தெஹிவளை தற்கொலை குண்டுதாரி பற்றி அவரது தங்கை வழங்கிய பேட்டி - தாஜ் சமுத்ராவில் குண்டை வெடிக்கவைக்க இருந்தாராம்..!
“வெளிநாட்டுக்கு சென்ற எனது சகோதரன் அடிப்படைவாதியாக திரும்பி வந்தார். அவர் ஒரு தற்கொலைதாரியா என்று கேள்விப்பட்டதும் ஒரு கணம் அதிர்ந்து போனேன். சிறுவயதில் அவரிடம் இருந்த மகிழ்ச்சி குறும்புத்தனம் என்பவற்றை என்னால் நினைக்க முடிகிறது.என்னால் எதனையும் ஜீரணிக்க முடியவில்லை.”
இப்படி தெரிவித்துள்ளார் தெஹிவளையில் தற்கொலை குண்டை வெடிக்கவைத்துக்கொண்ட அப்துல் லத்தீப் ஜெமீல் மொஹம்மட்டின் சகோதரி சம்சுல் ஹிதாயா . லண்டன் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இப்படி தெரிவித்துள்ளார்.
ஆறு சகோதர சகோதரிகளின் ஒருவரான ஜெமீலின் காலஞ்சென்ற தந்தை கண்டியில் ஒரு தேயிலை வர்த்தகராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் 1982 ஆம் ஆண்டில் பிறந்தவர்.நன்கு வசதிகள் கொண்ட ஜெமீல் குறித்து அவரின் சகோதரி மேலும் கூறியிருப்பதாவது,
லண்டன் சென்று கல்வி கற்று கற்று திரும்பிய போது அவர் நன்றாக இருந்தார். ஆனால் ஆஸ்திரேலியா சென்று திரும்பி வந்தபோது அவர் முற்றிலும் மாறுபட்டவராக காணப்பட்டார்.
சிறுவயதில் இருந்த நகைச்சுவை குணம் அவரிடம் இருக்கவில்லை. சீரியஸாக இருந்தார்.தெரியாத யாருடனும் சிரிக்க மாட்டார். நீண்ட தாடியுடன் அவர் காணப்பட்டார். அவரின் நண்பர்களையும் அப்படி இருக்குமாறு கேட்டார். அவருடன் சில விடயங்களை பேசினாலும் காலப்போக்கில் அவரின் நடத்தையில் மாற்றத்தை கண்டு பேசுவதை குறைத்துக் கொண்டேன். அவர் ஒரு நகைச்சுவையாளர் ஆனால் எல்லாம் மாறிவிட்டது. ( சிறுவயது புகைப்படங்களை காண்பிக்கிறார் ஹிதாயா )
கடைசி காலங்களில் அவர் பிள்ளைகளை இசையை கேட்கக் கூட அவர் அனுமதிக்கவில்லை. சமய ரீதியான விடயங்களில் கடும்போக்கை கடைபிடித்தார் அவர். பணத்தை அவர் ஒரு பொருட்டாக மதித்ததில்லை.இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொள்கைகளில் தீவிரமாக இருந்தாலும் இந்தளவு தூரம் செல்வாரா என்பதை எங்களால் நினைத்தும் பார்க்க முடியவில்லை – என்றார் ஹிதாயா.
கம்பளை சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்ற ஜெமீல் பின்னர் கொழும்பு றோயல் இன்ஸ்டியூட்ட்டில் கல்வி பயின்றவராவார். மனைவியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் அவரின் ஆறுமாத குழந்தை உட்பட்ட பிள்ளைகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தாஜ் சமுத்ரா ஹோட்டலை தாக்க வந்த ஜெமீல் , தாம் கொண்டுவந்த குண்டு வெடிக்காத காரணத்தினால் தெஹிவளைக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அங்கு குண்டை அவர் பரிசோதிக்கும்போது அது வெடித்திருக்கலாமென பொலிஸார் விசாரணைகளில் அறிந்துள்ளனர்.
( ஜெமீலின் இளமைக்கால படங்கள் இணைக்கப்பட்டுள்ளன – நன்றி டெய்லி மெயில் )
Post a Comment