நாட்டு மக்களிடம், மன்னிப்பு கோரியுள்ள திமுத் கருணாரத்ன
இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தன்னால் இடம்பெற்ற விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.
தன்னால் மேற்கொள்ளப்பட்ட குறித்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியிடம் முதலில் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ள திமுத் , குறித்த சாரதி சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வௌியேறியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தன் கையால் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக குறித்த முச்சக்கரவண்டி சாரதியின் அனைத்து தேவைகளுக்காகவும் எதிர்காலத்தில் செயற்படவுள்ளதாக திமுத் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , நீதிமன்றில் முன்னிலையாகி இலங்கை சட்ட நடைமுறையை பின்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் கையால் இடம்பெற்ற இந்த விபத்து இலங்கை கிரிக்கட் அணி வீரரொருவரால் இடம்பெற்றிருக்கக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ள திமுத் , இந்த சம்பவத்திற்காக அனைவரிடமும் மன்னிப்பு கோரிவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை , இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதிபத்திரத்தை நீதிமன்றம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி பொரளையில் விபத்தை ஏற்படுத்தி ஒருவரை காயப்படுத்திய குற்றத்துக்காக இன்று அவர் நீதிமன்றில் முன்னிலையானார்.
இதன்போது அவர் 1 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டப் போதும், அவரது சாரதி அனுமதிபத்திரத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் அவர் மருத்துவ பரிசோதனைக்காக போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தில் பிரசன்னமாகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment