கொக்கெய்ன் பயன்படுத்தும் அரசியல்வாதிகளின், விபரங்களை பெற சபாநாயகர் தயாரில்லை - திங்கள் ரணிலிடம் கையளிப்பு
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் கொக்கெய்ன் பயன்டுத்துவோராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமையன்று பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று ரஞ்சன் ராமநாயக்க, அவை தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையிலான விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் வழங்கினார்.
இதன்போது அவர் 24 பேரின் பெயர்களை வாய்மூலமாக குறிப்பிட்டுள்ளார்.எனினும் இந்த பெயர்களை வெளியிட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மறுத்துவிட்டார்.
இந்த பெயர் பட்டியல் தேசிய அபாய ஔடத சபையின் முன்னாள் தலைவர் நிலங்க சமரசிங்கவிடமும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் மரண அச்சுறுத்தல் காரணமாக தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள அவர் இந்த பெயர்களை வெளியிட மறுத்து வருகிறார் என்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தாம் இந்த பட்டியலை சபாநாயகரிடம் கையளிக்க தயாராக இருக்கின்ற போதும் நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதனால் அதனை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் விரும்பவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment