மைத்திரி அணி தப்பியோட்டம், ரணில் அரசாங்கம் வெற்றியீட்டியது - பட்ஜட் 45 வாக்குகளால் நிறைவேற்றம்
இந்த ஆண்டுக்கான (2019) வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் 45 மேலதிக வாக்குகள் வெற்றி பெற்றுள்ளது.
ரணில் அரசாங்கம் சபையில் முன்வைத்த வரவு செலவுத்திட்டத்திற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. எனினும் மகிந்த தரப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
எவ்வாறாயினும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரணில் அரசாங்கம் வெற்றி வாகை சூடியுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளையும் பெற்றுள்ளதுடன், இதன் அடிப்படையில் 45 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவு திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் வாசிப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பில் வாக்கெடுப்பின்போது 119 வாக்குகள் ஆதரவாகவும், 76 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இன்றைய வாக்கெடுப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டது.
Post a Comment