குமென்று நான் கருதுகிறேன்.

காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தாங்கள் முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்து பேசினால் அது அரசியலாக்கப்பட்டு, கடைசியில் பாஜகவுக்கே பலனளிக்கும் என்று அஞ்சுகின்றன.

இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், இந்து மக்களின் வாக்கு திசைமாறி போகும் என்ற பயத்தில், முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் கூட முஸ்லிம் வேட்பாளர்களை நிறுவத்துவதற்கு பல்வேறு கட்சிகள் அஞ்சுகின்றன.

எப்போது முதல் இந்திய மக்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்து முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைய ஆரம்பித்ததன் மூலம் இந்த போக்கை புரிந்துகொள்ள முடியும்.

இந்தியாவின் எட்டாவது மக்களவையில் மொத்தம் 46 உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருந்த நிலையில், வெறும் இரண்டு பேர்தான் பாஜகவை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வெற்றிபெற்றது. அப்போது முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22ஆக சரிவடைந்தது. கடந்த மக்களவை தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலிருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட வெற்றிபெறவில்லை.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் மொத்தம் 14.2 சதவீதம் பேர் இஸ்லாமிய சமயத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநித்துவம் இருக்க வேண்டுமென்று சில தரப்பினர் கூறுகிறார்கள். அந்த வகையில் பார்த்தாலும் கூட, இந்திய மக்களவையில் மொத்தம் உள்ள 545 இடங்களில், 77 இடங்களில் முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்திய மக்களவை வரலாற்றில் இந்த எண்ணிக்கை தொடப்பட்டதாக சரித்திரமே இல்லை.

இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலின்போது மொத்தம் 449 இடங்கள் இருந்தன. அவற்றில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 21, அதாவது 4.29 சதவீதம் மட்டுந்தான்.

சுதந்திர இந்தியா வரலாற்றிலேயே கடந்த மக்களவையில்தான் குறைந்த விகிதத்தில் முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதாவது, மொத்தமுள்ள 545 இடங்களில் 23 பேர் அதாவது 4.24 சதவீதம் பேர் மட்டுந்தான் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலின்போது, நாடு பிளவடைந்திருந்த சூழ்நிலை என்பதால், அப்போது குறைந்த அளவிலான முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது.

ஏனெனில், பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானதன் மூலம் முஸ்லிம்கள் தங்களுக்கான பங்கை பெற்றுவிட்டதாக அப்போது கருதப்பட்டது.

ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகாலம் ஆன பிறகும்கூட, மக்களவையில் முஸ்லிம்களின் நிலையை பார்க்கும்போது அவர்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்களா என்று நினைக்க தோன்றுகிறது.

இதற்கு முன்புவரை முஸ்லிம்களின் பிரச்சனைகளை அரசியலாக்குவதன் மூலம் தேர்தலில் லாபமடைந்த கட்சிகள், தற்போது தாங்கள் அதிகளவில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினால் இந்துகளின் வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற எண்ணத்தில் முஸ்லிம்களுக்கு போதிய இடம் தர மறுக்கின்றன.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளை உற்றுநோக்கும்போது மேற்கூறியவை குறித்த விரிவான பார்வை கிடைக்கிறது.

16ஆவது மக்களவைத் தேர்தலின்போது, நாட்டிலுல்ள 29 மாநிலங்களில் வெறும் 7 மாநிலங்களில் இருந்து மட்டுந்தான் முஸ்லிம் வேட்பாளர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது, அதிகபட்சமாக மேற்குவங்கத்திலிருந்து எட்டு பேரும், பீகாரிலிருந்து 4 பேரும், ஜம்மு & காஷ்மீர் மற்றும் கேரளாவிலிருந்து தலா மூன்று பேரும், இருவர் அசாமிலிருந்தும், தமிழ்நாட்டு தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மேற்குறிப்பிட்டுள்ள இந்த மாநிலங்களில் மட்டும், இந்தியாவிலுள்ள மொத்த முஸ்லிம்களில் 46 சதவீதத்தினர் வசிக்கின்றனர்.

