மதங்களின் பெயரால், மக்களை பிளவுப்படுத்தாதே - மோடி மீது முஸ்லிம் லீக் பாய்ச்சல்
உத்தரபிரதேசம் மாநிலம், அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடுதலாக கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
ராகுலின் இந்த முடிவுக்கு கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யாராக இருக்கும்? என்ற ஆவல் அந்த தொகுதிவாழ் மக்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுவார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
'வயநாடு தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளியின் பெயரை நான் பெருமையுடன் அறிவிக்கிறேன். மிக ஆற்றல் வாய்ந்த வீரியமான இளம்தலைவரான துஷார் வெள்ளப்பள்ளி நம்முடைய சமூகநீதி மற்றும் வளர்ச்சி ஆகிய குறிக்கோள்களின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவருடன் இணைந்து கேரள அரசியலில் மாற்றுசக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி மாறும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநில அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஆகிய இரு அணிகளின் ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி இருக்கும் நிலையில் இம்மாநிலத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 'எழவா’ உள்ளிட்ட வகுப்புகளை சேர்ந்த சில தலைவர்களால் பாரத் தர்ம ஜன சேனா கட்சி உருவாக்கப்பட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கேரளாவில் உள்ள இந்து மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகி வரும் பாரத் தர்ம ஜன சேனா கட்சியின் தலைவரான துஷார் வேளப்பள்ளியை, ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது, அங்குள்ள பாஜகவினரிடையே மிகுந்த உற்சாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இந்த தொகுதியில் பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டி வரும் வயநாட்டில், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் மோடி இறங்கியுள்ளதாக முஸ்லீம் லீக் கட்சி தலைவர் சையிது முனவ்வர் அலி ஷிஹாப் தாங்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'இந்த நாட்டில் பெரும்பான்மை மதமாக இருக்கும் மக்கள் அதிகமாக வாழும் தொகுதியில் போட்டியிடாமல், சிறுபான்மையினத்தவர்கள் அதிகமாக வாழும் வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி பயந்து ஓட்டம் பிடிக்கிறார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை சுட்டிக்காட்டி இன்று கருத்து தெரிவித்த சையிது முனவ்வர் அலி ஷிஹாப் தாங்கல் , பிரதமரின் இது போன்ற முதிர்ச்சியற்ற பேச்சு வருத்தமளிக்கிறது. தேர்தலுக்கு முன்னர் மதங்களின் பெயரால் மக்களை பிளவுப்படுத்த மோடி முயற்சி செய்கிறார். நாங்கள் அனைவருமே இந்தியர்கள் தான்.
மலைவாழ் மக்கள் , பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் தனிமைப்படுத்தப்பட்ட இந்த மலைப்பிரதேசத்தில் போட்டியிட முன்வந்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நான் பாராட்டுகிறேன். இந்த தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் முஸ்லிம் லீக் தலைமையிலான கூட்டணி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது “kettle calling the pot black” என்கின்ற கதையாக இருக்குது.
ReplyDeleteஇவருடைய கட்சியின் பெயரை “முஸ்லிம் லீக்” என வைத்துக்கொண்டு மோடியை மதவாதி என்கிறார். காமெடி பீசு.