Header Ads



நழுவுகிறது சு.க. ஐதேக யுடன் இரகசிய பேச்சு - இறுதி வாக்கெடுப்பிலும் பங்கேற்கமாட்டார்கள்

வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐதேகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தாபய ராஜபக்ச போட்டியில் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள், அதிபர் தேர்தலில் ஐதேகவை ஆதரிக்கக் கூடும் என்றும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த செவ்வாய்கிழமை சிறிலங்கா அதிபரின் இல்லத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று இறுதியான முடிவை எடுக்க முடியவில்லை.

அதிபர் செயலகம் மற்றும் சிறிலங்கா அதிபரின் கையில் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் உள்ளடக்கியது என்பதால், இந்த வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முடியாது என்று சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெளிவாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் அல்லது, வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.