Header Ads



"ஜம்மியத்துல் உலமா 2009 ஆம் ஆண்டு எடுத்த நிலைப்பாடே சரி"

மேலதிக பேணுதலுக்காக முஸ்லிம் மாதரால் அணியப்படும் நிகாப் கிமார் ஆடைகளுக்கு தடை வரமுன் நாட்டின் தற்போதைய களநிலவரங்களைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வாக்குழு முஸ்லிம் சமூகத்திற்கு  சில வழிகாட்டல்களை வழங்க முன்வர வேண்டும். 

?
அதேவேளை  முஸ்லிம்களின் சன்மார்கத் தலைமைகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளை அரசியல் வாதிகள் அவசரப்பட்டு எடுப்பதோ சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகளை ஊடகங்களில் தெரிவிப்பதோ விரும்ம்பத் தகாத விளைவுகளையே ஏற்படுத்தும்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிகாப் விவகாரத்தில் குறிப்பிட்ட ஒரு மத்ஹப் அல்லது அமைப்பின் நிலைப்பாட்டை பொதுமைப் படுத்தி தீர்மானம் (2007) எடுத்தமை ஒரு இஜ்திஹாத் தவறாகும், தமது ஒரு தலைப் பட்சமான நிலைப்பாட்டினை மீள்பரிசீலனை செய்து  மாற்றுக் கருத்தையும் மதிக்க வேண்டும் என ஜம்மியத்துல் உலமா (2009) இல்   எடுத்த முடிவே சரியான நிலைப்பாடாகும்

இந்த விடயத்தில் நான் உடன்படா விட்டாலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடனும் அதில் அங்கத்துவம் பெற்றுள்ள குறிப்பிட்ட மத்ஹப் மற்றும் அமைப்பு சார்ந்தவர்களுடன் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட விரும்பவில்லை, மாற்றுக் கருத்து உடையோரை நெறி பிறழ்ந்தவர்கள் என மட்டராகமாக விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துமாறு ஜம்மியத்துல் உலமா உலமாக்களை அறிவுறுத்த வேண்டும், அதேபோல் ஏனைய அமைப்புக்களும் தமது அங்கத்தவர்களை அறிவுறுத்த வேண்டும்.

முகம் கரங்கள் உற்பட  உடல் முழுவதும் திரையிடுவது கட்டாயம் எனக் கருதும் நிலைப்பாட்டை கொண்டுள்ளோர் அதனை பின்பற்றுவது அவர்களது சுதந்திரமும் தெரிவுமாகும். அதே போன்று அடுத்த நிலைப்பாட்டில் இருப்பவர்களை ஹராத்தை செய்பவர்களாகவும் வழிகேடர்களாகவும் காபிர்களாகவும் அழைப்பது அறியாமையாகும்.

தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் நிகாப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் மூன்றாம் தரப்பினரின் உள்நோக்கங்களை நாம் அறியாமலும் இல்லை, இங்குதான் கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியிலும் எமது சமூக ஒற்றுமை கட்டி எழுப்பப் பட வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.

முஸ்லிம்களது சமய கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை பேணுவதும் பாதுகாப்பதும் கடைப்பிடிப்பதும் அவர்களது அடிப்படை உரிமையாகும், அவற்றிற்கெதிராக தீய சக்திகள் மேற்கொள்கின்ற பரப்புரைகளை முறியடிப்பதில் முஸ்லிம்களாகிய நாம் இதுவரைகாலமும் ஒன்றிணைந்தே செயற்பட்டு வருகின்றோம், கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியிலும் நாம் நாம் ஒற்றுமையை கடைப்பிடித்துள்ளோம்.

