ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்காதீர்கள் - ரணிலின் மனைவியும், ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமரின் மனைவி முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஜனாதிபதியினால் வழங்கப்படும் பொது மன்னிப்பை தவறாக வழங்க வேண்டாம்” என்ற தலைப்பில், தனி நபர்கள் மற்றும் 252 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் கையெழுத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கையெழுத்திட்டு, தனது கோரிக்கை முன்வைத்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு 19 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் அந்த தண்டனையை ஆறு வருடங்களில் கழித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
ஞானசார தேரர், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், ஜனாதிபதி அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என பௌத்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த கோரிக்கையின் அடிப்படையில், ஞானசார தேரர், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
Post a Comment