சஹ்ரானின் தங்கச்சி, வழங்கியுள்ள செவ்வி
கடலோர நகரமான காத்தான்குடியில் வாழும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான முகமது காசிம் மதானியா நம்பிக்கையின்றி காணப்படுகிறார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களில் 350-க்கு மேலானோர் கொல்லப்பட்ட நிலையில் தற்கொலை குண்டுதாரிகள் குழுவின் தலைவராக தனது சகோதரர் சஹ்ரான் காசிம் கூறப்படுவது இவருக்கு தெரிய வந்துள்ளது.
நடந்தவை பற்றி கோபமடைந்துள்ள அவர், அடுத்து என்ன நடக்கும் என்று அச்சப்படுகிறார். காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், சந்தேக நபராக நடத்தப்படவில்லை.
பெருஞ்செல்வந்தரின் இரண்டு மகன்கள் உள்பட பல தற்கொலை குண்டுதாரிகளை வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் காசிம் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
இலங்கையில் நிகழ்ந்த இந்த தாக்குதல்களின் சூத்திரதாரி என்று கருதப்படும் மௌலவி சஹ்ரான் காசிமின் பூர்வீக வீடும், அவரது பள்ளிவாசலும் இருக்கும் காத்தான்குடிக்கு சென்றது பிபிசி.
கடும்போக்கு பரப்புரையாளரான சஹ்ரான் காசிம் வளர்ந்தது எல்லாமே காத்தான்குடியில்தான்.
சஹ்ரான் காசிமின் சகோதரியின் வீட்டை கண்டுபிடித்து, அங்கு பிபிசி சென்றது. தொலைக்காட்சிக்கு பேட்டியளிப்பதை தவிர்த்த அவர், பிபிசியிடம் பேசுவதற்கு ஒப்புக்கொண்டார்.
வெள்ளை நிற ஸ்கார்ஃப் அணிந்திருக்கும் மதானியா முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கும் காத்தான்குடியில் சங்கடத்துடன் உட்கார்ந்திருக்கிறார்.
நிச்சயம் தன் மீது கவனம் குவிவதை மதானியா விரும்பவில்லை.
ஐந்து சகோதரிகளில் மதானியாதான் மிகவும் இளையவர். காசிமுக்கு வயது நாற்பது இருக்கும். அவர்தான் மூத்தவர். தனது சகோதரருடன் 2017-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித தொடர்பும் இருக்கவில்லை என்கிறார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களுக்கு பிறகு, இந்த தாக்குதலின் சூத்திரதாரி என நம்பப்படும் சஹ்ரான் ஐஎஸ் குழுவின் தலைவர் அபு பகர் அல் - பாக்தாதிக்கு விசுவாசம் காட்ட உறுதியேற்க அழைப்பு விடுக்கும் விதமான ஒரு காணொளி பரவியது.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ் அமைப்பு கூறும் எட்டு பேரில் முகம் தெரியக்கூடிய ஒரே நபர் சஹ்ரான்தான்.
ஆனால் இலங்கை காவல்துறை ஒன்பது பேர் இந்த தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிடுகிறது. ஒரு பெண் உள்பட இந்த தாக்குதலாளிகள் அனைவரும் உள்நாட்டுக்காரர்கள் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் இவர்கள் அனைவரும் 'நன்கு படித்தவர்கள்' மற்றும் 'நடுத்தர குடும்பத்தினர்' என்றும் இதில் ஒருவர் பிரிட்டன் மற்றும் ஆஸ்த்ரேலியாவில் படித்தவர் என்றும் காவல்துறை கூறுகிறது.
பிரபல வணிகர் ஒருவரின் இரண்டு மகன்கள் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளனர். ஒருவரின் மனைவி காவல்துறையின் சோதனையின்போது தன்னை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் அவரது இரண்டு குழந்தைகளும் இறந்தனர் என பல காவல்துறை அதிகாரிகளும், காவல்துறை வட்டாரங்களும் தெரிவிக்கின்றனர்.
