காலத்தை கடத்திய ரணில் உருப்படியான எதனையும் செய்யவில்லை, 2020 இல் சு.க. அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்
இனங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகள் களையப்பட்டு, அவர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்குகின்ற போது தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் காணமுடியும் என கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரிவுக்கான அலுவலகம் நேற்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு செயற்றிட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நீண்ட நாட்களுக்குப் பின்னர் எமது கட்சியின் அவர்கள் புதிய செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று கட்சியை புனரமைக்கின்ற பெரும் பணியை செய்து கொண்டிருக்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறுபான்மை மக்களின் மத்தியில் மதிப்பும் செல்வாக்குமுள்ள ஒரு கட்சியாக மாறியிருக்கின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் குறிப்பாக வடகிழக்கு பிரதேசங்களுடைய அபிவிருத்தியிலே வடகிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலே வடகிழக்கு மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதிலே பல்வேறு முயற்சிகளையும் முனைப்புகளையும் அவர் மேற்கொண்டார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக அரசாங்கத்தோடு எமது கட்சி இணைந்து நிர்வாகத்தை செய்தது. பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினுடைய செயற்பாடுகள், ஊழலுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதில் கொடுப்பதில் காட்டுகின்ற அசமந்தப் போக்கு, மத்திய வங்கி கொள்ளை போன்ற சம்பவங்களினால் இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்து நாம் அரசாங்கத்தைவிட்டு வெளியேறினோம்.
இன்று நான்கு மணித்தியால மின்சாரவெட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் 12 மணித்தியால மின்வெட்டை அமுல் செய்யப்போகும் நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். காரணம் மூன்றரை ஆண்டுகளாக ஒரு அலகிற்குக்கூட புதிய உற்பத்தியை அரசாங்கம் செய்யவில்லை.
எதிர்வரும் வருடம் எவ்வளவு மின்சாரம் தேவை என்பதை அறிந்து இந்த வருடமே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நாளாந்தம் மக்களுடைய மின்சாரபாவனை அதிகரித்துச் செல்கின்றபோது மக்களின் தேவைக்கேற்ப நாம் எமது திட்டங்களையும் கொண்டுசெல்ல வேண்டும். ஐக்கிய தேசியக்கட்சி திட்டங்களை மேற்கொள்ளவில்லை. அதற்கான அங்கீகாரங்களை வழங்கவில்லை. வெறுமனே பேச்சுவார்த்தை என்று பிரதமர் காலத்தை கடத்திச் சென்றாரே தவிர உருப்படியான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆகையால் தான் நாம் இன்று மிகப்பெரும் மின்சாரப் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கின்றோம். அது போல ஒவ்வொரு துறையையும் நாம் கொண்டுசெல்லலாம்.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் புதிய அரசாங்கம் அமைகின்ற போது அந்த அரசை நமது கட்சி தலைமையிலான அரசு உருவாக்க வேண்டும். எமது பிரதேசங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கான தீர்மானங்களையும் நடைமுறைகளையும் நாம் மேற்கொள்கின்றோம்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமென நாம் தீர்மானித்திருக்கின்றோம். கிழக்கு மாகாணம் கல்வி,விளையாட்டு,பொருளாதாரம்,போன்ற சகல துறைகளிலும் பின்தங்கியிருக்கின்றது.
நமது மாகாணத்தை கட்டியெழுப்பி பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து இனங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகள் களையப்பட்டு அவர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்குகின்ற போது தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் காணமுடியும். அந்த அடிப்படையில் ஜனாதிபதி தலைமையிலே பயணத்தை மேறகொண்டிருக்கின்றோம்.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் அமைகின்ற போது அந்த அரசாங்கத்தினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கமாக உருவாக்க வேண்டும். எமது பிரதேசங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என தீர்மானித்திருக்கின்றோம். கிழக்கு மாகாணம் சகல துறைகளிலும் பின்தங்கியுள்ளது. சகல பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, இனங்களிடையே உள்ள முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு அவர்கள் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலையினை உருவாக்கும் போது தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணமுடியும். அந்த அடிப்படையில் ஜனாதிபதி தலைமையில் நாங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்னேற்றமான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது.நாங்கள் தனித்து நின்று எங்களது அரசாங்கத்தினை உருவாக்கவேண்டுமாகவிருந்தால் சகல வேறுபாடுகளையும் மறந்து ஒன்றித்து செயற்படவேண்டும்.
அதன் காரணமாகவே ஜனாதிபதி சகல இனங்களும் அரசில் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் சில ஏற்பாடுகளை செய்திருக்கின்றார். அதன்காரணமாகவே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியும் முஸ்லிம் மக்களையும் பிரதிநித்துவப்படுத்தி தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் ஊடாக கிழக்கு மாகாணத்தில் எல்லா இனங்களும் ஒன்று சேர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைப்பதற்காக பாடுபடவேண்டும்.எமது அரசாங்கம் உருவாகும்போதுதான் எமது பிரச்சினைக்கு நாம் தீர்வுகாணமுடியும்.
ஜனாதிபதி அவர்கள் இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் சகல இனங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைத்துவம். அந்த தலைமைத்துவம் ஊடாகவே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். அந்த தலைமைத்துவம் மூலமே நாட்டினை கட்டியெழுப்பமுடியும். அவருக்கு பக்கபலமாக நாங்கள் இருக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் அனைவரும் ஒன்றுபட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த முன்வரவேண்டும் என்றார்.
Post a Comment