Header Ads



டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 4 பேர் குறித்து வெளியான மேலதிகத் தகவல்கள்

துபாயில் கைதாகிய மாகந்துர மதூஷின் நெருங்கிய சகா வான கஞ்சிபானை இம்ரான் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயிலிருந்து நேற்றுமுன்தினம் நாடுகடத்தப்பட்டிருந்த கஞ்சிபானை இம்ரான் உட்பட நால்வரை குற்றப் புலனாய்வு பொலிஸார் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

எப். இஷட் 507 துபாய் விமானத்தில் நேற்று அதிகாலை இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் கஞ்சிபானை இம்ரான் உட்பட இருவர் மீண்டும் மற்றுமொரு விமானத்தில் மாலைதீவுக்கு தப்பிச்செல்ல முயன்ற நிலையில் விமான நிலைய அதிகாரிகள் அவர்களை மடக்கிப்பிடித்து கைதுசெய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று முன்தினம் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் இவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில்,

நேற்றுமுன்தினம் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நால்வரும் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை 6.15 மணியளவில் வந்தடைந்தனர். கஞ்சிபானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் என்பவர் (வயது 34) 99/8, ஸ்ரீசத்தர்ம மாவத்தை, கொழும்பு 08 என்ற முகவரியில் வதிபவர் என்பதுடன்

இரண்டாவது நபர் ‘ஜங்கா’ என்றழைக்கப்படும் தும்பேதுர ஹேவா அனுஷ்க கௌசால் (வயது 37). இவர் வெலிகெதர தலல தெற்கு கந்தர என்ற முகவரியைச் சேர்ந்தவர்.

மூன்றாவது நபரான அமில சம்பத் சேபால ரத்னாயக்க (வயது 37). இவர் தென்கதலிய ரொடும்ப என்ற முகவரியைச் சேர்ந்தவர்.

நான்காவது நபர், அன்டர்சன் பெர்னாண்டஸ் (வயது 42). 227/4, மஹாவித்தியாலய மாவத்தை, கொழும்பு 13 என்ற முகவரியை வதிவிடமாகக் கொண்டவர்களாவர். இவர்களில் அன்டர்சன் பேர்னாண்டஸ் என்பவர் தமது தொழிலாக வாகன உதிரிப்பாக விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாரென விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.

அமில சம்பத் சேபால ரத்னாயக்க என்பவர் 2017 ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இலங்கையிலிருந்து துபாய்க்கு பயணமாகியுள்ளார். இவர் துபாயில் வதிவிட விசாவைக் கொண்டுள்ளார். 2017 ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி இவர் அதனைப் பெற்றுக்கொண்டுள்ளார். அவர் துபாயிலிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் பணிபுரிந்துள்ளாரென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அவர் 2005 மே மாதம் 08 ஆம் திகதி ஊறுபொக்க பொலிஸ் பிரிவில் ஒருவரை படுகொலை செய்து கொள்ளையடித்தவர் என குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கொன்றுக்காக தேடப்படுபவர்.

‘ஜங்கா’ என அழைக்கப்படும் தும்பேதுர ஹேவா அனுஷ்க கௌசால் என்ற சந்தேகநபர் இலங்கையிலிருந்து 2019 பெப்ரவரி 03 ஆம் திகதி துபாய்க்கு பயணமாகியுள்ளார். இவர் 2017 நவம்பர் மாதத்தில் துபாய்க்கான வதிவிட விசாவைப் பெற்றுக்கொண்டுள்ளார். இதற்கிணங்க அவர் ஏற்கனவே பல தடவைகள் துபாய்க்கு சென்று திரும்பியவர் என்பது தெரியவருகிறது. கந்தர பிரதேசத்தை வதிவிடமாகக்கொண்ட இவர், கந்தர பொலிஸ் பிரிவிலுள்ள தலல்ல பிரதேசத்தில் உணவகமொன்றை நடத்திவந்துள்ளார். கடந்த பெப்ரவரி 08 ஆம் திகதி ‘ஜங்கா’ என்ற இந்த நபர் கந்தர பொலிஸாரின் விசாரணைக்காக தேடப்பட்டுவந்தவர். இதன்போது அவரது வீடு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, இராணுவத்தினர் பயன்படுத்தும் சீருடைகள் ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், இரண்டு மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

