எதிர்க்கட்சியினருக்கு நேற்று பாராளுமன்றத்தில், தக்க பதிலடியினை வழங்கியுள்ளோம்
கடந்த அரசாங்கத்தில் இடம் பெற்ற ஜனநாயக மீறல் செயற்பாடுகளை அனைவரும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினருக்கு எந்த விடயங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டும் என்ற வரையறை கிடையாது. தற்போது மின்சார துண்டிப்பு விடயத்தையும் அரசியல் மயப்படுத்தி விட்டார்கள். அரசாங்கத்தை விமர்சிக்கும் ஒவ்வொரு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஏதாவது குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள்.
ஆனால் இவர்களே இன்று தேசிய நிதி மீதும். ஜனநாயகம் மீதும் அக்கறை கொண்டவர்களாக கருத்துரைக்கின்றார்கள். கடந்த அரசாங்கத்தில் இடம் பெற்ற ஜனநாயக மீறல் செயற்பாடுகளை அனைவரும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்திற்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. எங்களை குறை கூறிக் கொண்டு எதிர்தரப்பினரே தங்களின் கட்சிக்குள் காணப்படுகின்ற முரண்பாடுகளையும், பதவி போட்டித்தன்மையினையும் மூடி மறைக்கின்றார்கள். எதிர்க்கட்சியினருக்கு நேற்று பாராளுமன்றத்தில் தக்க பதிலடியினை வழங்கியுள்ளோம். அமைச்சர் கபீர் ஹஷிமின் அமைச்சுக்கு ஆளும் தரப்பினரே வாக்கெடுப்பினை கோரி 83 வாக்குகளினால் நிறைவேற்றியுள்ளோம். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கருத்துரைப்பது கிடையாது.
ஆளும் தரப்பினர் பாராளுமன்றத்திற்கு சமூகம் தராத நிலையிலே மாநகரம், மேல்மாகாண அபிவிருத்தி, உள்ளுராட்சி மற்றும் மேல்மாகாண சபை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டே எதிர்க்ட்சியினர் இவ்விரு அமைச்சுக்களின் மீதும் வாக்கெடுப்பினை கோரினார்கள். நாங்கள் சபைக்கு செல்லாமல் இருந்தமையும் ஒரு தவறாகும் எவ்வாறு இருப்பினும் இவ்விரு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு திருத்தத்துடன் சமர்ப்பிக்கப்பட்டு பெரும்பான்மையுடன் அங்கிகரிக்கப்படும். இச்சம்பவத்தினால் வரவு - செலவு திட்டத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது.
வரவு - செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் வாக்கெடுப்பிற்கு சுதந்திர கட்சியினர் கலந்துக்கொள்ளவில்லை. மூன்றாவது வாக்கெடுப்பில் இவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த காலங்களில் இடம் பெற்ற ஒரு சில சம்பவங்களினால் கூட்டணி பிளவுப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் ஒரு நல்லுறவு ஏற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment