அரசாங்க நிதியில் கட்டப்படும் பாடசாலை, கட்டடங்களுக்கு தனிநபர் பெயர் சூட்டக்கூடாது
அரச நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும் புதிய பாடசாலை கட்டடங்களுக்கு இனிமேல் தனி நபர்களின் பெயர்கள் வைக்கப்பட மாட்டாதென மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ் சாலி தெரிவித்தார்.
கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சோமவன்ச மற்றும் ஆளுநர் ஆகியோர் களுத்துறையிலுள்ள மூன்று பாடசாலைகளுக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
அல் – அய்ஹாலாஹேவிஸ்ஸா கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் தாவன ஆரப்பப் பாடசாலைகளுக்கான புதிய வகுப்பறைகளை திறந்து வைத்ததுடன் வெலிப்பென ரஹ்மானியா பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கினார். தாவன, ஆரப்பப் பாடசாலையின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில்,
அரசியல் நோக்கம் கருதியோ அல்லது சமூக அந்தஸ்துக்காகவோ தனிநபர்களின் பெயர்களை பாடசாலைகளில் நிர்மானிக்கப்படுகின்ற புதிய கட்டடங்களுக்கு இட அனுமதிக்க கூடாது என மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
ஆனாலும் கட்டடங்கள் நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படுமிடத்து அவர்களின் பெயரை அல்லது அவர்களின் அன்பிற்குரித்துடையவர்களின் ஞாபகார்த்தப் பெயரை இடலாம் எனவும் கூறினார்.ஜனாதிபதி, மாணவர்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தல்களை இல்லாதொழிப்பதற்காக முறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இச் செயற்பாட்டை மேலும் வினைத்திறனுள்ளதாக்குவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்குகளை திருத்தியமைக்குமாறும் கட்டளையிட்டுள்ளதாகவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.
இச்செயற்றிட்டத்தின் வெற்றிக்கு எம்மாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
நாம் மாணவர்களின் கல்விக்காக எங்களால் ஆன வசதி வாய்ப்புக்களை வழங்குவோம் எனவும் நீங்கள் அவர்களின் சிறந்த பெறுபேற்றின் ஊடாக கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக உழைக்க வேண்டுமெனவும் ஆளுநர் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பொதுப் பரீட்சைகளின் பெறுபேற்றின் அடிப்படையில் எமது கல்வித் தரமானது இரு பாடசாலைகளைத் தவிர ஏனையவை மூன்றாம் நிலைக்கு பின்னடைந்துள்ளமையானது கவலைக்கிடமான விடயம் எனவும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment