அம்பாறை பள்ளிவாசலுக்கு நஷ்டஈடு இல்லை - முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் பலதடவை கோரியும் பயனில்லை
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இறுதியில் இடம்பெற்ற அம்பாறை வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் தனியார் சொத்துகளுக்கான நஷ்டஈடு மதிப்பீடு செய்யப்பட்டதை விடவும் மிகக் குறைவாக வழங்கப்படு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பள்ளிவாசலும் பாதிக்கப்பட்ட சொத்துகளின் உரிமையாளர்களும் மிகக்குறைந்த நஷ்டஈட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
மதிப்பீட்டுத் திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றால் மதிப்பீடு செய்யப்பட்ட நஷ்டஈடே வழங்கப்படவேண்டுமென அவர்கள் புனர்வாழ்வு அதிகார சபையைக் கோரியுள்ளார்கள். அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் 27 மில்லியன் ரூபா என அரச நிறுவனங்களால் மதிப்பீட்டு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கும் குறைவான நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லை என அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்கப்பட்ட காலஎல்லையில் நிர்வாக சபைத் தலைவராக இருந்த ஏ.எல்.ஆர். ஹாரூன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நஷ்டஈடாக 27 மில்லியன் ரூபாவும் மற்றும் 13 சொத்துகளுக்கு 3.6 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட வேண்டுமெனவும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நஷ்ஈட்டுத் தொகையினை வழங்குவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னாள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனினால் அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அமைச்சரவை புனர்வாழ்வு அதிகார சபையின் நஷ்டஈடு வழங்குவதற்கான சுற்று நிருபத்தின் அடிப்படையிலேயே வழங்குமாறு தீர்மானம் மேற்கொண்டது.
புனர்வாழ்வு அதிகார சபையின் சுற்று நிருபத்துக்கு அமைய ஒரு சொத்துக்கு ஒரு மில்லியன் ரூபாவுக்கு மேல் நஷ்டஈடு வழங்கமுடியாது. அதன் அடிப்படையிலேயே அம்பாறை பள்ளிவாசலுக்கு சேதம் 27 மில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதும் ஒரு மில்லியனே ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 13 சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் 3.6 மில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் 6 இலட்சம் ரூபாவே வழங்க முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என புனர்வாழ்வு அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் உரிய நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது எனவும் கூறினார்.
அம்பாறை வன்செயல்களுக்குப் பின்பு இடம்பெற்ற கண்டி –திகன வன்செயல்களுக்கு உரித்தான நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருட காலம் கடந்தும் அம்பாறை வன்செயல்களுக்கான உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படாதுள்ளமை குறித்து பாதிக்கப்பட்ட சொத்துகளின் உரிமையாளர்களும் பள்ளிவாசல் நிர்வாக சபையும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பலன் கிட்டவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். Vidivelli
Where is the Eastern Province Governor??????
ReplyDelete