ஹரிஸ் - கோடீஸ்வரன் நட்பு ரீதியாக பிரச்சினையை தீர்க்க வேண்டும் - ஸ்ரீநேசன் Mp
30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முழுமையாக்கப்படாமல் இருப்பதென்பது அங்கு வாழுகின்ற 91 வீதமான தமிழ் மக்களுக்கு இளைக்கின்ற அநீதியாகவே இருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட அமர்வில் உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சுக்கான விடயதானங்கள் தொடர்பிலான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக பாரம்பரியம் விழுமியங்களை விரிவுபடுத்துவதாக இருந்தால் அரசியல் அலகுகள், நிர்வாக அலகுகள் என்பவற்றுக்கான அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். பகிர்வு செய்யப்பட வேண்டும்.
அந்த வகையில், இருக்கின்ற பிரதேச செயலகங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான அதிகாரங்களை மேலும் மேலும் பரவலாக்கம் செய்ய வேண்டும்.
அதே போல் உபசெயலகங்களுக்கான அதிகாரங்களை வழங்கி முழுமையான செயலகங்களாக மாற்ற வேண்டும். அத்துடன் புதிய பிரதேச செயலகங்கள் புதிய உள்ளூராட்சி சபைகள் என்பவற்றை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.
குறிப்பாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியிலே உருவாக்கப்பட்டது. 1993இல் அதனை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றுவதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் கூட கொண்டு வரப்பட்டது.
இப்படியான சூழ்நிலையில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முழுமையாக்கப்படாமல் இருப்பதென்பது அங்கு வாழுகின்ற 91 வீதமான தமிழ் மக்களுக்கு இளைக்கின்ற அநீதியாகவே இருக்க முடியும்.
அத்தோடு 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கல்முனை வடக்கு பிரதேச பகுதியில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை தமிழ் மக்கள் தம்மை நீண்ட காலமாக அரசு புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி என்ற வகையிலும் தமிழ் மக்களின் நிர்வாகச் செயற்பாடுகளை இழுத்தடிக்காமல் துரிதமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வகையிலும் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற வகையிலும் அதற்கான நிதி மூலங்கள் அதிகாரங்களை உடன் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டன.
எனவே காலத்தை மேலும் கடத்தாமல் முரண்பாடுகள் பகைகளை உருவாக்கிக் கொள்ளமால் அப்பிரதேச இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் எமது சகோதர நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுடன் நட்பு ரீதியாக இணைந்து புரிந்துணர்வுடன் இதனைச் செய்ய வேண்டும் என ஜனநாயக அடிப்படையில் கேட்டுக் கொள்கின்றேன்.
இதனைச் செய்வதன் மூலமாக தமிழ், முஸ்லிம் மக்கள் இடையிலான நட்பினைப் பலப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், 1989இற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட 27 பிரதேச செயலகங்கள் முழுமையாக்கப்பட்டுள்ளன.
ஆனால் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மாத்திரமே முழுமையாக்கப்படவில்லை. எனவே இதனை ஒரு நியாயமாகக் கொள்ள முடியாது.
அவை மட்டுமல்லாது மட்டக்களப்பிலும் இரண்டாகப் பிரிக்கக் கூடிய பல பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகமானது 39 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியது. 656இற்கும் அதிகமான சதுர கிலோமீட்டர் பரப்பினையும் கொண்டது. யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.
எனவே அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் அதனை இவ்விரண்டு பிரதேச செயலகங்களாகவும், பிரதேச சபைகளாகவும் பிரிக்க வேண்டும். அதே போல் போராதீவுப் பற்றுப் பிரதேச செயலகம் 43 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டது. பரந்தளவு நிலப்பிரதேசத்தைக் கொண்டதும், யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.
எனவே இதனையும் இரண்டு பிரதேச செயலகங்களாகவும் இரண்டு பிரதேச சபைகளாகவும் மாற்ற முடியும். அதே போல் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலகம் 45 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டது. மிக நீளமான பிரதேச செயலகமாகவும் காணப்படுகின்றது.
எனவே இதனையும் இவ்விரண்டு பிரதேச செயலகங்களாகவும், பிரதேச சபைகளாகவும் பிரிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
இவை போன்று இன்னும் பல பிரதேச செயலகங்கள் பிரதேச சபைகள் பிரிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. இவற்றை விபரமாகக் குறிப்பிடுவதற்கு நேரம் போதாமல் இருக்கின்றது. அவை பற்றிய தகவல்களைத் தர இருக்கின்றேன்.
அரசியற் தீர்வு விடயத்திற்கு மத்திய அரசில் இருக்கின்ற அதிகாரங்கள் அதிகமாகப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி வருகின்றது. இந்த நிலையில் மக்களின் ஜனநாயக உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்கும், அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கும் பிரதேச செயலகங்கள், மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு முறையே நிர்வாக அதிகாரங்களையும், அரசியல் அதிகாரங்களையும் பரவலாக்கம் செய்தாக வேண்டும்.
இது காலத்தின் கட்டாய தேவையாகும். கடந்த காலத்தில் நாங்கள் மக்களின் அபிலாசைகளை உணர்ந்து அதற்கேற்ற விதத்தில் செயற்படாமையால் நாடு 30 வருட கால யுத்தத்தை சுமந்திருக்கின்றது.
எனவே கடந்த காலப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தைப் பரவலாக்கம் செய்வதற்கும், பகிர்வு செய்வதற்கும் இந்த அமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment