கோவணத்துடன் ஓடிய மக்களிடம், ஆவணத்தை கேட்பது வேடிக்கையானது
கோவணத்துடன் ஓடிய மக்களிடம் வடமாகாண ஆளுநர்ஆவணத்தை கேட்பது வேடிக்கையானதென்றும் கேப்பாப்புலவு மக்கள் எவரும் ஆவணங்கள் இல்லாமல், தங்கள் காணிகளுக்காக போராட்டம் நடத்தவில்லை எனவும் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ்.ஊடக மையத்தில் நேற்றுக் காலை ஊ டகவியலாளர்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கேப்பாப்புலவு மக்கள் தொடர்பாக கூறியிருந்த கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
2012ஆம் ஆண்டு 09ஆம் மாதம் 25ஆம் திகதிய ஜெனீவா தீர்மானத்திற்கமைய கேப்பாப்புலவு மக்கள் அவர்களது சொந்த விருப்பத்திற்கு மாறாக கேப்பாப்புலவுக்கருகிலுள்ள சீனியாமோட்டை கிராமத்தில் வலிந்து குடியேற்றப்பட்டனர். அது தற்காலிகமான குடியேற்றமென அப்போது கூறப்பட்டது.
அப்போதே கேப்பாப்புலவு மற்றும், பிலக்குடியிருப்பு மக்கள் தம்மை சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுமாறு கோரி தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தனர். மேலும் 1887ஆம் ஆண்டு தொடக்கம் கேப்பாப்புலவு மற்றும் பிலக்குடியிருப்பு கிராமங்களில் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தனர். அந்தக் கிராமங்கள் பழமையான தமிழ் கிராமங்கள் என்பதற்கும் இன்றும் சான்றுகள் உள்ளன.
2009ஆம் ஆண்டு மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறினர். 2012ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் ஆரம்பமானது முதல் இன்றுவரை இம்மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். வடக்கு ஆளுநர் கூறுவதைபோல் இன்று மாற்று காணிகளை இவர்கள் கேட்கவில்லை. மாற்றுக் காணிகள் தேவை என்றால் எப்போதோ பெற்றிருப்பர். ஆவணங்கள் இல்லையெனவடக்கு ஆளுநர் கூறுவது விந்தையாக இருக்கின்றது. 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில் கட்டிய கோவணமும் இல்லாமல் சென்ற மக்களிடம் ஆவணங்களை கேட்க முடியுமா? ஆனாலும் சிலர் ஆவணங்களை வைத்துள்ளனர். மேலும் பிரதேச செயலக தகவல்களின் படி 59.5 ஏக்கர் காணிகள் மக்களுக்கு உரித்தானதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்தக் காணிகளை உரியவர்களிடம் பெற்றுக் கொடுக்கவேண்டும்.இதைவிடுத்து கடைசியாக வந்து மக்களின் காணிகளில் குந்தியிருப்போருக்காக ஆளுநர் பேச நினைப் பது அப்பட்டமான தவறு.
பங்களாக்களிலிருந்து இவர்கள் போராடவில்லை. வெயில், மழை, பனி,குளிர்களுக்கு மத்தியிலே காணி மீட்புக்கான போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் துாண்டுதலில் மக்கள் போராடுவதாக ஆளுநர் கூறியதால் இவ்வாறான தமிழ் ஆளுநர் வேண்டுமா என்று தமிழர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment