கத்னா (சுன்னத்) செய்தபோது 5 வயது குழந்தை மரணம் - மனிதப் படுகொலை என பெற்றோர் மீது குற்றச்சாட்டு
ஐந்து மாத ஆண் குழந்தைக்கு பெற்றோர் வீட்டில் மேற்கொண்ட கத்னா – விருத்தசேதனத்தின் போது ஏற்பட்ட தவறின் காரணமாக அக் குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை அக் குழந்தைக்கு இதயக் கோளாறு ஏற்பட்ட நிலையில் இத்தாலியிலுள்ள பொலொக்னா வைத்தியசாலைக்கு உலங்குவானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது. அன்றிரவு வைத்தியசாலையிலேயே குழந்தை உயிரிழந்தது.
கானா நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்படும் அக் குழந்தையின் பெற்றோருக்கு மனிதப் படுகொலையினை மேற்கொண்டார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணமான ரெக்கியோ எமாலியாவின் சட்டவாதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் பிரேத பரிசோதனை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ரோமில் இடம்பெற்ற கத்னா – விருத்தசேதனத்தின்போது அதிக இரத்தம் வெளியேறியதன் காரணமாக இரண்டு வயதுச் சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு வயதுச் சிறுவனின் இரட்டைச் சகோதரன் தீவிர சிகிச்சையினைத் தொடர்ந்து உயிர் பிழைத்தான். இவர்களுக்கான கத்னா சத்திர சிகிச்சை ரோமின் வடமேற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள மொன்டேரொண்டோ சபை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான அர்சி ஆகியவற்றால் அளிக்கப்பட்டுள்ள நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்டது.
லிபியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜை என நம்பப்படும் வைத்தியர் சிறுவனுக்கு அதிக இரத்தம் வெளியேறியதையடுத்து அவசர உதவியைக் கோரியதாக இத்தாலிய ஊடகங்கள் அவ்வேளையில் தெரிவித்தன. இரட்டைச் சகோதரனும் கத்னா சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு சென் அன்ரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான் எனினும் பின்னர் ரோமிலுள்ள ஜெமேலி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான்.
நைஜீரியாவை பூர்வீகமாகக் கொண்ட சிறுவனின் தாய் இத்தாலியில் புகலிடம் தேடும் பெண் என நம்பப்படுகின்றது. அவருக்கு மேலும் ஐந்து பிள்ளைகள் நைஜீரியாவில் உள்ளனர்.
குறித்த பெண் கத்தோலிக்கராக இருந்தபோதிலும் நைஜீரிய இஸ்லாமிய முறைப்படி குறித்த கத்னா – விருத்தசேதனத்தைச் செய்யுமாறு கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இத்தாலியின் ரோமிலுள்ள கத்தோலிக்க பெரும்பான்மையினரிடையே கத்னா – விருத்தசேதனம் செய்யும் வழக்கம் இல்லை. எனினும் குடியேற்றவாசிகளில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களாவர். அவர்கள் கலாசார மற்றும் மதக் காரணங்களுக்காக விருத்தசேதனம் செய்கின்றனர். வைத்தியசாலைகளில் இதனைச் செய்துகொள்வதில் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதற்கான வைத்தியசாலைக் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதும் சிறுவர்களுக்கு குறைந்தது நான்கு வயதாகும் வரை இதனைச் செய்ய முடியாது என வைத்தியர்கள் மறுப்பதும் இவ்வாறான சம்பவங்கள் நிகழக் காரணமாகின்றன.
எனினும் வருடமொன்றிற்கு 5,000 இற்கும் மேற்பட்ட விருத்தசேதனங்கள் இத்தாலியில் இடம்பெறுவதாகவும், அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி சட்டவிரோதமாக இடம்பெறுவதாகவும் சுகாதார தர்ம ஸ்தாபனமான அம்ஸி தெரிவித்துள்ளது.
இவ்வகை சத்திர சிகிச்சைக்கு இத்தாலியிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் 4,000 யூரோக்கள் வரை அறவிடப்படுகின்றன. எனினும் அதனையே கறுப்புச் சந்தையில் 20 தொடக்கம் 50 யூரோக்கள் வரையே அறவிடப்படுகின்றது.
இரகசியமாக விருத்தசேதனம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு கட்டுப்படியான கட்டணத்தினை விருத்தசேதனத்திற்காக அறவிடுமாறும், அதனை மேற்கொள்வதற்கான வயதெல்லையை குறைக்குமாறும் சுகாதார அதிகாரிகளிடம் இத்தாலியிலுள்ள வெளிநாட்டு வைத்தியர்கள் சங்கத்தின் ஸ்தாபகரான புஓட் அஓதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-Vidivelli
நல்லதே நடக்கட்டும்
ReplyDelete