''நான் அவரது செயல்களை ஊடகங்களில் பார்த்தே தெரிந்துகொண்டேன். எந்த ஒரு கணத்திலும் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை'' என மதானியா தனது சகோதரர் பற்றி குறிப்பிடுகிறார்.
"எங்களுடன் நன்றாக பழகுவார். சமூகத்தோடு நல்ல ஐக்கியமாக அவர் இருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர் எங்களோடு எந்த தொடர்பிலும் இல்லை. என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது. ஊடகங்களில் வந்துள்ள சில விசயங்களை நாங்கள் பார்க்கிறதே இல்லை. அவரோடு உள்ள தொடர்பு அறுந்துவிட்டது," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
நான் இதனை கடுமையாக கண்டிக்கிறேன். எனது அண்ணண் இந்தச் செயலை செய்திருந்தாலும் கூட கண்டிப்பாக என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இனியும் அவரைப் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் ஓர் அடிப்படைவாத இஸ்லாமிய மதபோதகர். சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்தின் மீது இறை நம்பிக்கையற்றவர்களை கண்டித்து யூடியூப் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் பல காணொளிகளை அவர் பதிவிட்டதன் வாயிலாக உள்ளூரில் இவரது முகம் தெரியத்துவங்கியது.
இந்த காணொளிகள் புத்த மதத்தினர் அதிகம் வாழும் இலங்கையில் சிறுபான்மையினரான மற்ற முஸ்லிம்களிடையே கவலைகளை உண்டாக்கியது.
மதத் தலைவர்கள் இது தொடர்பாக தங்களது கவலைகளை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் ஆனால் அவை புறந்தள்ளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதிகாரிகளோ தங்களால் சஹ்ரான் தலைமறைவான பிறகு கண்டறிய முடியவில்லை எனக் கூறுகிறார்கள்.
ஆனால் கிழக்கு இலங்கையின் சிறிய நகரத்தின் பகுதிநேர மத போதகர் இந்த கொடூர தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்தியிருக்கக் கூடும் என நம்புகிறார்கள்.
ஏற்கனவே உள்நாட்டு போரின் மூலமாக இலங்கை உலக கவனம் பெற்ற நிலையில் உள்ளூர் தீவிரவாதிகள் மற்றும் சர்வதேச தீவிரவாத குழுவான ஐஎஸ் இடையே தொடர்பு இருப்பது மீண்டும் இலங்கை மீது கவனம் குவிய காரணமாகியிருக்கிறது.
''எங்களது குழந்தைப்பருவத்தில் எங்களிருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. அப்போது அண்டை வீட்டாருடன் மிகவும் நட்புறவோடு இருந்தார். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை,'' என்கிறார் மதானியா.
காசிமுக்கு நேரடியாக ஐஎஸ் உடன் தொடர்பு இருக்கிறதா இல்லையா அல்லது இந்த தாக்குதலை நடத்தியதாக கோரும் ஐஎஸ் குழுவுக்கு விசுவாசம் காட்ட உறுதிமொழி ஏற்ற உள்ளூர் ஜிகாதியா என்பது தெளிவாக தெரியவில்லை.
காத்தான்குடி மட்டக்களப்பு நகரத்துக்கு அருகே இருக்கிறது. இங்குதான் ஈஸ்டர் திருநாளன்று சீயோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர்.
ஐம்பதாயிரம் மக்களுக்கும் குறைவானவர்கள் வசிக்கும் இந்நகரம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
நான் காசிமின் வீட்டை கண்டுபிடிக்க முயன்றபோது பலர் இதற்கு அடையாளம் காட்ட தயங்கினார்கள். அவரைப் பற்றி பேசவே மக்கள் பயப்படுகிறார்கள்.
