முட்டையடி வாங்கிய செனட்டருக்கு எதிராக, அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்
நியூசிலாந்து பள்ளிவாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மீது பழிசுமத்துவது போல் பேசிய அவுஸ்திரேலிய செனட்டருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
நியூசிலாந்தில் கடந்த மாதம் 15ஆம் திகதி பள்ளிவாசலில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய செனட்டர் ஆன்னிங் வெறிபிடித்த இஸ்லாமியர்களை நியூசிலாந்துக்குள் அனுமதித்த அந்நாட்டின் குடியேற்றக் கொள்கைதான் காரணம் என்றார்.
ஒரு மதத்தவரை பொதுவாகக் குற்றம்சாட்டும் அவரது பேச்சுக்கு அவுஸ்திரேலிய, நியூசிலாந்து நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். “இந்த இழிவான கருத்துக்கு பாராளுமன்றம் ஒன்றிணைந்து கண்டனம் வெளியிடுவது அவசியமாகும்” என்று லிபரல் கட்சியின் செனட்டர் மதியஸ் கோர்மன் குறிப்பிடடுள்ளார். “அன்னிங் சென்னட்டர் பதவியை அனுபவித்துக் கொண்டு இந்தப் பாராளுமன்றத்தில் மோசமான மற்றும் இழிவான கருத்தை வெளியிட்டிருப்பது கவலைக்குரியதாகும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்து இழிவானது மற்றும் வெட்ககரமானது என்று ஏனைய உறுப்பினர்களும் செனட் சபையில் குறிப்பிட்டனர்.
முன்னதான நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் குறித்து குடியேற்றவாசிகள் மீது குற்றம் சுமத்தியதற்கு அன்னிங்கை பதின்ம வயது சிறுவன் ஒருவன் முட்டையால் தாக்கிய வீடியோ பிரபலம் அடைந்தது. இதனையடுத்து அவரை செனட் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி கோரும் மனுவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டனர்.
அப்போது நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன் அவரது கருத்தை வெட்ககரமானது என்று குறிப்பிட்டிருந்தார்.
Post a Comment