காத்தான்குடியிலும், நியூஸிலாந்திலும் பள்ளிவாசல் படுகொலையை எதிர்கொண்டவரின் அனுபவம்
காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சபீர் இஸ்மாயில், தற்போது நியூஸிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச் நகரில் வசித்து வருகிறார். ருகுணு பல்கலைக்கழக பட்டதாரியான இவர், கடந்த ஆறு வருடங்களாக நியூஸிலாந்தில் தொழில்நிமித்தம் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பலருள் இவரும் ஒருவர். இச் சம்பவம் தொடர்பான தனது நேரடி அனுபவங்கள் அதன் பின்னரான நிகழ்வுகள் தொடர்பில் அவர் ‘விடிவெள்ளி’க்கு தெரிவித்த கருத்துக்களை இங்கு தருகிறோம்:
நேர்காணல் : எம்.பி.எம்.பைறூஸ்
Q காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை பற்றிய அனுபவங்கள் உள்ள உங்களுக்கு அதேபோன்றதொரு அனுபவம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறதே?
உண்மைதான். காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை நடந்தபோது எனக்கு 6 வயது. எனது வீட்டுக்கு அண்மையில்தான் புலிகளால் தாக்கப்பட்ட இரு பள்ளிவாசல்களும் இருக்கின்றன. பின்னர் நான் கல்வி கற்கும் காலத்தில் மட்டக்களப்பில் நடந்த குண்டு வெடிப்புகளையும் நேரில் கண்டிருக்கிறேன். இப்படி யுத்தத்தின் பாதிப்புகளை நேரில் அனுபவித்த எனக்கு இந்த அமைதியான நாட்டிலும் மற்றுமொரு பள்ளிவாசல் படுகொலையைச் சந்திக்க வேண்டி வந்துள்ளது. எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதை நாம் பொருந்திக் கொள்ளத்தான் வேண்டும்.
Q அன்றைய தினம் என்ன நடந்தது? நீங்கள் பள்ளிவாசலினுள் இருந்தீர்களா?
தாக்குதல் நடந்த அந் நூர் பள்ளிவாசலுக்கு மிக அருகாமையில்தான் எனது வீடு இருக்கிறது. வழக்கமாக ஜும்ஆ ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே நான் பள்ளிக்குச் சென்று விடுவேன். நானும் எனது சோமாலிய நாட்டு நண்பர் ஒருவரும்தான் காரில் பள்ளிக்குச் செல்வோம். அன்றைய தினம் என்னை அழைத்துச் செல்வதற்காக சோமாலிய நாட்டு நண்பர் வரும் வரை காத்திருந்தேன். நேரமாகியும் அவர் வராததால் அவருக்கு அழைப்பெடுத்த போது தான் தூங்கிவிட்டதாகவும் உடனடியாக வருவதாகவும் கூறினார். பின்னர் அவர் வந்ததும் நாம் வழக்கமாகச் செல்வதை விட 10 நிமிடங்கள் தாமதித்துச் சென்று பள்ளிவாசல் வளாகத்தை நெருங்கிய போதுதான் பலரும் ஓடுவதைக் கண்டோம். எங்களையும் பள்ளிப் பக்கம் போக வேண்டாம் என்றார்கள். அந்த நேரத்தில்தான் பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்தது. நாங்கள் உடனடியாக எங்கள் காரைத் திருப்பி பள்ளிக்குப் பின்புறமாகவுள்ள வீதியில் வந்து நின்றோம்.
எனது சோமாலிய நண்பரின் தந்தை முன்னரே பள்ளிக்குள் சென்றிருந்தார். அந்த சோமாலிய நண்பர் எமது இமாமுக்கு இறைச்சிகள் அடங்கிய ஒரு பெட்டியை அன்பளிப்பாக வழங்குவதற்காக காரில் கொண்டு வந்திருந்தார். அதனை காரிலிருந்து இறக்குவதற்காக நண்பரின் தந்தையை பள்ளியிலிருந்து வெளியே வருமாறு நாம் முன்னரே தொலைபேசியில் சொல்லியிருந்தோம். அதற்கமைய அவரும் பள்ளிக்கு வெளியே வந்து எமக்காகக் காத்திருந்தார். இதனால் அவரும் இந்த தாக்குதலிலிருந்து உயிர் தப்பிவிட்டார்.
வழக்கமாக எமது பள்ளியில் முதலில் அரபு மொழியில் 5 நிமிடங்கள் குத்பா பிரசங்கம் நடக்கும். அதன் பின்னரே ஆங்கிலத்தில் நடக்கும். இமாம் அரபு மொழியில் முடித்துவிட்டு ஆங்கிலத்தில் ஆரம்பிக்கும் போதே தாக்குதலும் ஆரம்பமாகியிருக்கிறது. அச் சமயம் சுமார் 250 பேரளவில் ஜும்ஆவுக்காக வந்திருப்பார்கள்.
