கடலில் மிதந்த 33 பெரிய, பொதிகளை கைப்பற்றியது கடற்படை
உடப்பு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 33 பெரிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.
இந்த பொதிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கைப்பற்றப்பட்ட பொதிகள் மீட்கப்பட்டு, கடற்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன .
இதன்போது, குறித்த பொதிகளிலிருந்து ஒரு தொகை புகையிலை கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.
சுமார் 33 பொதிகளில் பொதியிடப்பட்ட, சுமார் 1232.5 கிலோகிராம் எடையுடைய புகையிலை மீட்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வருவதற்காக குறித்த புகையிலை பொதியிடப்பட்டு, கடலில் மிதக்கவிடப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட புகையிலை பொதிகள், புத்தளம் - சின்னபாடு சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த சுமார் 7000 கிலோகிராம் புகையிலை இந்த ஆண்டு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்படுகின்ற புகையிலை பெரும்பாலும் இந்தியாவின் தமிழகத்திலிருந்தே கடத்தப்படுகின்றமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.
எனினும், இன்றைய தினம் மீட்கப்பட்ட பொதிகள் எங்கிருந்து மிதக்கவிடப்பட்டுள்ளன என்பது தொடர்பான எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, இன்றைய தினம் மீட்கப்பட்ட புகையிலை பொதிகளும், இந்தியாவிலிருந்து கடலில் மிதக்கவிடப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மற்றும் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment