இதுவரை 106 பேர் கைது - சந்தேகமான மனிதர்கள், வாகனங்கள் பற்றி தகவல் வழங்க கோரிக்கை
குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 20 பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை மவனெல்ல கொம்பனி வீதி ஆகிய இடங்களில் 3 பேர் வீதமும், மிரிஹானை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இரண்டு பேர் வீதமும் கொள்ளுப்பிட்டி பண்டாரவளை காத்தான்குடி அளுத்கம பூவரசங்குளம் ஆகிய இடங்களில் ஒவ்வொருவர் வீதமும் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, மஸ்கெலிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தொடர்பாடல் சாதனங்கள் பல மீட்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் காவற்துறை விசேட அதிரடிப்படையினர், காவற்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.
4 வோக்கிடோக்கி உட்பட்ட பல தொடர்பாடல் சாதனங்கள் அங்கு மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தள்ளனர்.
எனினும் அங்கு யாரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை கட்டானை காவற்துறை நிலையத்துக்கு முன்னால் சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படைப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தபொதி கடற்படையினரால் பாதுகாப்பாக வெடிக்கச் செய்யப்பட்டப் போதும் அதில் வெடிப்பொருட்கள் எவையும் இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆயுதங்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் க்ரேண்ட்பாஸ் - சேதுவத்தையில் கைதாகியுள்ளார்.
கைதாகும் போது அவரிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 12ம் இரட்டைக்குழல் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் 18ம் 9 மில்லிமீற்றர் தோட்டாக்கள் 10ம் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் சேதுவத்தை நவலோக்கபுர பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு கொம்பனித்தெருவில் பள்ளிவாசல் ஒன்றில் இருந்து 46 வாள்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
தம்புள்ளை பொருளாதர மத்திய நிலையம் மற்றும் நகரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமாக நடந்துக் கொண்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கல்முனை மற்றும் பொலனறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றையதினம் சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அல்லது சந்தேகத்துக்கு இடமான மனிதர்கள் வாகனங்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதற்காக இராணுவ தலைமையகத்தின் தொலைபேசி இலக்கங்களான 0112 434 251'
0114 055 105'
0114 055 106'
0112 433 335-
0766 911 604 ஆகியன ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.
அத்துடன் சந்தேகத்துக்கு இடமான மனிதர்கள் மற்றும் வாகனங்கள் குறித்த விபரங்களை 116 என்ற அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொண்டும் வழங்க முடியும்.
மேலும் காவற்துறை தலைமையகத்தின்
0113 024 873'
0113 024 883'
0112 013 039
ஆகிய இலக்கங்கள் மூலமாகவும் சந்தேகத்துக்கு இடமான அவசர தகவல்களை வழங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு, வாகனங்களை வீதி ஓரங்களில் நிறுத்திச் செல்லும் போதுஇ தங்களது தொடர்பு இலக்கத்தை வாகனத்தில் குறித்து வைத்துவிட்டு செல்லுமாறும் காவற்துறையினர் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை, காவற்துறை மா அதிபரின் பணிப்புரையின் அடிப்படையில் நாட்டின் அனைத்து மாகாணங்களுக்குமான விசேட நடவடிக்கைகள் மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை காவற்துறை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இந்த மையங்களின் ஊடாக அவசர நிலைமைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் ஐந்து விசேட நடவடிக்கைகள் மையங்களும், ஏனைய மாகாணங்களில் தலா ஒவ்வொரு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
Post a Comment