எமது அந்நூர் பள்ளிவாசலில்தான் முதல் தாக்குதல் நடந்தது. அங்கு 43 பேர் மரணித்தார்கள். பின்னர் அங்கிருந்து சுமார் 15 நிமிட தூரத்திலுள்ள லின்வூட் பள்ளிக்குச் சென்று அங்கும் தாக்கியிருக்கிறான். அங்கும் 7 பேர் மரணித்தார்கள்.
Q பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறான். இதனை பொலிசார் அறிந்து தடுக்க முன்வரவில்லையா?
இந்த நபர் பொலிசாரின் கண்காணிப்புப் பட்டியலில் இல்லாதவன். இதற்கு முன்னர் குற்றங்களையோ சட்டவிரோதச் செயல்களோ செய்ததாக பதிவுகள் இல்லை. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் இல்லை. அவன் தனது தனிப்பட்ட கணக்கில் அதனை ஒளிபரப்பியதால் யாரும் அதனை அறிந்திருக்கவில்லை.
பொலிஸ் நிலையம் பள்ளிவாசலுக்கு அண்மையில்தான் இருக்கிறது. ஆனாலும் சம்பவம் நடந்து 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் பின்னரே பொலிசார் அங்கு வந்தனர். அது மட்டுமன்றி அம்பியூலன்ஸ்களைக் கூட பொலிசார் உடனடியாக பள்ளிவாசலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
தாக்குதல்தாரிகள் இன்னும் அங்கு இருக்கலாம் என்ற அச்சமே அதற்குக் காரணம். அந்த நேரத்தில் 2 அம்பியூலன்ஸ்கள் மட்டும்தான் ஸ்தலத்துக்கு வந்தன. இது போதாது, பலர் காயப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறி எமது சகோதரர்கள்தான் சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ்களை வரவழைத்தார்கள். இது இவர்களுக்கு புதிய அனுபவம். இதற்கு முன்னர் இவ்வாறான நெருக்கடி நிலைமைகளை இவர்கள் எதிர்கொண்டதில்லை.
இங்கு சட்டங்கள் மிக இறுக்கமாகும். காயமடைந்தோரை நினைத்தமாதிரி நாம் தூக்கிக் கொண்டு தனிப்பட்ட வாகனங்களில் கொண்டு செல்ல முடியாது. அம்பியூலன்ஸ்களில்தான் கொண்டு செல்ல வேண்டும். அதனால் அம்பியூலன்ஸ்கள் வர அதிகம் தாமதமானமையும் பலர் உயிரிழக்க காரணம் என நாம் நம்புகிறோம். அதிக இரத்த இழப்பு ஏற்பட்டே பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.
Q ஜனாஸாக்களை அடக்குவதில் ஏன் இவ்வளவு தாமதம்?
இன்றுவரை (வியாழக்கிழமை) 15 ஜனாஸாக்களே அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இங்கு சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு நிறைய சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அத்துடன் சடலங்களை சரியாக அடையாளம் கண்டு உறவினர்கள்தான் ஒப்பமிட்டு பொறுப்பேற்க வேண்டும். இந்த தாமதம் எமக்கு விரக்தியைத் தந்தாலும் இந்த நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
உயிரிழந்த அனைவருக்காகவும் இந்த வெள்ளிக்கிழமை இங்கு பொதுவான ஜனாஸாத் தொழுகையும் இரங்கல் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நியூஸிலாந்து பிரதமரும் அதில் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக அறிகிறேன்.
சம்பவம் நடந்த பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றை கழுவித் திருத்தி மீண்டும் தொழுகைகளை ஆரம்பிப்பதற்காக ஓரிரு தினங்களில் கையளிப்பதாக பொலிசார் அறிவித்திருக்கிறார்கள்.
Q உயிரிழந்தவர்களில் பலரை உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்?
கிட்டத்தட்ட இரு பள்ளிவாசல்களிலும் மரணித்த எல்லோருமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான். நாங்கள் எல்லோரும் இங்கு ஒரே குடும்பமாகவே பழகுவோம். எமக்கு பள்ளிவாசல்தான் எல்லாமே. வேலை முடிந்தால் நாம் பள்ளிவாசல்களில்தான் சந்தித்துக் கொள்வோம். இங்கு போதுமான இஸ்லாமிய சூழல் இல்லாததால் நாம் பள்ளியையே அதிகம் நாடியிருக்கிறோம்.
அந்தப் பள்ளிதான் எமக்கு எல்லாமே. இந்தப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் இங்குதான் தொழ வருவோம். பள்ளிவாசலுக்கு மனைவி, பிள்ளைகளை அழைத்துச் செல்வோம்.
பள்ளியில் நடக்கும் இஸ்லாமிய வகுப்புகளில் நாங்கள் பங்கேற்போம். எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். நாங்கள் அவர்களது வீடுகளுக்குச் செல்வோம். இவ்வாறு அனைவரும் மிகவும் நெருக்கமாகவே வாழ்ந்து வருகிறோம்.
