ஜமால் கஷோக்ஜியின் பிள்ளைகளுக்கு வீடும், பணமும் வழங்கும் சவூதி அரேபியா
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஜமால் கஷோக்ஜியின் பிள்ளைகளுக்கு சவூதி அரேபியா நட்டஈடு வழங்கி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தது.
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஜித்தாவில் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வீடு முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவும் வழங்கப்பட்டு வருவதாகவும் வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஐந்து இலக்கம் கொண்ட தொகையொன்று கஷோக்ஜியின் இரண்டு மகன்மாருக்கும் ஒரு மகளுக்கும் வழங்கப்படுவதாகவும் தமது தந்தை கொல்லப்பட்டமை தொடர்பில் பொது மக்கள் மத்தியில் தொடராக அறிக்கைகள் வெளியிடாதிருப்பதை உறுதிப் படுத்துவதற்கான ஒரு கட்டமாகவே இவ்வாறு வழங்கப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.
தற்போதைய மற்றும் முந்தைய சவூதி அரேபிய அதிகாரிகள் மற்றும் கஷோக்ஜியின் குடும்ப அங்கத்தவர்களையும் அது மேற்கோள் காட்டியுள்ளது.
அமெரிக்காவில் வசித்துவந்த வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் ஜமால் கஷோக்ஜி கடந்த ஒக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தினுள் நுழைந்ததை அடுத்து படுகொலை செய்யப்பட்டார்.
என்ன நடந்தது என்பது தொடர்பில் மாறுபாடான கருத்துக்களை வெளியிட்டு வந்த சவூதி அரேபிய அரசாங்கம் இறுதியாக கைகலப்பினால் இறப்பு நிகழ்ந்ததாக ஏற்றுக்கொண்டது.
ஒவ்வொரு பிள்ளைக்கும் வீடுகளையும் பத்தாயிரம் அமெரிக்க டொலருக்கும் அதிகமான மாதாந்தக் கொடுப்பனவையும் வழங்குவது பெரியதொரு அநீதி இழைக்கப்பட்டமையினை ஏற்றுக்கொள்வதோடு ஒரு பிழையைச் சரிசெய்யும் நடவடிக்கையுமாகும் என முன்னாள் அதிகாரியொருவரால் வர்ணிக்கப்படும் இந்த நட்டஈடு கடந்த வருட பிற்பகுதியில் மன்னர் சல்மானினால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளரின் பிள்ளைகளுக்கு குருதிப் பணமாகவே ஆயிரக்கணக்கான டொலர் தொகை வழங்கப்படுகின்றது. அத்தோடு சவூதி அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
வன்முறைக் குற்றங்களால் அல்லது இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிதியுதவி வழங்குவது அரசாங்கத்தின் வழக்கமான செயற்பாடாகும் என சவூதி அதிகாரியொருவர் தெரிவித்ததாக போஸ்ட் தெரிவித்துள்ளது.
கஷோக்ஜியின் குடும்பத்தினர் மௌனமாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனரா என்பது தொடர்பில் அவ்வதிகாரி கருத்து வெளியிட மறுத்துவிட்டார்.
இவ்வாறு உதவுவது எமது பாரம்பரியமும் கலாசாரமுமாகும் எனவும் இது வேறு எவற்றோடும் தொடர்பு பட்டதுமல்ல எனவும் அவ்வதிகாரியை மேற்கோள்காட்டி அப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
vidivelli
Post a Comment