''எங்களது பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பது உண்மையில் கவலையளிக்கிறது. நாங்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறோம் இதனால் கடும் வருத்தமடைந்திருக்கிறோம். எங்களது சமூகம் கடும்போக்காளர்களை ஆதரிப்பதில்லை. நாங்கள் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையுடன் வாழவே விரும்புகிறோம்'' என காட்டான்குடி மசூதிகள் கூட்டமைப்புத் தலைவர் மொஹம்மத் இப்ராஹிம் மொஹம்மத் ஜுபைர் கூறுகிறார்.
நான் காட்டான்குடிக்குச் சென்றபோது படுகொலைகளை கண்டித்து ஒருநாள் கடையடைப்பு நடத்தப்பட்டிருந்தது.
ஜுபைர் என்பவர் அந்த அடிப்படைவாத மத பரப்பாளரை பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததாக கூறுகிறார். உள்ளூர் நடைமுறைகளுக்கு மாறாக அவர் பின்பற்றும் இஸ்லாமிய மரபுகள் குறித்து அவரிடம் பேசியதாகவும் கூறுகிறார். இஸ்லாமிய சமூகம் வன்முறையை வெறுப்பதாகவும் மேலும் இளைஞர்கள் தீவிரவாத செயல்களுக்காக மூளைச்சலவை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது எனக் கூறியுள்ளார்.
சஹ்ரானின் கடும்போக்கு பார்வைகள் காரணமாக பிரதான இஸ்லாமிய குழுக்கள் அவரை தங்களது கூட்டங்களில் பேச அனுமதிக்கவில்லை. இதையடுத்து காத்தான்குடியில் என்டிஜே எனும் தேசிய தவ்ஹீத் ஜமாத்தை தோற்றுவித்தார் ஹஷிம்.
கடற்கரையருகே அவர் மசூதியை கட்டியெழுப்பியிருக்கிறார். அந்த கட்டடத்தில் அவர் பிரார்த்தனைகளையும், மத வகுப்புகளையும் நடத்தியிருக்கிறார். அவரது சர்ச்சைக்குரிய வெறுக்கத்தக்க பேச்சு சமூக வலைதளங்களில் பரவியத்தையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் என உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
அவர் தலைமறைவானாலும் வெறுப்பூட்டும் விதமான காணொளிகளை தொடர்ந்து பதிவிட்டுவந்தார். உண்மையில் அவர் தோற்றுவித்த தேசிய தவ்ஹீத் ஜமாத்திலிருந்து உறவை துண்டித்துவிட்டாரா என்பதில் சிலருக்கு சந்தேகம் இருக்கிறது.
பிரதான என்டிஜே வில் இருந்து ஒரு குழு பிரிந்து தனியாக உதயமானதாக இலங்கையின் ராஜீய பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தனே கூறுகிறார்.
இன்னமும் சஹ்ரான் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரா என்பது தெளிவாகவில்லை.
ஆனால் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. அரசு கூறுவது போல இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் நிச்சயம் அயல்நாட்டில் இருந்து சில உதவிகளை பெற்றிருக்கக்கூடும்.
எமது உரையாடலின்போது சஹ்ரானின் சகோதரி அவரது வயதான பெற்றோர்கள் ஈஸ்டர் தாக்குதல் நடந்ததற்கு சில நாள்களுக்கு முன் இப்பகுதியிலிருக்கும் வீட்டிலிருந்து வெளியேறியதாக கூறுகிறார். அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவிக்கிறார்.
''எனது சகோதரர் அவர்களை எங்காவது வைத்து தொடர்பில் இருக்கக் கூடும் என எண்ணுகிறேன்,'' என்றார் அவர். சஹ்ரானின் இளைய சகோதரரை காவல்துறை தேடி வருகிறது.
சஹ்ரான் மற்ற மக்களின் பாதையிலிருந்து விலகிப்போன ஒருவர் என மற்ற முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து தெரிவிக்கிறார்கள். அறிவற்ற இந்த தாக்குதலுக்கு மற்ற இலங்கையர்களை போலவே அவர்களும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ஆனால இந்த சிறிய நகரம் முழுவதும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுமோ என அச்சம் சூழ்ந்திருப்பதே மிகவும் உண்மையான சேதி.
Post a Comment