தமிழ்த் கூட்டமைப்பின் ஊடாக, போட்டியிட விரும்புவோருக்கு DNA பரிசோதனை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடவிரும்புவோருக்கு டீ.என்.ஏ.பரிசோதனை தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனையில் பொங்கல் விழா இன்று -02- காலை நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வௌயிட்டுள்ள அவர்,
புதிய அரசியல் யாப்பினை குழப்பும் வகையில் செயற்படும் மகிந்தவுடன் எந்த வகையிலும் கைகோர்த்து செயற்படமுடியாது.
தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கோத்தபாய நாடங்களை நடாத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியதுடன் அந்த நாடகத்தினை தமிழ் மக்கள் நம்பமாட்டர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 26ஆம் திகதி அரசியல் சதியொன்று செய்யப்பட்டது. ஜனநாயகத்திற்கு மாறாகவும் யாப்பு விதிகளுக்கு மாறாகவும் அரசியல் சட்ட ஆட்சிக்கு மாறாகவும் திடீரென புதிய பிரதமர் நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்த வேளையில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜனநாயகத்திற்கு மாறாக எந்த சலுகைகளையோ பதவிகளையோ பெற்றுக்கொள்வதில்லை.
பணத்திற்கு விலைபோவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது.
எமது கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் உறுதியான நிலைப்பாட்டிலிருந்தன.
இந்த இரு கட்சிகளினதும் உறுதிப்பாட்டின் காரணமாக மனோகணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு முன்னணியும் உறுதியான நிலையிலிருந்தது.
ஒரு சிலர் தளம்பியிருந்தனர். முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் என்பன இவ்விடயத்தில் ஒன்றாக இருந்தன. இருந்தபோதும் எமது கட்சியிலிருந்த ஒருவர் பதவிக்காக சென்று தன்னுடைய மரியாதையை இழந்துவிட்டார்.
இவர் கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச அவர்களின் காட்டாட்சியைப்பற்றி மிகவும் ஆக்ரோசமாகவும் கடுமையாகவும் விமர்சித்து வாக்குகளை பெற்றுக் கொண்டவராவார்.
ஆனால் இதையெல்லாம் மறந்து அவர் பதவிக்காக சென்றதால் நூறுவீதம் கட்டுக்கோப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்று சிதைந்துவிட்டது.
எங்களைப் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகள் மக்கள் ஆணையை பெற்ற கட்சியிலிருந்து எதுவந்தாலும் அதனை அனுபவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அதைவிடுத்து பதவிக்கோ பணத்திற்கோ நாங்கள் சோரம் போனால் எங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுகின்றவர்களாகவே இருக்க முடியும்.
அரசியலில் நேற்று ஒரு கொள்கை, இன்றொரு கொள்கை, நாளையொரு கொள்கை என்று எங்களுடைய சுயஇலாபத்திற்காக எதையும் மாற்றிக்கொள்ள முடியாது.
அவ்வாறு மாற்றுகின்றவர்களுக்கு மக்கள் சரியான பாடங்களை புகட்ட வேண்டும். நாங்கள் உறுதியான தலைமைத்துவத்தின் கீழ் செல்லவேண்டியவர்களாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக எந்த நாடகத்தை நடத்தினாலும் அதனை விளங்கிக் கொள்ளக்கூடிய அனுபவம் எங்களிடம் இருக்கின்றது.
எங்களுடைய போராட்டத்தை சிதைத்து இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்தவர்களுக்கு பக்கபலமாக நின்று பதவிகளையும் சலுகைகளையும் பெறுகின்ற செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற சூடு சொரணையுள்ள எவரும் ஈடுபடமாட்டார்கள்.
அப்படி யெற்படுபவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் சென்று வாக்குகளை கோருவதற்கு அருகதையற்றவர்களாவர்.
இனிவரும் காலங்களில் நினைத்தவாறு கட்சிவிட்டு கட்சி தாவுகின்ற எந்தவொரு வேட்பாளர்களையும் நாங்கள் பட்டியலில் நியமிக்காது இருப்பதற்கு ஏற்றவகையில் டீ.என்.ஏ.யில் வேட்பாளராக நிறுத்துவதாக இருந்தால் அவர்களுக்கு டீ.என்.ஏ.பரிசோதானை செய்யவேண்டிய நிலமையிருக்கின்றது.
அந்த டீ.என்.ஏ.பரிசோதனையில் பாயிகின்ற குணங்கள்,பறக்கின்ற குணங்கள்,சலுகைகளுக்கு இரையாகின்ற குணங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து கட்சியில் இணைத்துக்கொண்டுசெல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
Post a Comment