இந்த சம்பவம் என்னை கடுமையாக பாதித்துள்ளது. இவர்களது இழப்புகளை என்னால் தாங்க முடியாதுள்ளது. உடன் பிறப்புகளை இழந்தது போன்ற வேதனையில் நான் உள்ளேன்.
தாக்குதல் நடந்த முதல் நாளில் இனி நியூஸிலாந்து வேண்டாம்… இலங்கைக்கே சென்றுவிடுவோம் என தீர்மானம் எடுக்குமளவுக்கு நான் வந்தேன். ஆனாலும் அதன் பின்னர் இந்த நாட்டின் அரசாங்கமும் மக்களும் எம் மீது காட்டுகின்ற அன்பும் எமக்கு வழங்குகின்ற ஆறுதலும் நம்பிக்கையைத் தருகின்றன. இங்கு தொடர்ந்தும் வாழ்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை என்ற நம்பிக்கையை தினம் தினம் அவர்கள் எமக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
Q இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நியூஸிலாந்து அரசாங்கம் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஆதரவாக நடந்து கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்தத் தாக்குதலின் பின்னரான நியூஸிலாந்து அரசாங்கத்தினதும் அந்நாட்டு மக்களினதும் செயற்பாடுகள் எம்மை 100 வீதம் திருப்திப்படுத்துவதாக உள்ளன. நாம் இதனால் மகிழ்ச்சியடைகிறோம்.
நியூஸிலாந்திடமிருந்து இலங்கை போன்ற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவோ சம்பவங்கள் நடந்தும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு அலட்சியமாகவும் பாரபட்சமாகவும் நடந்து கொண்டது என்பதை நாம் அறிவோம்.
நியூஸிலாந்தின் இந்த நகர்வு அதி விசேடமானது. இந்த மக்கள் அடுத்தவர்களின் உணர்வுகளை நன்கு மதிக்கத் தெரிந்தவர்கள். இந்தளவு தூரம் அன்பை வெளிப்படுத்துவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த தாக்குதலால் முழு நியூஸிலாந்துமே தலைகுனிந்து நிற்கிறது. அவர்கள் எமக்கு முன் மிகவும் வெட்கப்படுகிறார்கள்.
இதுவரை காலமும் எம்மோடு பெரிதாக நெருங்காத எமது அயலவர்கள் இன்று எமது வீடுகளுக்குள்ளேயே வந்து இருக்கிறார்கள். ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உதவி செய்கிறார்கள்.
தற்போது பாதிக்கப்பட்டோருக்கும் ஜனாஸா நல்லடக்கத்திற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்களுக்கும் தேவையான சகல உதவிகளையும் பாதுகாப்பையும் அவர்களே முன்வந்து வழங்குகிறார்கள். எமக்கு இப்போது எந்த வேலையும் இல்லை. எல்லாவற்றையும் அவர்களே முன்வந்து செய்கிறார்கள்.
இப் பகுதியில் வாழும் சீக்கியர்கள் கூட மிகவும் உதவியாக இருக்கிறார்கள். அதிகமான சீக்கியர்கள் இங்கு வாகன சாரதிகளாக இருக்கிறார்கள். ஜனாஸாக்களை தேவையான இடங்களுக்கு கொண்டு செல்ல தமது வாகனங்களை எந்த நேரத்திலும் எடுத்துவரத் தயார் எனக் கூறிச் சென்றார்கள்.
Q இந்த சம்பவத்தின் பின்னர் நியூஸிலாந்தில் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் நல்லபிப்பிராயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறதே?
உண்மைதான். இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தற்போது நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
நோன்பு காலங்களிலும் ஏனைய தொழுகை நேரங்களிலும் பணியிடங்களில் சலுகைகளை தருவார்கள். இதற்கு முன்னரும் இங்குள்ள மக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மதித்து நடந்த போதிலும் இந்தளவு தூரம் விழிப்புணர்வு இருக்கவில்லை.
தற்போது இந்த ஷஹீதுகளின் பெயரால் இஸ்லாம் பற்றியதொரு அலை இந்த நாட்டில் தோற்றம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது.
Q நியூஸிலாந்து தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பல பொய்யான செய்திகளும் பரவுகின்றனவே?
பேஸ் புக்கில் வரும் பல செய்திகள் எந்தளவு தூரம் அடிப்படையற்றவை, உண்மைக்குப் புறம்பானவை என இந்த சம்பவத்தின்போதுதான் நான் அறிந்து கொண்டேன். இங்கு எடுக்கப்படாத பல புகைப்படங்கள், பல வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார்கள். அவற்றை உடன் நிறுத்திக் கொள்ளுமாறு கேட்கிறேன்.
New Zealand gunman facing charges, but the terrorist who lead the attack in Kattankudi Karuna is a government recognized politician and a free man.
ReplyDelete