பர்வீஸ் மஹ்ரூபுக்கு, முக்கிய பதவி
2020 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட ஐசிசி உலகக் கிண்ண போட்டியை வெல்லும் இலக்குடன் இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பர்வீஸ் மஹ்ரூப், கனிஷ்ட தேசிய கிரிக்கெட் அணிக்கு முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கும் புதுப்பிக்கக் கூடியவாரே அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மஹ்ரூப் 13 ஆண்டுகாலத்தில் இலங்கை அணிக்காக 12 டெஸ்ட், 109 ஒருநாள் மற்றும் 8 ரி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 19 வயதுக்கு உட்பட்ட தரத்தில் தேர்வாளர் மற்றும் முகாமையாளர் என இரு பாத்திரங்களில் செயற்படவுள்ளார்.
“நான் ஒரு முகாமையாளராக செயற்படும் அதேவேளை, இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தவும் தமது ஒழுக்கத்தை பேணவும் வீரர்களுடன் எனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டு வழிகாட்ட முடியுமாக இருக்கும். வீரர்களை நெருக்கமாக அவதானிக்கவும் என்னால் முடியுமாக இருக்கும்” என்று மஹ்ரூப் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான மூன்று இளையோர் ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இரண்டு இளையோர் டெஸ்ட் போட்டிகள் காலி மற்றும் அம்பாந்தோட்டையில் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலியில் நடைபெறவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டையில் நடைபெறும்.
50 ஓவர்கள் போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்களும் அம்பாந்தோட்டையில் நடைபெறவிருப்பதோடு கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இரு அணிகளும் காலி செல்லவுள்ளன.
Post a Comment