மற்ற 22 மாநிலங்கள் மற்றும் ஆறு யூனியன் பிரதேசங்களிலிருந்து ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்களில் 54 சதவீதத்தினர் இந்த பகுதிகளில் வசித்தாலும், அங்கிருந்து ஒருவர்கூட மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

முஸ்லிம் உறுப்பினர்களின் வீழ்ச்சி

இதுவரை நடந்த 16 மக்களவைத் தேர்தல் குறித்த தரவுகளை உற்றுநோக்கினால் சில சுவாரஸ்யமான விடயங்கள் தெரிய வருகிறது.

இந்தியாவின் முதலாவது மக்களைத் தேர்தலின்போது, முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 21ஆக இருந்த நிலையில், அது சீராக அதிகரித்து, இருப்பதிலேயே அதிகபட்சமாக ஏழாவது மக்களவையில் 49 உறுப்பினர்களாக இருந்தது.

பிறகு 1984ஆம் ஆண்டு ஆண்டு தேர்தலின்போது பாஜக 86 இடங்களை வென்ற நிலையில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 46ஆக குறைந்தது.

 மக்களவைத் தேர்தல் 2019: பாஜகவின் வளர்ச்சியும், முஸ்லிம்களின் வீழ்ச்சியும்Getty Images
அடுத்ததாக, 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, பாஜக 85 இடங்களை வென்றிருந்த நிலையில், முஸ்லிம்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து 33 ஆனது.

அப்போது முதல் மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய நிலையில், முஸ்லிம்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியடைய தொடங்கியது.

1991ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 120 இடங்களில் வென்ற நிலையில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது.

1996ஆம் ஆண்டு பாஜக 163 இடங்களிலும், முஸ்லிம்கள் 28 இடங்களிலும் வென்றனர்.

இந்து முஸ்லிம் என பிரிந்து நிற்கிறதா இந்திய ராணுவம்?
அலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுன்டரும் - உண்மை என்ன? பிபிசி கள ஆய்வு
1998ஆம் ஆண்டு பாஜக 182 இடங்களிலும், முஸ்லிம்கள் 29 இடங்களிலும் வென்றனர்.

ஆனால், 1999ஆம் ஆண்டு மட்டும் பாஜக 182 தொகுதிகளை பெற்றிருந்த போதிலும், 32 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருந்தனர்.

2004ஆம் ஆண்டு பாஜகவின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 138ஆக குறைந்தபோது, முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்தது.

ஆனால், 2009ஆம் ஆண்டு நடந்த 15ஆவது மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மீண்டும் வீழ்ச்சியடைந்து 30 ஆனது.

கவனிக்கத்தக்க விடயம்

இந்தியாவின் மக்களவையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில், குறைந்து வருவது மிகவும் முக்கியமான விடயம். ஆனால், இதுகுறித்து ஒருவர்கூட கவலைப்படுவதாக இல்லை.

இந்தியாவில் நசுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல் அவர்களில் ஒருவரை பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பதற்கென்று தனி இட ஒதுக்கீடு உள்ள நிலையில், அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் இடம் அளிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை, தலித்துகளை விட மோசமாக உள்ளதாக 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ப தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அதே அணுகுமுறை முஸ்லிம்களுக்கு மட்டும் கொடுக்கப்படாதது ஏன்?




1 comment:

  1. இந்தியா உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு. இதனால் தான் பாக்கிஸ்தான்-பங்களாதேஷ் என முஸ்லிம்களுக்கு என தனிநாடுகள் பிரிக்கப்பட்ட பின்னரும் பெரும் தொகையான முஸ்லிம்களுக்கு பாக்கிஸ்தானைக்கு இடம்பேர விரும்பவில்லை.

    இலங்கையில் தான் தவறான, ஜனநாயகம் அற்ற முறையில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.