Header Ads



கல்முனை பஸ் தரிப்பித்தில் கைகலப்பு - 2 பேர் காயம், வீதியை மறித்து போராட்டம்


பாறுக் ஷிஹான்

தனியார் மற்றும் அரச போக்குவரத்து தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமிருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(5) காலை அம்பாறை மாவட்டம் கல்முனை பொது பஸ் தரிப்பிட நிலையத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தனியார் மற்றும் அரச போக்குவரத்து துறையினரிடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதன் போது தனியார் தரப்பினரின் தாக்குதலினால் அரச போக்குவரத்து நேரகணிப்பு முகாமையாளர் சாமித்தம்பி புஸ்பராஜா (வயது-49) உதவி முகாமையாளரான  கார்த்திக் நேசப்பிரியன்  ரத்னேஸ்வரன்(வயது-51) காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இத்தாக்குதலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் அரச போக்குவரத்துறையினரை தாக்கியதாக தனியார் போக்குவரத்து தரப்பினை சேர்ந்த தேவதாஸ் கிருபாகரன் சர்மா (வயது-24) விஸ்வலிங்கம் ஜெயகுமார் (வயது-37) ஆகியோரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனால் கோபமடைந்த தனியார் போக்குவரத்து துறையினர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டதுடன் பொது போக்குவரத்தினை தடுக்கும் முகமாக வீதியை மறித்தனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த கல்முனை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர் தனியார் துறையினரிடம் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டதை அடுத்து போக்குவரத்தை தடைசெய்யாது விலகிச் சென்று தமக்கு நியாயம் ஒன்றை வழங்குமாறு வீதியின் இருமருங்கிலும் குழுமி நின்று பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

பொலிஸாரின் தலையீட்டை அடுத்து வழமை நிலைக்கு திரும்பிய அரச போக்குவரத்து நடவடிக்கைகள் மக்களது நலன் கருதி சேவையை நடாத்தி வருகின்றன.

எனினும் தனியார் போக்குவரத்து இப்பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு கிடைக்கும் வரை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட உள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்தனர்.மேலும் தனியார்  பஸ் உரிமையாளர்களினால் தொடர்ந்தும்  கல்முனை பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கபடுகின்றது.


No comments

Powered by Blogger.