‘ஜங்கா’ என்கின்ற நபரது தந்தையின் சகோதரரும் மற்றுமொரு உறவுமுறை சகோதரரும் இதன்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை பொலிஸார் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்கள் ஏப்ரல் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

‘ஜங்கா’ என்ற நபரும் மேற்படி கந்தர பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் நிலையில் இவருக்கெதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

2000 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி மாத்தறை பொலிஸ் பிரிவில் நபரொருவரை கத்தியால் குத்திக் கொலைசெய்து அவரது சொத்துக்களை அபகரித்த குற்றத்திற்காக ‘ஜங்கா’ தேடப்பட்டு வருபவர். அவர் ஒரு அமைப்பு ரீதியான குற்றவாளியென்றும் மாகந்துர மதுஷின் சகா என்றும் அவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளாரென்றும் விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.

கஞ்சிபானை இம்ரான் என்ற மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் என்பவர் இலங்கையிலிருந்து 2015 மார்ச் 28 ஆம் திகதி துபாய்க்கு பயணமாகியுள்ளார். இவரும் 2016 இல் துபாய் நாட்டின் வதிவிட விசாவைப் பெற்றுள்ளவர். இவர் கையடக்கத் தொலைபேசி உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் இலங்கையில் வசித்த காலங்களிலும் துபாயிலிருந்துகொண்டும் அமைப்பு ரீதியான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். படுகொலைகள், கப்பம் பெறுதல் கொள்ளைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களை துபாயின் மறைந்திருந்தவாறே வழிநடத்தி வந்துள்ளாரென்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவர் மிக மோசமான பல்வேறு குற்றச் செயல்களுக்காக பொலிஸாரால் தேடப்படுபவர். பொரளை, கொட்டா வீதியில் பிரசாத் குமார அசித்த என்பவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம், 2018 மார்ச் 27 ஆம் திகதி மாளிகாவத்தையைச் சேர்ந்த அலாம் இக்பால், தாவூல் ஹமீத் மொஹமட் இப்ராஸ் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம், 2018 மார்ச் 19 ஆம் திகதி கொழும்பு ஆமர் வீதி மெசஞ்ஜர் மாவத்தையில் என்ரனி ராஜ் என்பவரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலைசெய்த சம்பவம், தொடர்பில் தேடப்பட்டுவந்துள்ளார்..

2018 ஜூலை மாதம் 01 ஆம் திகதி கொழும்பு ஜெம்பட்டா வீதியில் செல்லையா செல்வராஜ், எலிசபெத் பெரேரா ஆகியோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுகொலைசெய்த குற்றச்சாட்டு,

2018 ஆகஸ்ட் 31 ஆம் திகதி மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளி வாசல் சந்தியில் மொஹமட் ரஹீம் அத்துல் ரவூப் ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலைசெய்த சம்பவம் 2018 செப்டம்பர் மாளிகாவத்தை லக்ஷித வீடமைப்புத் திட்டத்திற்கருகில் அஸ்மீர் என்ற நபரை படுகொலைசெய்த குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. 2018.10.20 ஆம் திகதி மாளிகாவத்தை ஜும்ஆ மஜ்லிஸ் பள்ளிவாசல் வீதியில் மொஹமட் நிஸாம்டீன் மொஹமட் அத்மீன் ஆகியோரை படுகொலைசெய்த சம்பவம் தொடர்பிலும் 2018 நவம்பர் 07 ஆம திகதி கிராண்ட்பாஸ் பராக்கிரம வீதியில் எம்.ஏ. நிப்ரஸ் என்பவரை படுகொலை செய்தமை 2018 டிசம்பர் 10 ஆம் திகதி மோதரையில் வைத்து சிலர் மீது துக்காச்சூடு நடத்தி அறுவரை படுகாயங்களுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலும் இவர் தேடப்படுபவர்.

ஜெம்பாட்டா வீதியில் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில் கந்தன ஆரச்சிகே மல்கம் பெரேராவை படுகொலை செய்தமை 2019 ஜனவரி 20 ஆம் திகதி ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் அன்டன் மைக்கல் நிஸாந்தன் குறூஸ் ஆகியோரை படுகொலை செய்தமை 2019 ஜனவரி 19 கொட்டாஞ்சேனை மைத்திரி போதிராஜ மாவத்தையில் வைத்து ஆஷா பாரி என்ற கஞ்சிபானை இம்ரானின் ஆசைநாயகியான பெண்ணை படுகொலைசெய்தமை ஆகிய குற்றங்கள் இவர் துபாயிலிருந்துகொண்டு இலங்கையில் மேற்கொண்ட பாரிய குற்றங்களாகும். மேலும் பல வழக்குகளில் அவர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. அவர் நேற்று குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைசெய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து கஞ்சிபானை இம்ரான் என்ற இந்த நபர் போலி கடவுச்சீட்டு ஒன்றை வைத்தே துபாய்க்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அது தொடர்பிலும் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுள் கஞ்சிபானை இம்ரான், அமில சம்பத் ஆகியோர் நேற்று கட்டுநாயக்கவை வந்தடைந்த பின் மாலைதீவுக்குச் செல்லவிருந்த விமானத்தில் தப்பிச்செல்ல முயன்றனர். விசாரணைகளை மேற்கொண்டிருந்த அதிகாரிகளின் கவனத்தை திசைதிருப்பி அவர்கள் மாலைதீவு செல்வதற்காக தயாராகவிருந்தனர். எனினும் எமது அதிகாரிகள் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரினரிடம் கஞ்சிபானை இம்ரான் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளார்.

அனுஷ்க கௌசால் ‘ஜங்கா’ என்பவரையும் அமில சம்பந்த என்பவரையும் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தனர். அன்டர்சன் பேர்னாண்டஸ் என்பவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின் அவர் எந்த நீதிமன்றத்தில் ஆஜராவார் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

இதேவேளை நேற்று முன்தினம் இரு சந்தேக நபர்கள் துபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் காலை இவர்களை குற்றப் புலனாய்வு பொலிஸார் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்து விசாரணைகளுக்குட்படுத்த வருகின்றனர்.

சங்கீத் நதிமால் பெரேரா, லலித் குமார ஆகிய இருவருமே நேற்று முன்தினம் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர் இவர்களில் சிறைச்சாலை உத்தியோகத்தரான லலித் குமார கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்களில் லலித் குமார என்பவர் மாகந்துர மதுஷ்டம் நெருங்கிய தொடர்புடையவராவார். சிறு வயதிலிருந்தே இவர்கள் இருவருக்குமிடையில் நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. லலித் குமாரவின் தாய் குடும்ப சுகாதார அதிகாரியாக செயற்பட்டவர். மதூஷ் என்பவர் பிறந்தபோது அவரது தாயாருக்கு மகப்பேற்று மருத்துவத்தை இவரே மேற்கொண்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. இந்த தொடர்புகளே தற்போது நீடித்துள்ளன.

2015 பெப்ரவரி 20 ஆம் திகதி களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் எத்தனமடுல்ல எனுமிடத்தில் சிறைச்சாலை பஸ் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடையவர். இதில் ஏழு பேர் படுகொலைசெய்யப்பட்டிருந்ததுடன் மேலும் ஐந்து பேர் படுகாயங்களுக்குள்ளாகியிருந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டை ‘அங்கொட லொக்கா’ என்ற மதுஷின் நெருங்கிய சகாவே மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பல சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டுள்ள இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.