அதேபோன்றே மாதர்களின் ஆடை விவகாரத்தில் நாம் குறிப்பிட்ட ஒரு நிலைப்பாட்டை  ஆதரித்தும் எதிர்த்தும் உள்வீட்டில் மேற்கொள்கின்ற கருத்து மோதல்கள் மேற்படி மூன்றாம் தரப்பினருக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது, நிகாப் கிமார் அணிய விரும்புபவர்களின் உரிமையில் சுதந்திரத்தில் சமூகத்தில் உள்ள தனிப்பட்டவர்களோ அமைப்புக்களோ அனாவசிய தலையீடுகளை மேற்கொள்ளவோ எல்லை மீறிய விமர்சனங்களை மேற்கொள்ளவோ கூடாது.

முரண்பாடுகளை தவிர்ப்பதற்கும் வரலாற்றில் மிக நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் உம்மத்தின் ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கும் எல்லா தரப்பினரும் புரிந்துணர்வுடன் ஒத்துழைக்க முன்வர வேண்டும்.

முஸ்லிம் மாதர் –சாதாரணமாக வெளியில்தெரியக் கூடிய- முகம் கரங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைத்து, அங்க அவயவங்களின் அலங்காரங்கள் கவர்சிகள் புலப்படாத வண்ணம் தளர்வான ஆடைகளை அணிதல் வேண்டும்.

“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் ….”(ஸுரத்துன் நூர் 24:31)

மேற்படி திருமறை வசனத்திற்கு வரலாறு நெடுகிலும் உலமாக்கள், மத்ஹபுகளுடைய இமாம்கள், புகஹாக்கள் விரிவாக ஆராய்ந்துள்ளார்கள், இரண்டு வகையான நிலைப்பாடுகளையும் தெளிவாகவே அவர்கள் எடுத்துள்ளார்கள், பத்வாக்களும் வழங்கப்பட்டுள்ளன, மென்மேலும் நாம் இவ்விடயத்தில் வாதப் பிரதி வாதங்களுக்குள் செல்வது அவசியமில்லை.

ஷாபியி மத்ஹபின் இமாம் ஷாபிஈ தனது “கிதாபுல் உம்” கிரந்தத்தில் தெளிவாகவும் அவர்களது மாணவர்களில் “ஜும்ஹூர்” பெரும்பாலானோர் தமது விளக்கவுரைகளிலும் குறிப்பிட்டுள்ள பிரபலமான கருத்தை தொன்று தொட்டு இலங்கையின் மூத்த உலமாக்கள் 2007 ஆண்டு வரையிலும் அனுமதித்தும்  பின்பற்றியும் வந்துள்ளார்கள், உலகிலும் கணிசமான பகுதியினர் பின்பற்றுகின்றார்கள்.

அதேபோன்றே ஹனபி, மாலிகி மத்ஹபுகளிலும் சலபுஸ் ஸாலிஹ் உலமாக்களினதும் பிரபலமான கருத்து மேற்படி நிலைபாட்டை சார்ந்ததாகவே இருக்கின்ற அதேவேளை பெண்களின் உடல் முழுவதும் அவ்ரத் எனும் நிலைப்பாட்டையும் எல்லா மத்ஹபுகளையுயம் சார்ந்த பல புகஹாக்களும் வலியுறுத்தியுள்ளார்கள் என்பதனையும் எவரும் மறுதலிக்க வேண்டிய அவசியம் இல்லை.  

ஜமாத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத் ஆகியவற்றின் செல்வாக்கு மிகுந்த   இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஹனபி மத்ஹப் நிலைப்பாட்டையும், வளைகுடா அறபு நாடுகளில் ஹன்பலி, மாலிகி மத்ஹப் நிலைப்பாடுகளையும், அறபு நாடுகளில் ஆண்கள் வெள்ளை பெண்கள் கருப்பு ஆடை அணியும் நவீன கலாசார முறைகளை மக்கள் பின்பற்றுகின்றார்கள், ஆபிரிக்க நாடுகளில் லாஹிரி மாலிகி ஷாபிஈ என பல நிலைப்பாடுகளிலும் மக்கள் ஆடைகளை அணிகின்றார்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

No comments

Powered by Blogger.