சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்படும் மிகப்பெரிய கூட்டணி - ஜனாதிபதி வேட்பாளராக 4 பேர் தயார்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள பெரிய அரசியல் கூட்டணியை உருவாக்கி வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ள ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள கடந்த முறையை விட சிறப்பான மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கி வருகின்றோம்.
ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் இந்த கூட்டணியை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
இலங்கையின் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னர் உருவாக்கப்படும் இந்த பெரிய கூட்டணி தொடர்பான அறிவிப்பை மே மாதம் வெளியிடுவோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை தெரிவு செய்துள்ளதாக கூறினாலும் கோத்தபாய இதுவரை தான் வேட்பாளர் எனக் கூறவில்லை.
கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமாயின் ஆறு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும். அவர் இன்னும் அமெரிக்க குடியுரிமையை கைவிடவில்லை.
இப்படியான நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் அவர் எப்படி இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும். ராஜபக்ச குடும்பத்தில் நிலவும் அதிகார போட்டியை போலவே பொதுஜன பெரமுனவில் காணப்படும் பலவீனமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்னும் அவர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியவில்லை. ஆனால் எமது பெரிய கூட்டணியில் முக்கியமான மூன்று முதல் நான்கு பேர் இருக்கின்றனர்.
மக்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நாங்கள் பெற்றுக்கொடுப்போம் எனவும் சத்துர சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment